Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

ஆதி பிரான், பொலிந்து நின்ற பிரான்

Place :

ஆழ்வார் திருநகரி

Taluk :

திருச்செந்தூர்

District :

தூத்துக்குடி

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

ஆதிநாதன்

Procession On God :

பொலிந்து நின்ற பிரான்

Mother / Goddess Name :

ஆதிநாத வல்லி, குருகூர் வல்லி

Temple Tree :

உறங்காபுளி

Tirukkulam / River :

பிரம்மதீர்த்தம், திருச்சங்கண்ணித் துறை

Agamam :

Worship Time :

விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம்திருப்பவுத்திர உற்சவமும், உறியடி உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், பெருமாள், ஆழ்வார், ஸ்ரீ வைகுண்டம் செல்லுதல் திருவிழாவும்,சித்திரைத் திருவிழாவும், சித்திராப் பௌர்ணமி திருவிழாவும், வைகாசிப் பெருவிழாவும், கருட சேவையும், மாசி உற்சவமும், பங்குனி உற்சவமும், வைகுண்ட ஏகாதசி விழாவும் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

History :

ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார். பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம்ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால். அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் கோயில், அருள்மிகு வேங்கடவாணன் திருக்கோயில், அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில்

Summary :

இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம்,குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால்ஆதிசேத்ரம் என்றும், நம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரிஎன்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் இத்திருக்கோயில் 89-வது திருத்தலமாகும். நவத்திருப்பதிகளில் இத்தலம் 5-வது தலமாகும். இத்தலம் குரு தலமாய் விளங்குகிறது. மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

Period / Ruler :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர்

Inscription / Copper :

Murals :

கோபுரங்களின் விதானங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

Sculptures :

இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.

Temple Structure :

திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார். பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது. கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

Location :

அருள்மிகு ஆதிநாதன் கோயில், ஆழ்வார் திருநகரி-628 612, தூத்துக்குடி

Phone :

04639-273607

Website :

Email :

Temple Opening Time :

காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை

Way :

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம்

Nearby Railway Station :

ஆழ்வார் திருநகரி

Nearby Airport :

மதுரை

Accommodation :

தூத்துக்குடி மாவட்ட விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:53 IST