தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரபும் புதுமையும்

6.1 மரபும் புதுமையும்

இன்றைய கலைஞன் மரபின் மீது இன்றைய வாழ்நிலைக்கு
ஏற்ற புதிய பார்வை செலுத்தியும், முற்றிலும் புதிய போக்கிலும்
சிற்ப - ஓவியங்களைப் படைக்கிறான்.

6.1.1 சிற்பம்

இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், வைணவ சமயம்
தொடர்பான பாகவதம், சைவ சமயம் தொடர்பான சிவ புராணம்
முதலிய கதைகளின் அடிப்படையில் மரபு சார்ந்த சிற்பங்கள்
செதுக்கப்பட்டன. இவை திறமை மிக்க வல்லுநர்களால் கல்,
உலோகம், மரம் முதலான பொருட்களில் செய்யப்பட்டன.
அவ்வாறு     செய்யப்பட்ட     சிற்பங்கள்     சமயங்களோடு
தொடர்புடையனவாக     இருந்தமையால் பெரும்பான்மையும்
கோயில்களில் இடம் பெற்றன.

இக்காலத்தில் நவீனச் சிற்பங்கள் குறிப்பிட்ட பொருள்களில்
தான் படைக்கப்பட வேண்டும் என்ற சமயச் சார்பான
கட்டுப்பாடுகள் உடைபட்டுவிட்டன. மரபு சார்ந்த உருவம் அல்லது
இறையுருவம் என்று இல்லாமல் படைப்பாளியின் மனத்தில்
தோன்றும் எந்தக் கருத்துக்கும், உணர்ச்சிக்கும் வடிவம் தருவதாக
நவீனச் சிற்பம் தோற்றம் பெறுகிறது. நவீனச் சிற்பங்கள் புதிய
கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
6.1.2 ஓவியம்

தமிழகத்தில் பெருங்கற்காலம் முதல் விசயநகர - நாயக்கர்
காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்ந்தது
மரபு சார்ந்த ஓவியம். இது ஐரோப்பியரது காலத்தில் மேலை
நாட்டு ஓவியக் கலையின் தாக்கத்தால் பெரிதும் மாற்றம்
அடைந்தது. ஐரோப்பிய ஓவியர் பிகாசோ, மைக்கேல் ஏஞ்சலோ
போன்றோரின் ஓவியங்கள் இந்திய ஓவியரிடையே ஏற்படுத்திய
தாக்கத்தினால் இந்திய ஓவியக் கலை புதிய பரிணாமம்
அடைந்தது. மேற்கு வங்காளத்தில் வாழ்ந்த இரவீந்திரநாத்
தாகூர் மற்றும் அவர் சகோதரர்கள், அமிர்தா ஷெர்கில்,
ஜைமினி ராய் ஆகியோர் இந்திய நவீன ஓவியத்தின்
முன்னோடிகளாய்த் திகழ்ந்தனர். இரவீந்திரநாத் தாகூர் தாம்
வாழ்ந்த காலத்திற்கு ஏற்பச் சுதந்திரத் தன்மையைக்
காட்சிப்படுத்துவதாகத் தம்     ஓவியங்களைப் படைத்தார்.
கேரளத்தைச் சேர்ந்த இரவிவர்மா போன்றவர்கள் ஓவியக்
கலையைச் சுயமாகக் கற்று மாபெரும் சாதனை படைத்தனர்.
இந்தப் பின்னணியில் தமிழகத்திலும் நவீன ஓவியக் கலை
வளர்ந்தது.
6.1.3 தஞ்சை ஓவியம்

தமிழகத்தில் நவீனக் கலைப் பாணிகள் அறிமுகம் ஆவதற்குச்
சற்றே முந்திய காலப் பகுதியில் சிறப்புற்று இருந்த தஞ்சை
ஓவியம் பற்றி இங்குக் குறிப்பிடுவது இன்றியமையாதது.

தமிழகத்தில் விசயநகர     நாயக்கரது ஆட்சிக்குப் பின்
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மராட்டிய
மன்னர்கள் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி.
19 ஆம்     நூற்றாண்டின் முற்பகுதி வரை தஞ்சையில்
அறிமுகப்படுத்தி வளர்த்த ஓவியக் கலையே தஞ்சை ஓவியமாகும்.
இராமாயணம், பாகவதம் ஆகியவையே தஞ்சை ஓவியத்தின்
உள்ளடக்கம் எனினும், படைப்பு முறையில் இது மரபு
ஓவியத்திலிருந்து சற்று வேறுபட்டது.

  • கலைப் பொருள்களும் கலை ஆக்கமும்


  • இந்த ஓவியம் பலாமரப் பலகைகளில் வரையப்படுகின்றது.
    முதலில் பலகைகளில் கனமான பழுப்பு நிறக் காகிதத்தைப்
    பசை கொண்டு ஒட்டி, அதன் மீது வெள்ளைத் துணியைச்
    சுருக்கமின்றி ஒட்டுவர். வெள்ளைத் துணியின் மேல் பிரெஞ்சு
    சாக் பொடி, வஜ்ரம் ஆகியன கலந்த கலவையைப் பூசுவர்.
    அதன்மீது படம் வரைந்து, தேவையான நிறங்களில் கற்களைப்
    பதிப்பர். வெள்ளைக் கண்ணாடியைச் சிறு துண்டுகளாக்கி
    அவற்றைச் சுற்றிலும் வைத்து ஒட்டுவர். அக்கண்ணாடித்
    துண்டுகளைச் சுற்றித் தங்க நிறத்தில் கெட்டியான காகிதங்கள்
    ஒட்டப்படும். நீலம், சிவப்பு பச்சை ஆகிய வண்ணங்கள் இந்த
    ஓவியத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

  • சிறப்பு


  • தமிழக மக்களால் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலாப்
    பயணிகளைக் கவரக் கூடிய ஓவியமாகத் தஞ்சை ஓவியம்
    விளங்குகிறது. இவ்வகை ஓவியங்களைப் படைப்பதில் குப்புசாமி
    ராஜா
    சிறந்த இடத்தை வகிக்கிறார். மீனா முத்தையா
    சென்னையில் ஓவியப் பள்ளியை நிறுவி, அதில் தஞ்சாவூர்
    ஓவியக் கலையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:34:53(இந்திய நேரம்)