தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோழர் காலச் சிற்பக் கலை

4.1 சோழர் காலச் சிற்பக் கலை

சோழர் காலத்துச் சிற்பக் கலையை இரு பிரிவுகளாகப்
பிரித்துக் காணலாம். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் விசயாலயன்
சோழரது ஆட்சியை நிறுவியதிலிருந்து, இராசராசன் காலம்
தொடங்கும் வரை முற்காலச் சோழர் கலை என்று கூறலாம்.
இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் மாபெரும்
வெற்றிகளைப் பெற்றனர். தம் பேரரசை விரிவு படுத்தினர்.
அவர்கள் கண்ட கட்டட, சிற்பக் கலைகள் தனிச் சிறப்பு மிக்கன.
எனவே இவர்களது கலையைப் பிற்காலச் சோழர் கலை என்று
கூறலாம்.


இராசராச சோழன்


4.1.1 சோழர் சிற்பமும் கருப்பொருளும்

சோழர்களின் சிற்பங்கள் பொதுவாகப் புராணக் கதைகளை
விளக்குவதற்காக மட்டும் அமையாது ஏதேனும் ஒரு கருவை
(Theme) மையமாக வைத்துப் படைக்கப்பட்டு இருக்கும்.

சோழர்கள் பெற்ற பெரும் வெற்றிகளின் காரணமாகவும்,
தமது மெய்க்கீர்த்திகளின் (சிறப்புப் பெருமை) அடிப்படையிலும்
பெரும்பாலான சிற்பங்களை அவ்வாறு அமைத்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக இராசராச சோழன் பெற்ற பெரும்
வெற்றிகளால், தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குத்
தனது பெயராலே இராச ராசேச்சுரம் என்று பெயரிட்டான்.
அடுத்ததாகக் கருவறையைச் சுற்றியுள்ள கோட்டங்களில்
திரிபுராந்தகர் (அசுரர்களின் திரிபுரங்களை எரித்த சிவன்)
சிற்பங்களைப் பல்வேறு கோணங்களில் படைத்துள்ளான்.
சிவபெருமான் அசுரர்களை வென்று பெற்ற வெற்றிகளைப்
போலத் தான் பெற்ற வெற்றிகளை நினைத்து இத்தகைய
சிற்பங்களை இவன் படைத்துள்ளதாகக் கருதலாம்.

4.1.2 சோழர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள்

சோழர்களின் முற்காலச் சிற்பங்கள் பல்லவர் சிற்பங்களின்
கூறுகளைப் பின்பற்றியனவாகவே இருந்தன. உயரமான மகுடம்.
மெல்லிய உடலமைப்பு, தடித்த பூணூல் அமைப்பு ஆகியவை
இடம்பெற்றன. பின்னர்ப் பல புரிகளைக் கொண்ட பூணூல் அமைப்பு, சிம்ம முகத்துடன் கூடிய அரைக் கச்சை, கண்ட
மாலை ஆகியன அமைக்கப் பெற்றன.

பிற்காலச் சோழர்     சிற்பங்களில் அணிகலன்களும்
அலங்காரங்களும் முற்காலச் சோழர் சிற்பங்களைவிடச் சற்று
அதிக அளவில் இடம்பெற்றன. சிற்பங்களின் முகம் வட்டமான
அமைப்பினை உடையதாயும், இலேசான சதைப் பற்றுடனும்
காணப்பட்டது. உடலமைப்பு குறுகிக் காணப்பட்டது. ஆடைகளில்
பூவேலைப்பாடுகள் இடம்பெற்றன. அலங்காரத்துடன் கூடிய
கேயூரம் மற்றும் கழுத்தணிகளுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
இவ் உருவங்களின் தலைக்குப் பின்பகுதியில் இடம்பெறும்
சிரச் சக்கரத்தில் தாமரை இதழ்கள் வட்டமான பகுதியின் உள்ளடங்கிக் காணப்படும்.

பிற்காலச் சோழர் சிற்பங்களை விட முற்காலச் சோழர்
சிற்பங்களே கலை வரலாற்று அறிஞர்களால் பெரிதும்
பாராட்டப் பெறுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:32:29(இந்திய நேரம்)