231-240

231. மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

232. பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை

233. முல்லை
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.

பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன்

234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.

பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

235. பாலை
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.

வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன்.

236. நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.

வரைவிடை வைத்துப் பிரிவான். ''இவள் வேறு படாமை ஆற்றுவி'' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார்.

237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?

பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லையார்

238. மருதம்
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.

தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன்

239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.

சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன்

240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கொல்லன் அழிசி.