321-330

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.

தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

322. குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன்

323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,

வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார்

324. நெய்தல
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரா வாராவரைவல்'' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன்

325. நெய்தல்
''சேறும் சேறும்'' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, ''மருங்கு அற்று
மன்னிக் கழிக'' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.

பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார்

326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே,

சிறைப்புறம்.

327. குறிஞ்சி
''நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று'' என உணர்ந்த
குன்ற நாடன்தன்னினும், நன்றும்
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், ''இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்'' என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.

கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

வரைவிடை வேறுபடும் கிழத்தியை, ''அவர் வரையும் நாள் அணித்து'' எனவும்,''அலர் அஞ்சல்'' எனவும் கூறியது. - பரணர்

329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, ''யான்'' ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்

330. மருதம்
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றன்