வாழை மரம்
பாடம்
Lesson
அன்பு மாணவர்களே!
வணக்கம்!
என்ன பார்க்கிறீர்கள்?
யார் பேசுவது எனத் தெரிகிறதா?
நான்தான் வாழை மரம் பேசுகிறேன்.
நலமா மாணவர்களே?
நான் நலம்!



வாழை பழம்
உலகத்திலேயே எல்லாருக்கும் தெரிந்த பழம் வாழைப் பழம். அதை நானே தருகிறேன். அதனால் நான் எப்பொழுதும் நலமே!
நீங்களும் நலமாக இருக்க ஒவ்வொரு நாளும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுங்கள். நலமாக வாழுங்கள்!
வாழைப் பழம் இனிப்பான பழம். அதைத் தரும் என் கதையைக் கேளுங்கள்.
நான் இந்த உலகத்தில் பிறந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தெரியுமா?
மிகப் பழைய காலம் முதலே மலேசியா, மொரிசியசு, சீனா, ஆப்பிரிக்கா முதலான பல நாடுகளிலும் நான் வளர்ந்துள்ளேன்.
ஆ ஆ! எனக்கு எவ்வளவு சிறப்புகள்!
அதைவிடப் பெரிய சிறப்பு என் உடம்பின் பகுதிகள் எல்லாமே மக்களுக்கு உதவுகின்றன.

வாழை இலை
எனக்குப் பெரிய இலைகள் உண்டு; அவை பசுமையான இலைகள்; அவற்றில் உணவை வைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
தமிழ்நாட்டில் தலை வாழை இலையில் விருந்தினர்க்கு உணவு வைப்பார்கள். அந்த உணவிற்குத் "தலை வாழை இலை உணவு" என்று பெயர். தற்போது தலை வாழை இலை உணவு உலகம் முழுவதும் சிறப்புப் பெற்று வருகிறது.

வாழைப் பூ
எனக்கு ஒரு பூ உண்டு. அதற்குப் பெயர் வாழைப் பூ. அழகான பூ. இந்தப் பூவிற்கும் பல சிறப்புகள் உண்டு.
உலகத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் மேல் நோக்கிப் பூக்கும். என் பூவான வாழைப் பூ மட்டுமே கீழ் நோக்கிப் பூக்கும். மேலும் இந்தப் பூவை நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.

வாழைக் காய்
இந்தப் பூக்கள் காய்களாக வளரும். அவற்றின் பெயர் வாழைக் காய்கள். வாழைக் காய்கள் பார்க்க அழகாக இருக்கும்; அடுக்கு அடுக்காக ஒரு குலையில் காய்க்கும். இது வாழைக் குலை எனப்படும்.

வாழைப் பழம்
வாழைக் காய்கள் கனிந்து வாழைப் பழங்களாக மாறும். பழுத்த உடன் பச்சை நிற வாழைக் காய்கள் மஞ்சள் நிறமாக மாறும். நான் தரும் வாழைப் பழம் தமிழ்நாட்டில் விளையும் முக்கனிகளுள் ஒன்று. மாம்பழம், பலாப் பழம், வாழைப் பழம் என்ற மூன்று பழங்களின் வரிசையில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். வாழைப்பழங்களில், மஞ்சள், மலை, கற்பூரம், பேயன், இரசுத்தாலி, பச்சை, செவ்வாழை போன்ற பல வகைகள் உண்டு.
வாழைப் பழத்தைப் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்கு வந்தபோது விரும்பிச் சாப்பிட்டுள்ளார். இறைவனுக்கு அர்ச்சனைப் பொருளாகவும் வாழைப் பழம் வைக்கப்படுவது, உனக்குத் தெரிந்தது தானே !

வாழைத் தண்டு
அடுத்து என் உடல் பகுதி. அது மிக மென்மையான பகுதியாகும். அதற்கு வாழைத் தண்டு என்று பெயர். வாழைத் தண்டையும் நீங்கள் சாப்பிடப் பயன்படுத்தலாம்.
என் வாழைத் தண்டின் மேல் ஒரு தோல் அடுக்கு இருக்கிறது. இதன் பெயர் வாழைப் பட்டை. இதில் இருந்து நூல் போல ஒரு பகுதி கிடைக்கும். அதற்கு வாழை நார் என்று பெயர். இந்த வாழை நார் கொண்டு நீங்கள் பூக்கள் கட்டலாம்.
பார்த்தீர்களா! என் பூ, இலை, காய்கள், பழங்கள் எல்லாம் பயன்படுகின்றன.
உணவாகவும் மருந்துப் பொருளாகவும் என் ஒவ்வொரு பகுதியும் மக்களுக்கு உதவுவது போல நீங்கள் பிறருக்கு உதவ வேண்டும் மாணவர்களே!
இவ்வளவு என்னைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்!
என் குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

வாழை மரத் தோரணம்
நான் அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுடன் தான் பிறப்பேன். எப்பொழுதும் இருப்பேன். எனக்கு என் அம்மாவின் காலடிதான் வீடு. என் குடும்பத்தில் எப்போதும் கூட்டம் தான்; இன்பம் தான். கூடி இருந்தால் இன்பம் தானே! அதனால் கூடி வாழும் குடும்பத்து விழாக்களின் போது, வாசலில் வாழை மரங்களைக் கட்டுகிறார்கள். திருமண வீடுகளில் ‘வாழையடி வாழையென வாழவேண்டும்’ என்று வாழ்த்துகிறார்கள்.

வாழைத் தோட்டம்
நன்றி ! மாணவர்களே!
இதுவரை என் கதை கேட்ட உங்களுக்கு நன்றி.