3.8 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசையில் வல்லின, மெல்லின, இடையின மெய்கள் அடுக்கப்பட்டிருக்கும் முறை விளக்கப்பட்டது. வல்லின, மெல்லின, இடையின மெய்களின் பிறப்பிடங்கள் விளக்கப்பட்டன. மூவகை மெய்யெழுத்துகளுக்கும் பிறப்பிடம் வெவ்வேறாக அமைகின்றன என்றாலும் பிறப்பு முயற்சியில் வல்லின மெல்லின மெய்கள் ஒத்திருப்பதை இலக்கண நூல்கள் விளக்குகின்றன. ‘க் ங், ச் ஞ், ட் ண், த் ந், ப் ம், ற் ன்’ என்ற வகையில் இவ்வெழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சி விளக்கப்படுகின்றது. இடையின மெய்களின் பிறப்பினை விளக்கும் போது நன்னூல் ய, ர, ழ, ல, ள, வ என்று பிரித்துக் கொண்டு அவற்றின் பிறப்பின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. மெய்யெழுத்துகளோடு, சார்புஎழுத்துகளின் பிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்பட்டது. சார்பெழுத்துகளின் எண்ணிக்கையும் எடுத்துக்காட்டப்பட்டது. மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் தொகுத்துக் காட்டப்பட்டன. தமிழ் இலக்கண நூல்கள் எழுத்தொலிகளின் பிறப்புக் குறித்துக் கூறியுள்ள செய்திகளையே மொழியியல் அறிஞர்களும் தெரிவித்துள்ளனர் என்பது மெல்லின மெய்களைக் கொண்டு விளக்கப்பட்டது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இடையின மெய்களை நன்னூல் எவ்வகையில் பிரித்து விளக்குகின்றது? விடை
2. ய், ர், ழ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன? விடை
3. ல், ள், வ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன? விடை
4. தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் சார்பெழுத்துகளைப் பட்டியலிடுக. விடை
5. சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன? விடை
6. எழுத்துப் பிறப்பிற்குத் தெரிவிக்கப்படும் புறனடையை விளக்குக. விடை
7. மெய்யொலிகளின் பிறப்புக் குறித்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழியியல் அறிஞர்களும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிடுக. விடை