2.4 இலக்கிய நயம்

இராமப்பய்யன் அம்மானை மூலம் மதுரை நாயக்கர் வரலாற்றையும் எழுபத்திரண்டு பாளையக்காரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் அக்காலத்துச் சமுதாய வாழ்க்கையையும் மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் அரசியல் பொருளாதார நிலைமைகளையும் அறியமுடிகிறது. போருக்குச் செல்லும் முன் ஆலயம் சென்று வழிபடுதல், யாகம் செய்து பிளவு உண்டாக்கல், போரில் பிடிபட்டவர்களைச் சித்திரவதை செய்தல், மன்னன் இறந்தவுடன் அரசியர் உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களை இக்கதைப் பாடல் மூலம் அறியலாம். வரலாற்றுக் குறிப்புகளடங்கிய நூலாக அம்மானை இருந்தாலும் இலக்கிய நயங்கள் பலவற்றைக் கொண்டதாகவும் இந்நூல் அமைந்துள்ளது, இந்நூலில் காணப்படும் சொல்லாட்சி, நடை, சொற்றொடர் அழகு, எதுகை மோனை, வருணனை, பழமொழிகள், உவமைகள் ஆகியவை கதைப் பாடலுக்குரிய அமைப்பிலிருந்து இராமப்பய்யன் அம்மானை விலகிச் செல்லவில்லை என்பதனைக் காட்டுகிறது, மிகைப்படக் கூறல், திரும்பக் கூறல் பண்பும் இதில் இடம்பெற்றுள்ளது. சில சான்றுகளைக் காணலாம்.

2.4.1 பழமொழிகள்

1) சதுரகிரி பருவதத்தைத் தான் பாத்து நாய் குலைத்தால் சேதமுண்டோ?

‘மலையைப் பாத்து நாய் குரைத்தால் அதை அசைக்க முடியுமோ’ என்பது இதன் பொருள். ‘சதுரகிரி பருவதம்’ என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிகரத்திற்குப் பெயர். இப்பழமொழி இன்றும் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வழக்கிலுள்ளது. ‘மலையைப் பார்த்து நாய் குலைத்தால்’ என்றோ ‘சூரியனைப் பாத்து நாய் குலைத்தால்’ என்றோ வழங்குகின்றது. இரண்டிற்கும் பொருள் ஒன்றேயாகும்.

2.4.2 உவமைகள்

1) எறிந்து விட்ட பம்பரம்போல் இங்கே நீ ஓடிவந்தாய்
2) தேக்கிலையில் நீரதுபோல்
3) கோடிக்குறுவெள்ளம் கொண்டு வந்து விட்டாற்போல் இந்தப் பெருஞ்சேனை வெள்ளம் எங்கேயிருந்ததய்யா?

இவைதவிர, போருக்குச் செல்லும் முன் பூணும் அணிவகைகள், சேதுக் கரையோரம் காணப்படும் மீன்வகைகள் ஆகியவை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இராமப்பய்யன் அம்மானை சிறந்த வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்வதோடு இலக்கிய நயம் பெற்றும் விளங்குகின்றது என்பதைச் சில சான்றுகள் கொண்டு அறிந்தோம். அடுத்து ‘தேசிங்குராசன்’ கதைப்பாடலைக் காணலாம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
வரலாற்றுக் கதைப் பாடல் - விளக்கம் தருக.
2.
இராமப்பய்யன் அம்மானை - எந்தக் காலகட்டத்து வரலாற்றைச் சுட்டுகின்றது?
3.
இராமப்பய்யன் அம்மானை கதைப்பாடலில் இடம்பெற்றுள்ள எதிர்த்தலைவன் யார் ?
4.
இராமப்பய்யன் அம்மானை கதைப்பாடல், வரலாற்றிலிருந்து வேறுபடும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
5.
குமாரன், மதியாரழகன் என்பவர்கள் யார்? அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன?