Primary tabs
தமிழ் நாடகங்கள், கதையமைப்பில் மக்களுக்கு மிகவும்
அறிமுகமான பழங்கதைகளையே தொடக்க காலத்தில் கதை
மூலங்களாகக் கொண்டிருந்தன. தொன்ம வரலாற்றுக் கதைகள்,
கதைப்பாடல்கள், நாட்டுப்புற வீரவரலாறுகள் போன்றன
நாடகக்கதைகளாகப் படைக்கப்பட்ட நிலையை நாம் அறிந்து
கொள்ள இயலும்.
காலம் செல்லச் செல்ல, மக்களின் பிரச்சினைகளை முன்
வைக்கும் சமுதாயப் பிரதிபலிப்புடன் கூடிய சமூக நாடகவகைகள்
தோன்றலாயின.
தேசவிடுதலை இயக்கம், நாட்டு வரலாறு, தேசத் தலைவர்
வரலாறு போன்றன வரலாற்றுக்கதைகளை நாடக மூலமாக்கும்
முயற்சிக்கு வித்திட்டன.
இவ்வாறான கதை மூலங்களின் அடிப்படையில் தமிழ்
நாடகங்களை சமூக நாடகங்கள் (Social Plays), தொன்ம
நாடகங்கள் (Puranic Plays) மற்றும் வரலாற்று நாடகங்கள்
(Historical Plays) எனப் பொதுவாக வகைப்படுத்தலாம்.
சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் பல்வேறு
கூறுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் கதைக்கூறு கொண்டு
நிற்கும் நாடகத்தினைச் சமூக நாடகம் எனக் குறிப்பிடலாம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தமிழ் நாடக
மேடை, அதிகமான சமூக நாடகங்களைப் படைத்தளிக்கத்
தொடங்கியது. தங்களது நடைமுறை வாழ்க்கைக் கூறுகளை
மேடையில் காட்சியாகக் காண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம்
காட்டலாயினர். இன்னும் அதே நிலை தொடர்கின்றது.
சமூக நாடகங்கள் நாட்டுப்பற்று, தமிழர் பண்பாடு, தமிழர்
பெருமை, வாழ்வியல், இல்லற இன்பம், வாழ்வு நெறி, பெண்ணின்
பெருமை, காதல், நீதி, சீர்திருத்தம், வரதட்சிணைக்கொடுமை,
தேவதாசி முறை எதிர்ப்பு, ஒற்றுமை, அறிவியல் மேன்மை,
அரசியல் எனப் பல கூறுகளை வெளிப்படுத்தி வருகின்றன.
சமூக நாடக வெளிப்பாட்டிற்கான எடுத்துக்காட்டாக
நா.பாண்டுரங்கனின் ‘சித்தர் மகள்‘ நாடகக் காட்சியைக்
காணலாம்.
சித்தர் : உடலழகு கண்ணுக்குத்தான் விருந்து. . மனிதனுக்கு
கண் மட்டும் தானா இருக்கிறது. ஐந்து புலன்களில் ஒரு
புலன்தான் கண். விருந்து தொடக்கத்தில் தான் சுவை தரும்!
தொடர்ந்து கிடைத்தால் அதன் சுவை பறந்துவிடும். உடலழகின்
நிலை இதுதான். ஆனால் உள்ளத்தின் அழகு அறிவுக்கு விருந்து!
புலன் இன்பம் சாதாரண மனிதன் என்றால், அறிவு இன்பம்
சக்கரவர்த்தி! புலன் இன்பம் மணல்துளி என்றால், அறிவு இன்பம்
ஒரு பெரிய மலை; அவ்வளவு உயர்ந்தது.
(சித்தர் மகள், காட்சி :6)
கள்வர் தலைவன் (பம்மல் சம்பந்த முதலியார்), எதுவாழ்வு
(ராஜா), முள்ளில் ரோஜா (ப.நீலகண்டன்), பம்பாய் மெயில்
(தெ.பொ. கிருட்டிணசாமிப் பாவலர்), குமாஸ்தாவின் பெண்
(டி.கே.முத்துசாமி) போன்றன குறிப்பிடத்தக்க
சமூக
நாடகங்களாகும்.
வரலாற்று நாடகங்களும் தமிழில் குறிப்பிடத்தக்க அளவில்
உள்ளன.
அண்மைக்கால வரலாறுகள், சேய்மை வரலாறுகள்,
வீரவரலாறுகள், நாட்டுவரலாறு, தனிமனிதர் வரலாறு, தேசியத்
தலைவர் வரலாறு எனப் பல்வகையிலான வரலாறுகள் தமிழில்
நாடகமாகியிருக்கின்றன.
இவற்றில் அண்மை வரலாறு எனப்படுவது நமக்குத் தெரிந்த
நிகழ்வுகள் குறித்தனவாகும். சேய்மை வரலாறு என்பது, வரலாற்று
நிலையில் அறியக்கிடைக்கின்ற பழைய வரலாற்றுச் செய்திகளின்
அடிப்படையில் அமைந்து வருவதாகும்.
நல்ல காட்சிச் சித்திரிப்புக்கும், வளமான காட்சியமைப்புக்கும்,
வரலாற்று நாடகங்கள் உற்ற துணையாகின்றன, தமிழக மக்களும்
வரலாற்று நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். பல நாடகக்
குழுக்கள் வரலாற்று நாடகங்களைப் படைப்பதில் வெற்றி
கண்டிருக்கின்றன.
வரலாற்று நாடகங்கள் வழி நம் நாட்டின் பெருமையும், நம்
நாட்டின் முந்தைய வரலாற்று நிகழ்வுகளும், பண்பாட்டுக்
கூறுகளும் கண்முன் காட்சிப் படுத்தப்படுகின்றன. இவ்வகை
நிலை, நாட்டுப்பற்று ஏற்படுவதற்கு உதவுகிறது.
வரலாற்று நாடக வெளிப்பாட்டிற்கான எடுத்துக்காட்டாக,
சேலம் சித்தராசனின் தேசபக்தர் சிதம்பரனார் நாடகக்
காட்சியைக் காண்போம்.
“பாரத நாட்டின் பண்பு படைத்த தலைவரை, கப்பலோட்டிய
தமிழரை, 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் இந்த
மண்மாதா அழைத்துக் கொண்டாள். ஆனால் வ.உ.சி. கண்ட
சுதந்திரக் கனவு, அவர் மறைந்த 11 ஆம் ஆண்டு நினைவாக
நிலை பெற்றது. 1947 ஆகஸ்டு 15 ம் நாள் நம் பாரத
நாடு சுதந்திரம் அடைந்தது. தமிழ்ப்பெருமக்களே! கப்பலோட்டிய
தமிழனை, அவருக்குத் துணையாக நின்ற உத்தம தியாகிகளை,
சுதந்திர இந்தியா என்றும் மறவாது. அஞ்சலி செலுத்துவோமாக!
வாழ்க வ.உ.சி.. திருநாமம்.”
(தேசபக்த சிதம்பரனார்: காட்சி:41)
இரத்னாவளி (பம்மல் சம்பந்த முதலியார்), பில்கணன்
(ஏ.எஸ். ஏ.சாமி), வீரசிவாஜி (டி.எஸ்.துரைசாமி), இராசராசசோழன்
(அரு.இராமநாதன்) , அவ்வையார் (எதிராஜு லு), மனம் மலரும்
நேரம் (க.இரவீந்திரன்), முதல் முழக்கம் (ரா.வெங்கடாசலம்)
போன்றன குறிப்பிடத்தக்க வரலாற்று நாடகங்களாகும்.
மக்களுக்கு அறிமுகமான பழங்கதைகளே தொன்ம
நாடகங்களாக வடிவம் பெறலாயின. தெருக்கூத்தினைத்
தொடர்ந்து வந்த நாடக வடிவம் தொன்மக்கதைகளையே
பெரும்பாலும் கொண்டு விளங்கின.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்ம நாடகங்கள்
தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையை
நாம் அறிந்து கொள்ள இயலும். தொன்மங்கள், காப்பியங்கள்,
நாட்டுப்புறக்கதைகள் போன்றவற்றைத் தழுவியனவாக இவை
படைக்கப்பட்டன.
தொன்ம நாடகங்களில் தமிழின் பெருமை, மொழி மாண்பு,
பெண்ணின் பெருமை, நல்லொழுக்கம் போன்றவற்றை மக்கள்
அறியும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. இக்காலத்தில் இவ்வகை
நாடகங்கள் அருகியே காணப்படுகின்றன.
தொன்ம நாடக வெளிப்பாட்டினைச் சூலமங்கலம்
வைத்தியநாத
பாகவதரின் ‘சிவலீலா‘ நாடகக்காட்சி மூலம்
உணர்வோம்.
உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும் !!!
(சிவலீலா: நாடகக்கடைசிக் காட்சி)
சதி அநுசூயா (சங்கரதாச சுவாமிகள்), மயில்ராவணன்
(டி.கே.முத்துசாமி) போன்றன தமிழில் படைக்கப்பட்ட
குறிப்பிடத்தக்க தொன்ம நாடகங்களாகும்.