தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.3 சங்கரதாசு சுவாமிகள்

4.3 சங்கரதாசு சுவாமிகள்

தமிழ் நாடக வரலாற்றுக்குப் புத்துயிர் தந்த தவத்திரு
சங்கரதாசு சுவாமிகள் 1867ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம்
நாள் தூத்துக்குடியில் பிறந்தார். தாமோதரக் கணக்குப்பிள்ளை
என்பவர் இவரது தந்தை. இவரது தந்தையார் புலமைமிக்கவராக
விளங்கினார். அன்னாரை இராமாயணப் புலவர் என அப்பகுதி
மக்கள் அழைத்தனர்.

  • அடிப்படைப் பயிற்சி


  • தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் தொடக்கக் கல்வியைத் தமது
    தந்தையாரிடமே பெற்றுக்கொண்டார். பின்னர் பழனி தண்டபாணி
    சுவாமிகளிடம் பாடப் பயிற்சி பெற்று, தமிழறிவைப் பெருக்கிக்
    கொண்டார். இக்கால கட்டத்தில் உடுமலை முத்துச்சாமிக்
    கவிராயர் சுவாமிகளின் சக மாணவராகப் பயின்று வந்தார்.
    பின்னர் சுவாமிகள் தூத்துக்குடியில் உள்ள உப்புப் பண்டக
    சாலையில் கணக்கராக வேலை பார்த்தார்.

  • மறைவு


  • தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 1921-ஆம் ஆண்டு இறுதியில்
    உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். தனது நாடகக் குழுவைச்
    சென்னைக்கு அனுப்பிவிட்டு, தூத்துக்குடி சென்றார். அங்குப்
    பக்கவாத நோய்க்குச் சிகிச்சை பெற்றார். இவ்வேளையிலும்
    மேடையோரம் அமர்ந்து சைகையால் தமது பணியைச்
    செய்துவந்தார்.

    திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்த சுவாமிகள்
    1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் நாள் திங்கட்கிழமை
    இரவு 11 மணிக்குப் புதுவையில் உயிர் துறந்தார்.


    4.3.1 நாடக ஆர்வம்

    இளமையில் பெற்ற தமிழறிவின் காரணமாக இசைப் பாடல்
    இயற்றுவதில் சுவாமிகள் சிறந்து விளங்கினார். அக்கால
    நாடகங்கள் பெரும்பாலும் இசைப்பாடல்களாலேயே ஆக்கப்பட்டு
    வந்தன. இசையின் மீது கொண்ட ஆர்வம் சுவாமிகளை இசை
    நாடகங்கள் பக்கம் வெகுவாக ஈர்த்தது.

  • நாடக அறிமுகம்


  • 1891-ஆம் ஆண்டு சுவாமிகள் முறையாக நாடகப் பணிபுரியத்
    தொடங்கினார்.     இராமுடு     அய்யர், கலியாணராமய்யர்
    ஆகியோரின் நாடக சபைகளில் சுவாமிகள் நடிப்புப் பயிற்சி
    பெறலானார். இச்சபைகளில் முதலில் நடிகராகவும், பின்னர்
    பயிற்றுவிப்பாளராகவும் சுவாமிகள் பணியாற்றவும் செய்தார்.
    இரணியன், இராவணன், எமதருமன், சனீசுவரன் முதலியன
    சுவாமிகள் ஏற்றுக்கொண்ட குறிப்பிடத்தக்க நாடக
    வேடங்களாகும்.

  • துறவுக்கோலம்


  • சிறிதுகால நாடகப்பணியினைத் தொடர்ந்து சங்கரதாசு
    சுவாமிகள் துறவுக்     கோலம்     பூண்டார். முருகனின்
    படைத்தலங்களைக் காண யாத்திரை மேற்கொண்டார். இவ்வாறு
    அவர் மேற்கொண்ட துறவுக் கோலமே அவருக்கு சுவாமிகள்
    என்ற அடைமொழியினைப் பெற்றுத் தந்தது.


    4.3.2 நாடக ஆசிரியர்

    கலை மனத்தைக் கவரும் தன்மை கொண்டது. அதனை
    உணரத் தொடங்கியோர் விலகிச் செல்ல இயலாது. இவ்வாறே
    துறவுக் கோலம் பூண்ட சுவாமிகளை மீண்டும் கவர்ந்தது நாடக
    மேடை! ஆம் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையின்
    அறிமுகம் சுவாமிகள் நாடகப்பணி புரிய உரிய தளத்தினை
    அமைத்துக் கொடுத்தது. சுவாமிகள் நாடக ஆசிரியராக மாறினார்.
    வள்ளி வைத்திய நாதய்யர் நாடக சபையில் நாடக ஆசிரியராகப்
    பணியாற்றினார். தொடர்ந்து பல நாடகங்களை எழுதி, தமிழுக்குக்
    கொடையாக வழங்கினார்.

