|
விடுகதைகள்
பெரும்பாலும் பாடல் வடிவில் காணப்படுகின்றன.
எதுகை மோனையுடன் பாடல் வடிவில்
இவை
அமைந்திருந்தாலும்
இவை பாடுவதற்கு ஏற்றவையாக
இருப்பதில்லை. சொல்வதற்கு
ஏற்றவையாக இருக்கும். உரைநடை
வடிவிலும் விடுகதைகள் உள்ளன.
விடுகதைகளை
உண்மை விடுகதைகள் (True Riddles), கதை
(அடிப்படையிலான) விடுகதைகள் (Story Riddles), கணக்கு
விடுகதைகள் (Arithmetic Riddles), எழுத்திலக்கிய விடுகதைகள்
(Literary Riddles) என்று நான்காகப் பிரித்துக் காணலாம்.
2.2.1
உண்மை விடுகதைகள் (True Riddles)
விடுவிக்கப்படும் விடை ஒரு சில சொற்களாக அமைவதும், கதையாகவோ கணக்காகவோ
அமையாததுமான விடுகதைகளை உண்மை விடுகதைகள் எனலாம். இவ்வகை விடுகதைகளே
உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் காணப்படுகின்றன. இவ்வகை விடுகதைகள்
பிற விடுகதை வகைகளை விட எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
எனவேதான் இதனை உண்மை விடுகதைகள் என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர் போலும்.
(இவ் வகை விடுகதைகள் மட்டுமே உண்மையானவை, ஏனையவை போலிகள் என்றோ உண்மையை
அடிப்படையாகக் கொண்ட விடுகதைகள் என்றோ தவறாகப் பொருள் கொண்டுவிடாதீர்கள்.
பிற விடுகதை வகைகளிலிருந்து வேறுபடுத்திச் சுட்டுவதற்காக ‘உண்மை விடுகதைகள்’
என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டது.) இவ்வகை விடுகதைகளுக்குச் சில
சான்றுகள் காணலாம்.
|
சான்று-1 |
:
பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது-அது என்ன? |
விடை |
:
பாம்பு |
|
’வயிற்றாலே
போகிறது’ என்ற தொடர் இரு பொருள் தருகிறது. பொதுவாக இச்சொல் பேச்சுவழக்கில்
’பேதி’ (Diarrhoea) என்ற பொருளையே தரும். எனவே இந்த விடுகதையைக் கேட்டும்
ஒருவர் ’பிறந்தது முதல் தொடர்ந்து பேதி ஆகுமா? அப்படி ஆனால் ஒரு மனிதரால்
பிழைக்க முடியுமா? என்று சிந்திப்பார். ஆனால் அத்தொடருக்கு மற்றொரு
பொருள் ’வயிற்றால் (ஊர்ந்து) செல்லுதல்’ என்பதாகும். இப்பொருளைச் சிந்தித்தால்
மட்டுமே விடையைக் கூறமுடியும். இவ்வாறு பிற விடுகதைகளையும் சிந்தித்து
அறிக. |
சான்று-2 |
: |
நாலு மூல சதுக்கம்
அம்பது பேரு அடக்கம் - அது என்ன?
|
விடை |
: |
தீப்பெட்டி.
|
சான்று-3 |
: |
களுத்துண்டு தலயில்ல
கையுண்டு உடலிருக்கு
காலில்ல - அது என்ன?
|
விடை |
: |
சட்டை
|
சான்று-4 |
: |
ஆழக்குழி தோண்டி
அதுல ஒரு முட்ட போட்டு
அண்ணாந்து பாத்தா
தொண்ணூறு முட்ட - அது என்ன?
|
விடை |
: |
தேங்காய்
|
சான்று-5 |
: |
ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபங் கட்டி
ஒருவர் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம் - அது என்ன?
|
விடை |
: |
தேன் கூடு
|
சான்று-6 |
: |
எட்டாத ராணியாம்
இரவில் வருவாள்
பகலில் மறைவாள் - அது யார்?
|
விடை |
: |
நிலா
|
சான்று-7 |
: |
ஆனை அசைந்து வர
அருமிளகு சிந்தி வர
கொத்தளத்துப் பெண்களெல்லாம்
கூடிக் குலவையிட - அவை யாவை?
|
விடை |
: |
மேகம், மழைத்துளி,
தவளை.
|
சான்று-8 |
: |
ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல
சூடு கொடுக்கும், தீ அல்ல
பளபளக்கும், தங்கம் அல்ல - அது என்ன?
