தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

5.0 பாட முன்னுரை

விசயநகர-நாயக்க மன்னர்களது காலத்தில் கோயில்களில்
சிற்பங்கள் பெரிதும் போற்றப்பட்டன. இச்சிற்ப அமைப்புகளைச்
சுதைச் சிற்பங்கள், கல் சிற்பங்கள் என இரண்டாகப்
பிரிக்கலாம். இவைகளில் சுதைச் சிற்பங்கள் கோயில் விமானத்தின்
தளங்களில் இடம்பெற்றன. சுதைச் சிற்பங்கள் இடம்பெறும்
விமானங்களின் உயரத்தைச்     சுருக்கியும் கோபுரங்களின்
உயரத்தைக் கூட்டியும் இவர்கள்     அமைத்ததால் சுதைச்
சிற்பங்களைக் கோபுரங்களில் அதிக அளவில் காணலாம்.
கற்சிற்பங்கள் பெரும்பாலும் மண்டபங்களில் தூண்களை ஒட்டி
ஆளுயரச் சிற்பங்களாக அமைக்கப்பட்டன. இவை தவிரத்
தூண்களின் சதுரப் பகுதிகளிலும் கற்சிற்பங்கள் இடம்பெற்றன.

ஓவியங்கள் விசயநகர-நாயக்கர் காலத்தில் அதிக அளவில்
தீட்டப்பட்டன. இதன்மூலம் ஓவியங்கள் இவர்களது காலத்தில்
பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்ததனை அறிய முடிகின்றது.
ஓவியத்தின் மேலும்     கீழும்     அதற்கான விளக்கங்கள்
தமிழ்மொழியிலோ தெலுங்குமொழியிலோ எழுதப்பட்டிருப்பது
இவர்களது ஓவியக்கலைப் பாணியின் சிறப்புக் கூறாகும். இவர்களது
ஓவியங்கள் பெரும்பாலும் இராமாயணக் கதைகளைக் கூறுவனவாக
அமைந்துள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:33:35(இந்திய நேரம்)