    மேடையில் ஒழுக்கம், நாடகத்தில் நற்செய்தி என்ற
    அடிப்படைக்     குறிக்கோளுடன்     சுவாமிகள் நாடகம்
    படைக்கலானார்.

  • நாடகக் கதைகள்


  • சுவாமிகள் தொன்ம நாடகக் கதைகளையே மக்களுக்காக
    ஆர்வத்துடன் உருவாக்கினார். மேலும் மக்களுக்கு அறிமுகமான
    நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும்     தமது நாடகங்களின்
    மூலமாகக் கொண்டார். கருத்துகளை மக்களிடம் எளிதில்
    எடுத்துச் செல்ல ஏதுவாக இவ்வழி முறையைச் சுவாமிகள்
    கையாண்டார்.

    சுவாமிகள் சுமார் 51 நாடகங்களை எழுதியுள்ளார். சில
    நாடகங்கள் மட்டுமே பிற்காலத்தில் நூல் வடிவில் வெளியிடப்
    பெற்றுள்ளன. சுவாமிகள் எழுதிய நாடகங்களின் பெரும்பாலான
    கையெழுத்துப்படிகளை அவரது முதன்மைச் சீடர்களான தி.க.
    சண்முகம் (டி.கே.எஸ்) சகோதரர்கள் பாதுகாத்துத் தந்துள்ளனர்
    என்பது குறிப்பிடத்தக்கது.

  • முக்கிய நாடகங்கள்


  • அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தனி, சதி அநுசூயா,
    பிரகலாதா, சிறுத்தொண்டர், வள்ளித்திருமணம், ஞானசவுந்தரி,
    பிரபுலிங்க லீலா, மணிமேகலை, இலங்கா தகனம், வீர அபிமன்யு,
    சத்தியவான் சாவித்தி்ரி, சதி சுலோசனா, அல்லி அர்ச்சுனா
    போன்றவை சுவாமிகள் எழுதிய குறிப்பிடத்தக்க நாடகங்களாகும்.
    மேலும் வடமொழி நாடகமான மிருச்ச கடிகையையும்,
    சேக்சுபியரின் ரோமியோ ஜுலியட் ஆகிய நாடகங்களையும்
    தமிழாக்கம் செய்துள்ளார். பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.


    4.3.3 நடிகரும், பயிற்றுவிப்பாளரும்

    சுவாமிகள் தோற்றப்பொலிவுமிக்கவராக விளங்கினார். எனவே
    தமது உடல் தோற்றத்திற்கு ஏற்ற வேடங்களை ஆர்வமுடன்
    ஏற்று நடிக்கலானார். அக்காலத்துத் தொன்ம (புராண) இதிகாச
    நாடகங்களில் சுவாமிகளுக்கேற்ற நாடக வேடங்கள் என்னவாக
    இருக்க முடியும்? ஆம், நாம் எதிர் பார்த்தது போல எமதருமன்,
    சனீசுவரன் முதலிய வேடங்கள் தாம்! இவ்வேடங்களால் ஏற்பட்ட
    விளைவு என்னவென்று அறிய வேண்டாமா ! சாவித்திரி
    நாடகத்தில் எமனாக நடித்த சுவாமிகள், சத்தியவானுடைய
    உயிரைக் கவர்ந்துவர முடியாத கிங்கரர்களை கோபித்துக்
    கொள்ளும் காட்சி... ! எமனாக     நடித்த சுவாமிகளின்
    தோற்றத்தைக்     கண்டு     பயந்த     ஒரு     பெண் பார்வையாளர் கருக்கலைவுக்கு ஆளானார் !

  • நடிப்பைத் துறத்தல்


  • இதுபோலவே தமயந்தி நாடகத்தில் சனீசுவர வேடத்தில்
    நடித்த சுவாமிகள் அதே ஒப்பனையோடு அருகிலிருந்த
    கிராமத்திற்குக் குளிக்கச் சென்றார். இவ்வேடத்தில் இவரை
    எதிரே கண்ட பெண்ணொருத்தி பயந்து மாண்டுபோன நிகழ்வும்
    நடந்தது. இது போன்ற நிகழ்வுகளால் மனம் நொந்த சுவாமிகள்
    நடிப்பதை முற்றிலும் கைவிட்டு நாடகம் பயிற்றுவிப்பதில் மட்டும்
    கவனம் செலுத்தினார்.

    நாடகப் பயிற்சி வழங்குவதில் சுவாமிகள் தனித் தன்மையோடு
    விளங்கினார்.     ஒரு     தலைமுறைக்     கலைஞர்களைப்
    புதுப்பொலிவுடன் உருவாக்கும் வண்ணம் திட்டமிட்டுப்
    பயிற்றுவித்தார். நடிப்பு, வசன உச்சரிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு
    இவற்றில் முக்கிய கவனம் செலுத்தினார். கடுமையான
    பயிற்சிகளை நடிகர்களுக்கு வழங்கினார். அவர்கள் பிற்காலத்தில்
    மிகச்சிறந்த கலைஞர்களாக     விளங்கினார்கள் என்பது
    குறிப்பிடத்தக்கது.


    4.3.4 நாடகக் குழுக்கள்

    தமிழ் நாடக மேடையில் குடிகொண்டிருந்த ஒழுக்கக்
    கேட்டைக் களைய நல்ல நாடகங்களை உருவாக்குவது
    இன்றியமையாதது என்பதைச்     சுவாமிகள் உணர்ந்தார்.
    இச்செயல்தான் நல்ல பார்வையாளரை உருவாக்க முடியும்.
    எனவே இவ்வகையில் நாடகக் குழுவை உருவாக்கத் துணி்ந்தார்
    சுவாமிகள். நாடகத்தையே தொழிலாகக் கொண்டு நாடகம்
    படைத்து அளிக்கும் தொழில் முறை (Professional) நாடகக்
    குழுக்களாக இவை அமைந்தன.

  • சமரச சன்மார்க்க சபை


  • 1910-இல் சமரச சன்மார்க்க சபை என்றும் நாடகக் குழுவைச்
    சுவாமிகள் தோற்றுவித்தார். குழுவின் பெயரே நாடகக் கலையின்
    புனிதத் தன்மையையும்,     நற்பண்பையும் விளக்குவதாக
    அமைந்துள்ளதன்றோ! ஆம், சிறுவர்களை அறிமுகம் செய்து
    தமிழ் நாடக மேடையைப் புனரமைக்கும் முதல் முயற்சி இது.

  • தத்துவ மீன லோசனி வித்துவ பால சபை


  • தொடர்ந்து சிறுவர்களையே கொண்டு பால சபை முறை
    என்னும் புதிய சோதனை முயற்சியை மேற்கொண்டார்.
    இவ்வகையில் 1918-இல் மதுரை தத்துவ மீன லோசனி வித்துவ
    பால சபை என்னும் குழுவைத் தொடங்கினார். இக்குழுவில் தான்
    பிற்காலத்தில் தமிழ் நாடகக் கலைக்குப் பெரும் பணியாற்றிய
    டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகப் பயிற்சி பெற்றனர் என்பது
    குறிப்பிடத்தக்கது.

  • தொழில் முறை நாடகக் குழு


  • தமிழகத்தில் தொழில் முறை நாடகக் குழுக்களின் சீரான
    செயல்பாட்டுக்குச் சுவாமிகள்     வி்த்திட்டார் . இவ்வகைக்
    கலைஞர்களின் வாழ்வே நாடகத்தை மையமாகக் கொண்டிருந்தது.
    நாடகத் தொழில் தவிர வேறு தொழில் தெரியாமல் தமது
    வருவாய்க்கு நாடகத்தை     நம்பியிருந்த கலைஞர்களுக்குச்
    சுவாமிகள் நம்பிக்கை ஊட்டினார். பல தொழில் முறை நாடகக்
    குழுக்கள் தமிழகத்தில் தோன்றின. ஒவ்வொன்றும் ஒரு
    நிறுவனமாகச் செயல்படலாயிற்று. கலைஞர்கள், குழு மலோளர்,
    சட்டாம்பிள்ளை, பயிற்றுவிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள்
    எனப் பல பிரிவுகள் தொழில் முறைக் குழுக்களில் செயல்பட்டன.


    4.3.5 நாடகப் பங்களிப்பு

    சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் பணியினை மூன்று
    நிலைகளில் விளக்கலாம்.

    1)
    மக்களுக்குத் தெரிந்த கதை மூலம் மக்களுக்காக எளிய
    நடையில் நாடகம் உருவாக்கல்.
    2)
    மேடையில் ஒழுக்கம், கட்டுப்பாடு
    3)
    கலைஞர்கள் நிலையில் புதிய பரிணாமம்

  • நாடகக் கதைகள்


  • சுவாமிகள் எழுதிய நாடகக் கதைகள் பெரும்பாலும்
    மக்களுக்கு அறிமுகமானவை. எளிய தமிழ் நடையில் அவரது
    படைப்பு அமைந்தது. தமிழிசைப் பாடல்கள் விரவி வந்தன.

    அக்காலக் கட்டத்தில் மக்களிடையே வழக்கில் இருந்த தோடி,
    சங்கராபரணம், கல்யாணி     போன்ற பல சம்பூர்ண
    இராகங்களையும், மோகனம், ஆரபி, மத்தியமாவதி போன்ற
    இராகங்களையும்     பயன்படுத்தினார்.     அவலச்சுவைக்கு
    முகாரியையும், வீரத்துக்கு     அடாணா     இராகத்தையும்
    பயன்படுத்தினார்.     இவ்வாறு     நாடகப்பாடல்களையும்,
    நாடகங்களையும் விரைவாக எழுதி முடிக்கும் வல்லமை
    பெற்றிருந்தார். ஒரே இரவில் ஒரு முழு நாடகத்தை எழுதிய
    சாதனையாளர் சுவாமிகள். அபிமன்யு நாடகத்தை ஒரே இரவில்
    அடித்தல் திருத்தல் எதுமின்றி எழுதி முடித்தார். இந்த நாடகம்
    சண்முகத்திற்கு (டி.கே. சண்முகம்) என்ற குறிப்பும் கீழே
    எழுதப்பட்டிருந்தது.

  • சில இராகங்களுக்கான விளக்கங்கள்

  • சம்பூர்ணராகம் :
    ஏழு சுரங்களும் அமையப் பெற்றிருக்கும்
    ராகம் சம்பூர்ண ராகம் எனப்படும். இதற்கு
    மேளகர்த்தா ராகம், தாய்ராகம் என்ற
    பெயர்களும் உண்டு.
    ஆரபி :
    கோபத்திற்குரிய இராகம்
    அடாணா :
    வெறுப்பிற்குரிய ராகம்
    கல்யாணி :
    மாலை நேரத்திற்குரிய ராகம்

    மத்யமாவதி இசைக்குரிய பண் செந்துருத்தி ஆகும்.

  • ஒழுக்கம், கட்டுப்பாடு


  • தமிழ் நாடக மேடையில் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற
    அடிப்படையை வகுத்தவர் சுவாமிகள். இதனாலேயே தாம்
    பயிற்றுவித்து வந்த சிறுவர்களை ஒரு குழுவாக ஒரு சேரத் தங்க
    வைத்தார். கட்டுப்பாடு     மிக்க     பயிற்சி     முறையை
    உருவாக்கியளித்தார்.     ஒழுக்கமற்ற     சிறுவர்களை
    அப்புறப்படுத்தினார். மேடையை வழிபாட்டுத் தலத்திற்கு ஒப்பாக
    உருவாக்கிக் காட்டினார். இவரது இவ்வரிய முயற்சியினாலே தான்
    புதிய பல நாடகக் குழுக்களும் ஒழுக்கம், கட்டுப்பாடு மிக்க
    நாடகப் பணியாற்ற முனைந்தன.

  • புதிய பரிணாமம்


  • தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் நாடக வளர்ச்சிக்கான நல்ல
    நாடக நடிகர்களையும், பிற கலைஞர்களையும் உருவாக்கினார்.
    முன்பொரு காலத்தில் கலைஞர்களைக் கூத்தாடிகள் எனப்
    பெயரிட்டழைத்த இழிவான நிலையை மாற்றி அவ்வடைமொழி
    நீங்கிடும் வண்ணம் நடிகர்களை நல்ல கலைஞர்களாக உயர்த்திய
    பெருமை சுவாமிகளையே சாரும்.
    நாவில் வந்ததைப் பாடுவோம்
    நாடகம் தினம் ஆடுவோம்
    நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை
    நீங்கள் பொறுப்பீர் நாளுமே

    எனச் சிறுவர்கள் மேடையேறிய நிகழ்வு புதிய பரிணாம
    வளர்ச்சியல்லவா?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:53:34(இந்திய நேரம்)