261-270

261. குறிஞ்சி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, ''ஐ'' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

263. குறிஞ்சி
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
''பேஎய்க் கொளீஇயள்'' இவள் எனப்படுதல்
நோதக்கன்றே-தோழி!-மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.

''அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?''எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன்

264.குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.

''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், ''ஆற்றுவல்'' என்றது. - கபிலர்

265. குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

வரையாது பிரிந்த இடத்து, ''அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்'' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை

266. பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-

வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

267. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே.

''மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்'' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார்

268. நெய்தல்
''சேறிரோ?'' எனச் செப்பலும் ஆற்றாம்;
''வருவிரோ? என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன்

269. நெய்தல்
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார்

270. முல்லை
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான்.