Primary tabs
மொழிக்கும் அம்மொழி பேசும் மனிதர்க்கும் உறவுண்டு.
தொடர்பு உண்டு. இதன் அடிப்படையில் மொழியை ஒருவரது
தாய்மொழி என்றோ, வேற்றுமொழி என்றோ கூறுவதுண்டு.

‘ஒருவர் குழந்தைப் பருவத்தில் இயல்பாகக் கற்கும் மொழி;
சிந்திக்கவும், கருத்துகளைப் புலப்படுத்தவும் ஒருவர் இயல்பாகக்
கையாளும் மொழியே தாய்மொழி’ என்று ஐக்கிய நாடுகளின்
சபை ‘தாய்மொழி’க்கு விளக்கம் தருகிறது. ‘பெற்ற தாய்
அவளது குழந்தைக்குக் கற்பிக்கும் மொழி தாய்மொழி’ எனலாம்.
ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்
கொள்ளலாம். பயன்படுத்தலாம். அவர் கற்கும் பிறமொழிகள்
எல்லாம் அவரது தாய்மொழி ஆகாது. ஒருவருக்கு அவரது
தாய்மொழி தவிரப் பிற எல்லாம் அயல் மொழிகளே ஆகும்.
மொழியால் மட்டும்தான் கருத்துகளைப் பரிமாற முடியும்
என்பதில்லை. நமது உடலசைவுகள் மூலமும் உணர்த்த முடியும்.
இவ்வாறு உடல் மூலம் உணர்த்துவது உடல் மொழி (Body
Language) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் அன்றாட
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பொருட்டுப் பல
மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. வேகமாகவும்,
தனக்கு எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்குரியதைத்
தெளிவாகவும் கற்கலாம். அப்போது அம்மொழியறிவு
செயல் மொழியறிவாக உள்ளது. செயல் மொழி (Functional
Language) உரையாடலுக்கு மட்டும், எழுதுவதற்கு மட்டும் என்ற
இரு போக்குகளைக் கொண்டது.