எழுத்து

எழுத்து

பாடம்
Lesson


முதல் எழுத்துகள்

 
 
 
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ - 12 எழுத்துகள்

மேலே உள்ள இரு பட்டியல்களில் உள்ள எழுத்துகள் உங்களுக்குத் தெரியும்.

இவற்றில்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

• முதல் எழுத்துகளின் வகைகள்

(1) உயிர் எழுத்துகளின் வகைகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - 12 எழுத்துகள்

குறில் நெடில்

5+7=12

பன்னிரண்டு உயிர் எழுத்துகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

 

என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள்.

 

என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள்.

அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்துகளைச் சொல்லக் குறைந்த முயற்சியும், குறைந்த நேரமும் ஆகிறது. எனவே இவை குறில் (குறுகிய) எழுத்துகள் எனப்படுகின்றன.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற எழுத்துகளைச் சொல்ல நிறைந்த முயற்சியும், நிறைய நேரமும் தேவைப்படுகின்றன. எனவே இவை நெடில் (நீண்ட) எழுத்துகள் எனப்படுகின்றன.

எனவே இவற்றைக் குறில், நெடில் என்று பிரிக்கலாம்.

சொல்வதற்குக் குறைந்த முயற்சியும் குறைந்த காலமும் தேவைப்படும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்.

சொல்வதற்கு நிறைந்த முயற்சியும், நிறைய நேரமும் தேவைப்படும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

ஓர் எழுத்தைச் சொல்வதற்கு அதாவது, ஒலிப்பதற்கு ஆகும் நேர அளவு மாத்திரை எனப்படுகிறது. குறில் எழுத்தின் ஒலிப்பு நேரம் ஒரு மாத்திரை. நெடில் எழுத்தின் ஒலிப்பு நேரம் இரு மாத்திரைகள்.

• மெய் எழுத்துகளின் வகைகள்

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

 

மெய் (உடல்) எழுத்துகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

க், ச், ட், த், ப், ற்

என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துகள் ஆகும்.

ங், ஞ், ண், ந், ம், ன்

என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன.

ய், ர், ல், வ், ழ், ள்

என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது. எனவே இவை இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. மெய் எழுத்துகள் உயிர்க்குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன. இவற்றின் (மெய் எழுத்து) ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை ஆகும்

• எழுத்துகளின் ஒலி அளவு

1. குறில்

2. நெடில்

என உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும் பிரிக்கிறோம். குறுகிய ஓசை, நெடிய ஓசை என்பதை எதை வைத்து அளவு செய்வது?

கா
கொ கோ
குறில் நெடில்

இந்த எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். ஒலி அளவில் நீங்கள் வேறுபாட்டை உணர முடியும்.

எழுத்துகள் ஒலிக்கும் அளவை மாத்திரை எனக் குறிப்பிடுவர் இலக்கண ஆசிரியர்கள்.

இது ஒரு கை நொடி அளவு : (அதாவது கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் அளவு)
அல்லது
கண்ணிமை அளவு - (அதாவது கண் இமைக்கும் அளவு)
குறில் எழுத்துகள் - 1 மாத்திரை அளவின. (அ, க, ச, சி, து)
நெடில் எழுத்துகள் - 2 மாத்திரை அளவின. (ஆ, கா, சா, சீ, தூ)
மெய் எழுத்துகள் - 1/2 மாத்திரை அளவின. (க், ங், ச், ஞ்...ன்)

என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• சார்பெழுத்துகள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும். அவை,

(1) உயிர்மெய்

(2) ஆய்தம்

(3) உயிரளபெடை

(4) ஒற்றளபெடை

(5) குற்றியலுகரம்

(6) குற்றியலிகரம்

(7) ஐகாரக் குறுக்கம்

(8) ஒளகாரக் குறுக்கம்

(9) மகரக் குறுக்கம்

(10) ஆய்தக் குறுக்கம்

என்னும் பத்து ஆகும்.

• உயிர்மெய்

மேற்கண்ட பட்டியலில் உள்ள எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படுகின்றன.

மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். எனவே இவை 18(மெய் எழுத்துகள்)x12(உயிர் எழத்துகள்)=216 (உயிர்மெய் எழுத்துகள்) ஆகும்.

எடுத்துக்காட்டிற்கு 'க' என்ற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.

'க்' என்ற எழுத்து வடிவம் 'க' என்ற எழுத்தில் உள்ளது. எனவே இது மெய் எழுத்தைச் சார்ந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.

'க' என்ற எழுத்தைச் சொல்லிப் பாருங்கள்.

க் + அ;
க்அ = க.

'க்' என்ற மெய் எழுத்து முதலிலும் 'அ' என்ற உயிர் எழுத்து இரண்டாவதாகவும் இணைந்து ஒலிக்கக் 'க' என்ற எழுத்து கிடைக்கிறது. எனவே 'க' என்ற எழுத்து உயிர், மெய் என்ற இரண்டையும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்து என்பது தெரிய வருகிறது.

இதுபோலவே மேற்காட்டிய 216 எழுத்துகளும் முதல் எழுத்துகளைச் சார்ந்தே ஒலிக்கின்றன.

• உயிர்மெய் எழுத்துகளின் வகைகள்

உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில், நெடில் ஆகியன.

குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்.

நெடிய ஒலிகளுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

அ, இ, உ, எ, ஒ என்ற குறில் உயிர் எழுத்துச் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் குறில் எழுத்துகள் ஆகும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற நெடில் எழுத்துகளின் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

இது தவிர இந்த எழுத்துகளை அவற்றின் மெய் ஒலிகள் அடிப்படையில் இன்னும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பனவாகும்.

க், ச், ட், த், ப், ற் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் வல்லின உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் மெல்லின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் இடையின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

• ஆய்தம்

 

ஆய்த எழுத்து

ஃ என்ற எழுத்து ஆய்தம் எனப்படுகிறது. இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து 'அ' என்ற உயிர் எழுத்தையும் 'கு' என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.

உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

(எ.கா.) அஃது, எஃது.

• குற்றியலுகரம்

கு, சு, டு, து, பு, று

என்ற ஆறு எழுத்துகளைச் சற்றுக் கவனியுங்கள்.

இவை, (1)உயிர்மெய்எழுத்துகள்

(2)உயிர்மெய்க் குறில் எழுத்துகள்

(3) வல்லின உயிர்மெய்க் குறில் எழுத்துகள்

என்ன, சரிதானே!

இவற்றைத் தனித்தனியாகச் சொல்லிப் பாருங்கள். இவை ஒரு மாத்திரை ஒலிக்கும்.

ஆனால்,

பாக்கு

காசு

உண்டு

பந்து

பாபு

ஊறு

இந்தச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள். இவற்றில் இறுதியில் உள்ள கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகள் குறைந்து ஒலிப்பதாகத் தெரியும். தனித் தனியாகச் சொன்னதைவிட இப்போது இவை குறைவாகவே ஒலிக்கும்.

அதைக் கணக்கிடுவோம் வாருங்கள்.

பா + க் + கு

ஆனால் மூன்றரை மாத்திரையைவிட இந்தச் சொல் இன்னும் குறைவாகவே ஒலிக்கும். குறிப்பாக கு என்ற எழுத்து ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும்.

இது போலவே மேலே உள்ள மற்ற சொற்களிலும் உகரம் குறைந்தே ஒலிக்கும்.

இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படுகிறது. இதுவும் ஒரு சார்பு எழுத்து ஆகும்.

• குற்றியலிகரம்

தன் மாத்திரை அளவில் இருந்து ஒலி குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம். அதுபோலத் தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

நாகு + யாது = நாகியாது

கொக்கு + யாது = கொக்கியாது

இந்தச் சொற்களில் வரும் ‘கி’ என்ற இகர எழுத்துகள் தம் ஒரு மாத்திரை அளவினின்று குறைந்து ஒலிக்கின்றன. இதுவே குற்றியலிகரம் எனப்படும். இது பெரும்பாலும் சில இடங்களிலே வரும்.

குறைந்து வரும் இயல்பைச் சோதனை செய்வோமா?

நாகு + யாது = நாகியாது

(2+1) + (2+1) = (2+1+2+1) = 6

6 மாத்திரையாக ஒலிக்க வேண்டிய இந்தச் சொல் அதனிலும் குறைந்து ஒலிப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

மற்ற சார்பு எழுத்துகளை அடுத்த நிலைப் பாடங்களில் படிக்க உள்ளீர்கள்.