தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொல்பொருள் வரைவுகள்

1.5 தொல்பொருள் வரைவுகள்

தமிழகத்தில் பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்கள்
அனைத்தும் பெருங் கற்கால (MEGALITHIC AGE) மக்கள்
வாழ்ந்த பகுதிகளாகவே உள்ளன. இப் பண்பாட்டிற்குரிய மக்கள்
வாழ்ந்த வசிப்பிடங்களுக்கு அருகே, அக்கால மக்களின்
கல்திட்டைகள், கற்பதுக்கைகள், இயற்கை வாழ்விடக் குன்று
மற்றும் குகைகள் உள்ளன.

பெருங்கற்காலப் பண்பாடு தொடர்புடைய அகழ்வுகளில்
கிடைக்கப் பெற்றுள்ள மட்பாண்டங்கள், கல்மணிகள் போன்ற
பொருட்கள் வண்ண அலங்காரத்துடனும், மட்பாண்டங்கள் வண்ண
வரைவுகளுடனும் காணப்படுகின்றன. பெருங்கற்கால மக்களின்
ஈமக் குழிகளிலும், வாழ்விடக் குகைகளிலும், ஓவியங்கள் காணப்படுவது போல இவர்களது மட்பாண்டங்களிலும்
கல்மணிகளிலும் ஓவியங்கள், வரைவுகள் இடம் பெறுகின்றன.
இவற்றை.

(1). மட்பாண்ட வண்ணப் பூச்சு
(2). மட்பாண்டக் கீறல் வரைவுகள்
(3). வண்ண வரைவுக் கல்மணிகள்

என்ற மூன்று நிலைகளில் பிரித்து அறியலாம்.

1.5.1 மட்பாண்ட வண்ணப் பூச்சு

பெருங் கற்காலத்தில்     அம்மக்கள்     பயன்படுத்திய
மட்பாண்டங்கள் வண்ணம் பூசப்பட்டும், வண்ணக் கோடு
இடப்பட்டும் இருந்தன. வண்ணப் பூச்சுகள்     பல்வேறு
வடிவங்களில் கிடைக்கின்றன. தொல்லியலாளர்கள் பெருங் கற்கால
மட்பாண்டங்களில் அமைந்த நிறங்களின் அடிப்படையில்
அவற்றின் காலத்தைக் கணித்து வகை பிரித்துள்ளனர். இதில்
கருப்பு-சிவப்பு என்னும் வகை பெருங் கற்காலத்தில் காணப்படும்
சிறப்புடைய படைப்பாகும்.


மட்பாண்ட வண்ணப் பூச்சு

பளபளப்பு ஊட்டப் பெற்று வண்ணக் கோடுகளும்
வரைவுகளும் அமைந்த பல மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
இந்த வண்ணக் கோடுகள் வெள்ளை நிறத்திலும், செந்நிறத்திலும்
அமைந்தவை. பெருங் கற்கால வரைவுகளுடன் கூடிய
மட்பாண்டங்கள் பூம்புகார், உறையூர், ஆதிச்ச நல்லூர்,
கொற்கை, கொடுமணல், அழகன் குளம், அரிக்க மேடு
போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.

1.5.2 மட்பாண்டக் கீறல் வரைவுகள்

மட்பாண்ட வரைவுகள் - அரிக்க மேடு

மட்பாண்டங்களில் இடம் பெறும் மற்றொரு வகை வரைவுகள்
கீறல் வடிவங்களாகும். கீறல் வரைவுகளில் கோடுகளும்,
குறியீடுகளும், உருவங்களும், பிற பயன்பாட்டுப் பொருட்களின்
வடிவங்களும் இடம்     பெறுகின்றன.     அரிக்க மேட்டில்
கிடைக்கப் பெற்ற மட்பாண்டத்தில்     காணப்படும் பூ
வேலைப் பாடுடைய கீறல் வடிவம், மனிதன், மான், மீன்
வடிவங்கள் ஆகியவை ஓவியக் கலை மரபினைக் காட்ட வல்லன.

1.5.3 வண்ண வரைவுக் கல்மணிகள்

அரிக்க மேடு, கொடுமணல் ஆகிய இடங்களில் நடந்த
அகழ்வாய்வுகளில் கல்மணிகள்    கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
கொடுமணல் என்னுமிடத்தில் கார்னீலியன் மணிகள் கூடக்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கொடுமணலில் உள்ள ஈமக் காட்டில் கற்பதுக்கைகள்
மிகுதியாக உள்ளன. அவற்றில் சில அகழப்பட்ட போது
அக்குழிகளில் மிக அழகிய வெள்ளை வண்ணம் பூசப் பெற்ற
கார்னீலி்யன் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இம்மணிகள்
ஒருபுறம் வெள்ளை வண்ணப் பூச்சுடன் காணப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:28:54(இந்திய நேரம்)