|
விடை |
: |
சூரியன்
|
சான்று-9 |
: |
கட்டின மாம்பளம் திட்டுன்னு விளுகுது
கண்டவன் ரெண்டு பேரு
எடுத்தவன் பத்து பேரு
திண்டவன் பதினாறு பேரு
ருசி பார்த்தவன் ஒருத்தன்- அது என்ன?
|
விடை |
:
|
கண்டவன் ரெண்டு பேருண்ணா கண்ணு
எடுத்தவன் பத்து பேருண்ணா இருகை விரல்கள்
திண்டவன் பதினாறுண்ணா பல்லு
ருசி பார்த்தவன் ஒருத்தண்ணா நாக்கு
|
சான்று-10 |
: |
வேலியிலே படர்ந்திருக்கும்
வெள்ளைப்பூ பூத்திருக்கும்
கனியும் சிவந்திருக்கும்
கவிஞர்க்கும் விருந்தாகும்- அது என்ன?
|
விடை |
: |
கோவைப்பழம்.
|
|
மேற்காட்டப்பட்ட விடுகதைகள் ஓரடியைக்
கொண்டதாகவும் பல
அடிகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இறுதியில் அது
என்ன? அவை என்ன? அவன் யார்? என்பது போன்ற
வினாவுடன் முடிகின்றன. அறிவைக் குழப்புவதற்காகவே
வடிவமைக்கப்பட்ட விளக்கங்கள் ஆர்வத்தைத் தூண்டிச்
சிந்திக்கச் செய்கின்றன. மறைபொருளாக இருக்கும் விடையைக்
கண்டுபிடித்தவுடன் சவாலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
2.2.2
கதை அடிப்படையிலான விடுகதைகள் (Story Riddles)
புதிர்மைப் பண்புடையதும் விடுவிக்கப்பட வேண்டிய பொருள் கதையாக - ஒரு
வாழ்க்கை நிகழ்வாக - அமைந்திருப்பதுமான விடுகதைகளைக் ‘கதை (அடிப்படையிலான)
விடுகதைகள்’ எனலாம். இதற்கு ஓரிரு சான்றுகளைக் காணலாம்.
|
சான்று-1 |
: |
ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?
பாலுக்கும்
பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
நான்
எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்..... அது என்ன?
|
விடை |
: |
ஒருவன்
ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவள் விருப்பத்தை அறிந்து
அவளைத் தனிமையில் சந்திக்க விரும்பினான். அவளோ அவளுடைய தந்தையோடு
தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய தந்தைக்குத் தெரியாமலும்
தெருவிலுள்ள பிறர் அறியாமலும் அவளோடு உரையாட நினைத்தான். அவன்
நடந்து கொண்டே அவளிடம் நிகழ்த்தின உரையாடலே மேற்கண்ட விடுகதை.
|
|
ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை
(கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின்
பெண்ணே உன் வீடு
எங்கே உள்ளது? |
என்று
அவன் கேட்கிறான். அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும்
பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன்
வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும்
அருகில்’ என்று கூறுகிறாள். அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது
வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா
செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு),
வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து
விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
இந்த
விடுகதை தெருவில் நடைபெறும் ஒரு காதல் நிகழ்வை நம் கண்முன் நிறுத்துவதைக்
காணலாம்.
|
சான்று-2 |
: |
காசிவாசிப் பிராம்மணரே
பகல்வந்த முறைக்கு நான் மைத்துனனே
மகனாராகிய மாமனார் கூப்பிடுகிறார்
சாப்பிட வாரும் பாட்டனாரே - அது என்ன?
|
விடை |
: |
ஒரு
பிராமணர் தன் மகனையும் மனைவியையும்
விட்டுவிட்டுக் காசி சென்றார். காசியிலேயே மனம்
ஒன்றிப் பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார்.
பிறகு தன் ஊரையும் மனைவி மக்களையும்
பார்க்கும் ஆசையால் ஊர் திரும்பினார். மனைவி
இறந்த செய்தியையும் மகன் ஊரைவிட்டுச்
சென்றுவிட்டதையும் ஊரார் வாயிலாக அறிந்தார்.
மகன் இருக்குமிடம் தெரியவில்லை.
