381-390

381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது.

382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்
கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?

பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று; வம்பு'' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன்

383. பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
''இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன்

384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.

''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார்

385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.

வேற்று வரைவு மாற்றியது. - கபிலர்

386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார்

387. முல்லை
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார்

388. குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.

தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார்

389. குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை-
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
''நன்றோ மகனே?'' என்றனென்;
''நன்றே போலும்'' என்று உரைத்தோனே.

தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன்

390. பாலை
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன்