புணர்ச்சி
பயிற்சி - 4
Exercise 4
1. புணர்ச்சி என்றால் என்ன?
ஒரு சொல்லோடு மற்றொரு சொல் சேருவதைப் புணர்ச்சி என்பர்.
2. இயல்பு புணர்ச்சி என்பது யாது?
இரண்டு சொற்கள் சேரும்பொழுது, வேறுபாடுஇன்றி இயல்பாகச் சேருவதை (புணருவதை) இயல்பு புணர்ச்சி என்பர்.
3. விகாரப் புணர்ச்சி என்பது யாது?
நிலைமொழியும் வருமொழியும் புணரும்பொழுது இடையில் ஓர் எழுத்துத் தோன்றி, அல்லது திரிந்து அல்லது கெட்டுப் புணரும் மாற்றம் விகாரப் புணர்ச்சி எனப் பெறும்.
4. திசைப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன?
ஒரு திசைப்பெயரோடு மற்றொரு திசைப்பெயர் அல்லது பிற பெயர்கள் சேருவது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப் பெறும்.
5. மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன?
செம்மை, சிறுமை, வெம்மை, புதுமை முதலான மையீற்றுப் பண்புப்பெயர்கள் பிற சொல்லோடு சேருவது மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சி ஆகும்.
6. நிலைமொழியிறுதியில் மெய்யும் வருமொழி முதலில் உயிரும் வந்தால் அது புணருவதற்குரிய விதி யாது?
நிலைமொழியிறுதியில் மெய்யும் வருமொழி முதலில் உயிரும் வந்தால் அது புணருவதற்குரிய விதி உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
7. ‘வெற்றிலை’ என்பது புணர்ச்சி விதிப்படி எவ்வாறு பிரியும்?
வெற்றிலை என்பது புணர்ச்சி விதிப்படி ‘வெறுமை + இலை’ எனப் பிரியும்.
8. பூ + கொடி = பூங்கொடி - இதற்குரிய புணர்ச்சி விதி யாது?
பூ + கொடி = பூங்கொடி - இதற்குரிய புணர்ச்சி விதி ‘பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்’.
9. தங்கம் + தாலி = தங்கத்தாலி - இதில் வல்லினம் மிகக் காரணம் யாது?
தங்கம் + தாலி = தங்கத்தாலி - இதில் வல்லினம் மிகக் காரணம் இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
10. கற்க + கசடற = ‘கற்க கசடற’ - இதில் வல்லினம் மிகாமைக்குக் காரணம் என்ன?
கற்க + கசடற = ‘கற்க கசடற’ - இதில் வல்லினம் மிகாமைக்குக் காரணம் இதில், கற்க என்பது வியங்கோள் வினைமுற்று.