பிறந்த
மண்ணிலேயே எஞ்சிய காலத்தைக் கழிக்க
முடிவு செய்த அவர், தனியாக வாழ விரும்பாமல்,
யாராவது ஒரு ஏழைப் பெண்ணை மணந்து வாழ
எண்ணினார். பல ஊர்களுக்குச் சென்று பெண்
தேடினார். ஒரு ஊரில் ஒரு குடிசை இருந்தது.
அந்தக் குடிசையில் இருந்த பிராமணனுக்கு
வயதுக்கு வந்த பெண் இருந்தாள். அவளை
மணமுடித்துக் கொடுக்க அந்தப் பிராமணனுக்கு
வசதி இல்லை. யாராவது இரண்டாம் தாரமாகக்
கேட்டால் கொடுக்கலாம் என்று கருதியிருந்தான்.
காசிவாசிப் பிராமணரின் திருமண விருப்பத்தை
அறிந்த உடன் ஏழை பிராமணன் தன்
பெண்ணைக் கொடுக்க முன் வந்தான். திருமணம்
நிச்சயமாயிற்று.
ஏழை
பிராமணன் வீட்டில் ஒரு கிழவி இருந்தாள்.
அவளுக்கு ஏழை பிராமணனின் பூர்வீகம் தெரியும்.
மாப்பிள்ளையாக வர இருக்கும் காசிவாசிப்
பிராமணரை உற்றுக் கவனித்தாள்.

சமையல்
ஆன பிறகு திண்ணையிலிருந்த
காசிவாசிப் பிராமணரை உணவுண்ண அழைத்து
வருமாறு ஏழை பிராமணனின் சிறு பிள்ளையை
அனுப்பினாள். ‘இந்தப் பாட்டைச் சொல்லி
அவரைச் சாப்பிடக் கூப்பிடு’
என்று
சொல்லியிருந்தாள். அவனும் அப்படியே போய்ச்
சொல்லிக் கூப்பிட்டான். பாட்டைக் கேட்டதும்
பிராமணருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உள்ளே
சென்று சாப்பிட்டார். அப்போது சிறுவனைப்
பார்த்து, ‘இந்தப் பாட்டை யார் சொன்னார்கள்’
என்று கேட்டார். ‘பாட்டி’ என்று கூறினான்
சிறுவன். ’அது யார்’ என்று கேட்டார் பிராமணர்.
‘உங்களைத் தெரிந்து கொண்டவள்’ என்று
உள்ளேயிருந்து பதில் கூறினாள் பாட்டி.
’பெரிய
பாவத்திலிருந்து தப்ப வைத்தீர்கள்’ என்று கூறித் திருமணம் செய்து
கொள்ளாமல் காசிக்கே சென்று விட்டார் பிராமணர்.
|
|
மேற்காட்டப்பட்ட சான்றுகளுள் முதல் சான்று மறைபொருளை
உள்ளடக்கிய உரையாடலாக - பாடல் தன்மையுடன்
அமைந்துள்ளது. விடை ஒரு கதை நிகழ்வாக - சம்பவமாக
அமைந்துள்ளது. மரச் செருப்பு இன்று வழக்கொழிந்து விட்டது.
மேலும் பால் விற்கும் தொழிலில் இன்று பல்வேறு சாதியினர்
ஈடுபடுகின்றனர். ஊசி செய்தல், துணி நெய்தல் போன்ற
தொழில்கள் இயந்திரங்களின் உதவியால் நடைபெறுகின்றன.
இத்தகைய காலச் சூழலில் நமது கிராம மக்களின் வாழ்வியல்
குறித்த செய்திகளை வரலாற்று அடிப்படையில் அறிந்திருப்பது
இத்தகைய விடுகதைகளுக்கு விடை கூற வசதியாக இருக்கும்.
இரண்டாவது
சான்று முதியவர்கள் இளம் பெண்களைத்
திருமணம் செய்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு
அதனால் உறவு முறையில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பினைத்
தெளிவுபடுத்துகிறது.
இது பாடல் வடிவில் அமைந்துள்ளது. விடை ஒரு கதையாக உள்ளது. ஆனால் உரைநடையில்
அமைந்த கதை அடிப்படையிலான விடுகதைகளில் முதலில் ஒரு கதை அல்லது சம்பவம்
கூறப்படும். அதில் உள்ள மறைபொருளை விடுவிக்குமாறு வினா எழுப்பப்படும்.
விடை சுருக்கமாக இருக்கும். இதற்கு ஒரு சான்று காணலாம்.
|
சான்று-3 |
: |
ஒருநாள் அரசன் ஊர் சுற்றி வரும்போது ஏழு
தெருக்களிலும் ஏழுபேர் காவல் காத்தனர்.
அரசன் இரண்டாவது தெருவில் வரும்போது
ஒரு நாய் அரசனைக் கடித்துவிட்டது. உடனே
அரசன் அந்தக் காவலாளியை அழைத்து
‘அந்த நாயை உடனே கொல்லுதல் வேண்டும்.
நீ எவ்வாறு அதனைக் கொல்கிறாயோ அது
போன்று நானும் உன்னைக் கொல்வேன்’
என்றான். இதனை எவ்வாறு நிறைவேற்றுவது?

|
விடை |
: |
நாயின்
வாலைப் பிடித்து அடித்துக் கொன்றான். மனிதனுக்கு வாலில்லை. எனவே
அரசன் எவ்வாறு காவலாளியைக் கொல்ல இயலும்?
|
|
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகள் எல்லாம்
இத்தகைய கதைகளே. இன்று மக்களிடையே செல்வாக்குப்
பெற்றுள்ள ’மர்ம நாவல்கள்’ என்னும் எழுத்திலக்கிய வடிவம்
இது போன்ற விடுகதைகளின் வளர்ச்சி என்று கூறலாம்.
கதை (அடிப்படையிலான) விடுகதைகளுக்கு வ. மு. இராமலிங்கம் வெளியிட்ட
களவுக்காதலர் கையாண்ட விடுகதைகள் என்ற
நூலும் ஆறு. இராமநாதனின் காதலர் விடுகதைகள்
என்ற நூலும் சான்றுகளாக அமையும்.
2.2.3 கணக்கு
விடுகதைகள் (Arithmetic Riddles)
நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் விடுகதைகளுள் கணக்கினை அடிப்படையாகக்
கொண்ட விடுகதைகளைக் கணக்கு விடுகதைகள்
என்று சுட்டலாம். இவற்றுள் சில கணக்குகளைப் போல இருக்கும். ஆனால் கணக்குகளாக
இல்லாமல் எதிராளியை ஏமாற்றுவதாக அமையும். ஒரு சான்று வருமாறு:
அரனூரு
காடை அம்பது முட்டையிடும்
ஒரு காடை எத்தனை முட்டையிடும்?
இங்கே
’அரனூறு’ என்ற சொல் உச்சரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அறநூறு (600)
என்பதாக உச்சரிக்கப்படும். கேட்பவர் '600 காடை 50 முட்டையிடும் என்றால்
ஒரு காடை எத்தனை முட்டையிடும்’ என்று கணக்குப் போடத் தொடங்குவர். ’அரை
நூறு (50) என்பதே சரி. இத்தகைய விடுகதைகளை வேடிக்கை
விடுகணக்கு என்று கூறலாம். இவையேயன்றி உண்மையான கணக்காகவும்
சில விடுகதைகள் அமைந்திருக்கும் ஒரு சான்று காணலாம்.
|
சான்று-1 |
: |
கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்து
செட்டியார் செத்துப் போனார்
சிறுபிள்ளை மூன்று பேரு
கட்டியை உடைக்காமலேயே பங்கு பிரிக்க
வேண்டும். எப்படி-?
|
விடை |
: |
1/4
கட்டி 5; 1/2 கட்டி 2: 3/4 கட்டி 1 (எட்டு தங்கக் கட்டிகளுள்
நான்கு கால் கட்டிகள் ஒருவருக்கு. இரண்டு அரை கட்டிகள் இரண்டாமவருக்கு.
ஒரு முக்கால் கட்டியும் ஒரு கால் கட்டியும் மூன்றாமவருக்கு)
|
சிந்திக்கச் செய்யும் உண்மையான கணக்காக இவ்விரு கணக்குகள்
அமைந்துள்ளதை அறியவும்.
உரைநடையில்
அமைந்த விடுகணக்குக்கு ஒரு சான்று வருமாறு:
|
சான்று-1 |
: |
ஒரு குளத்தில் சில தாமரைகள்
மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக
அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக
அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. வந்த வண்டுகள் எத்தனை? மலர்கள்
எத்தனை?
|
விடை |
: |
வந்த
வண்டுகள் நான்கு
இருந்த மலர்கள் மூன்று |
|
2.2.4
எழுத்திலக்கிய விடுகதைகள் (Literary Riddles)
நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்பட்டு வரும் விடுகதை இலக்கிய
வடிவத்தைப் பயன்படுத்தி எழுத்திலக்கியப் படைப்பாளிகள் வெண்பா, ஆசிரியப்பா
முதலான இலக்கண அடிப்படையில் விடுகதைகளைப் படைத்துள்ளனர். இவற்றின்
தனித்தன்மையை மனத்தில் கொண்டு இவற்றை எழுத்திலக்கிய விடுகதை என்று
சுட்டலாம். இத்தகைய விடுகதைகள் விடுகவி, விடுகதை என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன.
