தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.3-அறிவியல் மொழிபெயர்ப்புகளின் வரலாறு

2.3 அறிவியல் மொழிபெயர்ப்புகளின் வரலாறு


     பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது கி.பி.1832-இல் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அறிவியல் நூல்கள் தமிழாக்கப்பட்டு வருகின்றன. இவை அறிவியல் தமிழுக்கு வளம் சேர்ப்பவை ஆகும்.


2.3.1 தொடக்கக் காலம்

பூமி

    தமிழின் முதல் அறிவியல் நூலான ‘பூமி சாஸ்திரம்’, இரேநியஸ் யுசையரால் 1832-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சர்ச் மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் புவியியல் தொடர்பான ஐம்பத்தொரு கலைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

     பின்னர் ‘பூமி சாஸ்திரச் சுருக்கம், பூமி சாஸ்திரப் பொழிப்பு, பூமி சாஸ்திரப் பாடங்கள்' ஆகிய நூல்கள் 1846 -ஆம் ஆண்டு வெளிவந்தன. இந்நூல்கள் ஆங்கில மொழியில் வெளியான நூல்களைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டனவாகும்.

    1848 - ஆம் ஆண்டு இலங்கைக்கு மருத்துவத்துறை ஆசிரியராகப் பணியாற்ற வந்த டாக்டர் ஃபிஷ்கிறீன் அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் சிறந்து விளங்கினார். டாக்டர் கட்டர், ஆங்கிலத்தில் எழுதிய ‘Anatomy, Physiology and Hygiene’ என்ற மருத்துவ நூலினை ‘அங்காதீபாத சுகரண வாத உற்பாவன’ என்ற பெயரில் 1852-இல் ஃபிஷ்கிறீன் மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மருத்துவ நூலாகும். 1857-இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பெண்களின் பிள்ளைப்பேறு பற்றி விவரிக்கும் மருத்துவ வைத்தியம் (Midwifery) என்ற நூல் ஃபிஷ்கிறீன் மேற்பார்வையில் வெளியானது.

     அதனைத் தொடர்ந்து ஃபிஷ்கிறீன் மேற்பார்வையில் மொழி பெயர்க்கப்பட்ட இரண வைத்தியம் (The Science and art of Surgery), மனுஷ சுகரணம் (Human Physiology) ஆகிய நூல்கள் சிறப்பு மிக்கனவாகக் கருதப்படுகின்றன.

    1855-இல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கரோல் விஸ்வநாதன் அல்ஜிப்ரா கணிதத்தைத் தமிழில் ‘பீஜ கணிதம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

     வெல்சுவின் Chemistry Practical and Theories என்ற ஆங்கில நூல் ‘பெயர்பே கெமிஸ்தம்’ என்ற பெயரில் சாப்மன், சுவாமிநாதன் ஆகியோர் உதவியுடன் கிறீன் மொழிபெயர்ப்பில் 1875-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

     எட்வர்ட் ஜான் வாரிங்கின் ‘Pharmacopoeia of India’ என்ற நூல் ‘இந்து பதார்த்த சாரம்’ என்ற பெயரில் 1888-ஆம் ஆண்டு வெளியானது. இதனை சாப்மன் மொழிபெயர்த்தார்.

    1885-இல் ஜேம்ஸ் மில்ஸ் எழுதிய The Indian Stock Owner’s Manual என்ற நூல் ‘இந்து தேசத்துக் கால்நடைக்காரர் சாஸ்திரம்’ என்ற பெயரில் சுப்ரமணிய முதலியரால் தமிழாக்கப்பட்டது.

     கி.பி.19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திலிருந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதில், இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.


2.3.2 நிறுவனங்களின் பங்கு


    1954-இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நாற்பதுக்கும் மேற்பட்ட பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. சராசரிக் கல்வி கற்றவரும் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எளிய நடையில் விளக்கப்படங்களுடன் வெளியான மொழிபெயர்ப்பு நூல்கள் தரமானவையாக உள்ளன.

     இந்திய அரசாங்கத்தின் தேசிய புத்தக நிறுவனம் அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

     கல்லூரி மாணவ மாணவியர் தமிழின் வழியாக உயர்கல்வி பயிலுவதற்காக, தமிழ்நாடு அரசினால் 1962-இல் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முப்பத்தைந்து அறிவியல் நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு, பின்னர் ‘தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 450 அறிவியல் நூல்களில், பல தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் விளங்கின.

     திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், மீரா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார் பிரசுரம், வானதி பதிப்பகம், கலைமகள் பதிப்பகம் போன்றவை தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த முக்கியமான பதிப்பகங்கள் ஆகும்.

     சோவியத் ரஷியாவில் சோசலிச ஆட்சி நடைபெற்ற போது, ராதுகா, புரோகிரஸ் பதிப்பகங்கள், ரஷிய அறிவியல் நூல்களை அதிக அளவில் தமிழாக்கி வெளியிட்டுள்ளன.


இவை தவிர, மோட்டார் ரிப்பேரிங், டிரான்சிஸ்டர் மெக்கானிசம், வெல்டிங், வயரிங், டி.வி.மெக்கானிசம், கம்ப்யூட்டர் போன்ற நூல்கள், ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையில் அதிக அளவில் தமிழில் வெளியாகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:56:19(இந்திய நேரம்)