கயமனார்

12. பாலை
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
5
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
'இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என
நும்மொடு வரவு தான் அயரவும்,
10
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்

168. குறிஞ்சி
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
5
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
10
ஆரம் கமழும் மார்பினை,
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

தோழி இரவுக்குறி மறுத்தது.

279. பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
5
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச்
10
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்

293. பாலை
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
5
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல்,
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
5
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
10
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்

324. குறிஞ்சி
அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?-
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
5
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!

தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்