161-170

161. முல்லை
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,
கண் போல் நீலம் சுனைதொறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்,
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,
5
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி,
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப,
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின்
10
காதல் கெழுமிய நலத்தள், ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே?

வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.

162. பாலை
''மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்'' என்று, நின்
5
பனி வார் உண்கண் பைதல கலுழ,
''நும்மொடு வருவல்'' என்றி; எம்மொடு-
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
10
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும்,
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

''உடன் போதுவல்'' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.

163. நெய்தல்
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,
5
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர,
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
10
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின், தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!

வரைவு மலிந்து சொல்லியது.

164. பாலை
''உறை துறந்திருந்த புறவில், தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்'' எனச்
5
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்-
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
10
மாறு புறக்கொடுக்கும் அத்தம்,
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.

பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.

165. குறிஞ்சி
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
''அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க'' எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
''நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக'' என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.

166. பாலை
பொன்னும் மணியும் போலும், யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்;
போதும் பணையும் போலும், யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்:
5
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்;
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின்,
யாதனின் பிரிகோ?-மடந்தை!-
10
காதல் தானும் கடலினும் பெரிதே!

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

167. நெய்தல்
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்
5
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவற் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
10
இறை ஏர் எல் வளைக் குறுமகள்
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.

தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

168. குறிஞ்சி
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
5
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
10
ஆரம் கமழும் மார்பினை,
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

தோழி இரவுக்குறி மறுத்தது.

169. முல்லை
''முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம்'' என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
5
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
10
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

170. மருதம்
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
5
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.