தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.2

4.2 இதிகாச மொழிபெயர்ப்புகள்

மகாபாரதம்

    வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்களான இராமாயணமும்
மகாபாரதமும் சங்க இலக்கியத்தில் தொன்ம நிலையில்
கதைகளாக ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. மகாபாரதம் சங்க
காலத்திலே      முழுமையாகத்      தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டில்

மாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
     (பாண்டியர் செப்பேடு: பத்து)

என்ற தகவல் உள்ளது. எனவே பாண்டிய மன்னர்கள் நிறுவிய
தமிழ்ச் சங்கத்தினர் மகாபாரதத்தினை மொழிபெயர்த்த
செய்தியை அறிய முடிகிறது. ஆனால் தற்சமயம் அந்நூல்
கிடைக்கவில்லை.

    தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள
“அருந்திறல் பிரிந்த அயோத்தி போல” என்ற வரிகள்,
இராமாயணக் கதையினைக் குறிப்பிடுகின்றன.

    எனவே தமிழில் இதிகாசம் பற்றிய குறிப்புகள் சங்க
காலத்திலிருந்து தொடர்ந்து இடம் பெறுகின்றன என்று அறிய
முடிகின்றது.


4.2.1 மகாபாரத மொழிபெயர்ப்புகள்

    பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மன் காலத்தில்
பெருந்தேவனார், மகாபாரதத்தினைத் தழுவித் தமிழில் பாரத
வெண்பா என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் சில
பகுதிகள்தான் கிடைத்துள்ளன.

    மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டில் மகாபாரதம்
பற்றிய குறிப்பு உள்ளது. ஆசிரியர் பெயர், நூலின் பெயர்
போன்றன பற்றி அறிய இயலவில்லை.

கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வாரும்,
கி.பி.16-ஆம் நூற்றாண்டில் அரங்கநாதக் கவிராயரும்,
கி.பி.18-ஆம்     நூற்றாண்டில்     நல்லாப்     பிள்ளையும்
மகாபாரதத்தினைத் தமிழில் தழுவலாகத் தந்துள்ளனர்.

    மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கிளைக் கதைகள் தமிழில்
தழுவியெழுதப்பட்டன. நாட்டுப்புறக் கதைகளாகப் பல்வேறு
பாரதக் கதைப் பாடல்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. அல்லி
அரசாணி மாலை, பிலவேந்திரன் மாலை, நளவெண்பா,
குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் பாரதத்தினை
மூலமாகக் கொண்டவை ஆகும்.

பாரதி
ராஜாஜி

    இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த பாரதியின் பாஞ்சாலி
சபதம், கவிதை வடிவில் அமைந்தது ; இது பாரதத்தில் ஒரு
நிகழ்ச்சியை விளக்குகிறது. இராஜாஜியின் வியாசர் விருந்து
உரைநடை வடிவில் வெளிவந்த மகாபாரதக் கதை.


4.2.2 இராமாயண மொழிபெயர்ப்புகள்

கம்பர்

    வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவி,
கம்பர் எழுதிய கம்பராமாயணம் தழுவல் படைப்பாகும்.

    குணாதித்யன் சேய், இராமாயண வெண்பா என்ற நூலினை கி.பி.15-ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார்.

    தக்கை ராமாயணம், மயில் ராவணன் கதை, இராமாயண நாடகக்
கீர்த்தனை, இராமாயணச் சிந்து, இராமாயண ஓடம், இராமாயண
ஏலப்பாட்டு,     இராம காவியம்     போன்ற நூல்கள்
இராமாயணத்தினை மூலமாகக் கொண்டவை ஆகும்.

    துளசி தாசர் இந்தி மொழியில் எழுதிய துளசி ராமாயணமும்
தமிழாக்கப்பட்டுள்ளது. (‘ராம சரித மானஸ்’ என்பது மூலநூலின்
பெயர். இதுவே துளசி ராமாணயம் என்று வழங்கப்படுகிறது.)

வாலி

    இருபதாம் நூற்றாண்டில் இராஜாஜியின் சக்கரவர்த்தித்திருமகன்,
வாலியின் அவதார புருஷன் ஆகியன மக்களிடையே பெரும்
வரவேற்பினைப் பெற்ற தழுவல் நூல்கள் ஆகும்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சங்க இலக்கியத்தில் வடமொழிக் கதைகள் எவ்வாறு
தமிழில் இடம் பெற்றுள்ளன?
2.
சிவன் முப்புரம் எரித்த தொன்மம், வடமொழியில்
உள்ள எந்த நூலில் உள்ளது?
3.
புத்தரின் தம்ம பதக் கருத்து இடம் பெற்றுள்ள
புறநானூற்றுப் பாடலை எழுதிய புலவரின் பெயர்
யாது?
4.
சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இராமாயணக்
குறிப்பு யாது?
5.
‘அல்லி அரசாணி மாலை’ நாட்டுப்புறக் கதை
எந்நூலை மூலமாகக் கொண்டது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:58:05(இந்திய நேரம்)