இத்தகைய எழுத்திலக்கிய விடுகதைகளுக்கு இரு சான்றுகள் காணலாம்.
|
சான்று-1 |
: |
பஞ்சு தனைத் தான்புசித்துத் தையலோடு
பலநாளும் போர்வையிட்டுப் படுத்துறங்கும்
தஞ்சமென விழுந்தவர்கள் தலையைத் தூக்கும்
தாழ்வில்லா மஞ்சத்தே அடுத்து வாழும்
வஞ்சியர் போல் மேல் விழுந்து மருவப்
பார்க்கும் வசியஞ் செய் திடுந்தாசி வேசியல்ல
அஞ்சலெனக் கண்டவரை வணங்கச் செய்யும்
ஆரணங்கே இக்கதையை அறிந்து சொல்லே.
|
விடை |
: |
தலையணை
|
சான்று-2 |
: |
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும்
கண்டறியான் காடுறைவான் தீர்த்தக்
கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு
நல்தலை யொன்றுண்டு படுக்கும்போ
தலையில்லை பார்.
|
விடை |
:
|
ஆமை
|
|
மேற்காட்டப்பட்ட சான்றுகள் இரண்டிலும் புதிர்மைப் பண்பு அமைந்துள்ளது.
இரண்டிலும் அப்புதிர்மைப் பண்பு விடுவிக்கப்படுகின்றது. விடை ஒரு சொல்லால்
அமைந்துள்ளது. இவையனைத்தும் உண்மை விடுகதைகளின் பண்புகள். ஆயினும்
காட்டப்பட்ட இரண்டு சான்றுகளும் இலக்கண மரபிற்கு உட்பட்டதாக அமைந்துள்ளன.
முதல் சான்று ‘எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளது.
இரண்டாவது சான்று ‘வெண்பாவால்’ அமைந்துள்ளது. எனவே, இவற்றை எழுத்திலக்கிய
விடுகதைகள் என்று சுட்டுவது பொருத்தமாக இருக்கும். இவ்வகை விடுகதைகள்
இலக்கண மரபிற்கு உட்பட்டதாக இருக்கும். எழுத்திலக்கியச் சொற்கள் பயின்று
வந்திருக்கும். குப்புசாமி நாயுடு (1933) என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட
விவேக விளக்க விடுகவிப் பொக்கிஷம் எழுத்திலக்கிய
விடுகதைக்குச் சிறந்த சான்றாகக் கூறலாம். |
|
தன்மதிப்பீடு
: வினாக்கள் - I
|
|
1. |
விடுகதை
இலக்கிய வகையைச் சுட்டுவதற்கு நமக்குக் கிடைக்கும் பழைய சொற்கள்
யாவை? |
|
|
|
|
|
|
2. |
மறைபொருளை
உள்ளடக்கிய அனைத்தையும் சுட்டும் பொதுச் சொல் எது? |
|
|
|
|
|
|
3. |
வெடி,
அழிப்பாங்கதை ஆகிய சொற்கள் தமிழகத்தின் எவ்வெப்பகுதிகளில் வழக்கில்
உள்ளன? |
|
|
|
|
|
|
4. |
விடுகதை
என்னும் சொல் மிக அண்மைக் காலத்தில் தமிழில் காலூன்றி உள்ளது
என்ற கருத்து சரியா? எவ்வாறு? |
|
|
|
|
|
|
5. |
தமிழில்
முறையாகத் தொகுக்கப்பெற்ற முதல் விடுகதை நூல் என்று எதனைக் கூறலாம்? |
|
|
|
|
|
|
6. |
உண்மை விடுகதைகள்-விளக்குக
|
[விடை] |
|
|
|
|
|
7. |
கதை
(அடிப்படையிலான) விடுகதைகள்-விளக்குக? |
|
|
|
|
|
|
8. |
கணக்கு
விடுகதைகள்-விளக்குக. |
|
|
|
|
|
|
9. |
எழுத்திலக்கிய
விடுகதைகள்-விளக்குக. |
|
|