3.8 தொகுப்புரை

சமூகச் சிக்கல்களான கலப்பு மணம், சொத்துரிமை, சாதிக் கட்டுப்பாட்டை மீறல், பெண்ணுக்குச் சொத்துரிமை இன்மை ஆகிய அடிக் கருத்துக்களையே பெரும்பாலான சமூகக் கதைப்பாடல்கள் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. இத்தகைய பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டு கதைப்பாடல்கள் எழுந்துள்ள காலச் சூழல் தமிழகத்தில் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. இச்சூழலில் தங்கள் எதிர்ப்பைக் காட்டிய கதைப்பாடலின் நாயகன், நாயகியர் சாதி காரணமாகவோ, சொத்துரிமை காரணமாகவோ, பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவோ, தங்கள் சாதியினராலோ அவர்களது உறவினர்களாலோ கொல்லப்பட்டு விடுகின்றனர். என்னென்ன காரணங்களுக்காக யாரால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது கதைத்தலைவர், கதைத் தலைவியர் என்ற தலைப்பின் கீழ் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலைவன் தலைவியர் பின்வந்த சமுதாயத்தினரால் தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். பாடப் பகுதியில் விளக்கப் பெற்றுள்ள கதைப்பாடல்களுள் முத்துப்பட்டன் கதைப்பாடல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இக்கதை உண்மையா, கற்பனையா, எங்கு நடந்தது என்பனவும், அதற்குரிய காலம் இடம், வரலாறு மற்றும் இலக்கியச் சான்றுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் இக்கதைகளின் வாயிலாக அறிய வரும் தமிழ்ச் சமுதாயத்தின் சில பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

 

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சொத்துரிமையை மையப்படுத்தி எழுந்த கதைப்பாடல் எது ? விளக்குக.
2.
சாதிக்கட்டுப்பாட்டை மீறியவர்களுள் முதன்மையானவர்கள் யார்?
3.
முத்துப்பட்டன் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குரிய காரணம் என்ன?
4.
நல்லதங்காள் எதற்காக அண்ணன் வீடு செல்கின்றாள்?
5.
சமூகக் கதைப்பாடல்களின் கதை முடிவு எவ்வாறு அமைந்துள்ளது?
6.
பட்டவராயன் கோயில் யாரோடு தொடர்புடையது?
7.
மகட்கொடை அல்லது சீதனம் என்பதன் பொருள் என்ன?
8.
பட்டவராயன் தோன்றிய ஊர் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் யாது?