111-120

111. குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
''வென்றி நெடு வேள்'' என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன்.

112. குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார்

113. மருதம்
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன்

114. நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,

இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன்

115. குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.

உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர்

116. குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன்.

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

118. நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
''வருவீர் உளீரோ?'' எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.

வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார்

119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார்

120. குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.

அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர்