31-40

31. மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.

நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி

32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.

பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்

33. மருதம்
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.

வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன்

34. மருதம்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.

வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன்

35. மருதம்
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு,
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?

''வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்'' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர்

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.

தோழி, ''கடிது வருவர்'' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

38. குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர்

39. பாலை
''வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்'' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.

பிரிவிடை ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்கு, ''யாங்ஙனம் ஆற்றுவேன்?'' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார்

40. குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், ''பிரிவர்'' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார்