நக்கீரர், நக்கீரனார்

31. நெய்தல்
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
5
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்-ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
10
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்

86. பாலை
அறவர், வாழி-தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
5
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!

குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்

197. பாலை
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என,
5
ஆழல், வாழி-தோழி!-நீ; நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
10
இன் இசை முரசின் இரங்கி, மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்

258. நெய்தல்
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே-
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
5
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
10
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள்
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.

தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்

340. மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
5
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
10
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்

358. நெய்தல்
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம்,
5
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என,
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ-தோழி!-
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
10
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என்
அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்

367. முல்லை
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
5
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
10
இளையரும் சூடி வந்தனர்: நமரும்
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர், இப் பனி படு நாளே.

வரவு மலிந்தது-நக்கீரர்