தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1-திரைப்படங்களும் மொழிகளும்

6.1 திரைப்படங்களும் மொழிகளும்


     உலகமெங்கும் பல்வேறு     நாடுகளில்     வெளியாகும்
திரைப்படங்கள், அவை தயாரிக்கப்படும் நாடுகளின் சமூக,
அரசியல், பண்பாட்டு நிலைகளை முன்னிலைப்படுத்துகின்றன.
மனித மனத்தின் பன்முகத்தன்மைகளையும் இருத்தலின்
அடிப்படை அம்சங்களையும் திரைப்படங்கள் கேள்விக்கு
உள்ளாக்குகின்றன. திரைப்படத்தின் காட்சிக் கோர்வைகளின்
காரணமாக, எல்லா மொழித் திரைப்படங்களையும் ஓரளவு
இலக்கிய ஆளுமைமிக்க பார்வையாளரால் புரிந்து கொள்ள
முடியும். எனினும் ஒரு திரைப்படத்தின் பல்வேறு
அம்சங்களையும்     புரிந்து     கொள்ள வேண்டுமெனில்,
மொழிபெயர்ப்பு அவசியமானதாகும். மொழித் தடையை மீறி,
பல்வேறு மொழி பேசும் மக்களையும் ஒரு திரைப்படம் சென்று
அடைய வேண்டுமெனில் மொழி பெயர்ப்பு இன்றியமையாததது
ஆகும். அப்பொழுதுதான் திரைக்கதை, உரையாடல்களின்
பொருளினை     முழுமையாக     அறிந்து கொள்ளவும்,
பாத்திரங்களின்     செயற்பாட்டிற்கான     அடிப்படைக்
காரணங்களையும் கண்டறியவும் முடியும்.


6.1.1 திரைப்படங்களில் மொழிபெயர்ப்பாளர்கள்


    இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் திரைப்படங்கள்
மௌனப் படங்களாகக் காட்சி தந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய
நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்தியாவெங்கும்
திரையிடப்பட்டன. திரையில் அசைந்திடும் படங்கள் மக்களுக்கு
வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தன. பின்னர் நவீனத் தொழில்
நுட்பத்தின் காரணமாகத் திரைப்படங்களில் இடம் பெறும்
திரைப்படங்கள் பேசத் தொடங்கின. இத்தகைய பேசும்
படங்களைத் தமிழகத்தில் திரையிட்டபோது, ஆங்கிலம்
அறிந்திராத பெரும்பான்மைத் தமிழர்கள், அதிசயம் காண்பது
போலத் திரையங்குகளில் கூடினர். எனினும் மொழி
புரியாமல் குழம்பிய மக்களின் பிரச்சனையைப் தீர்க்கப்
படத்தயாரிப்பாளர்கள் ஆலோசித்தனர். முடிவில் திரைப்படங்கள்,
அரங்குகளில் திரையிடுவதற்கு முன்னர், மொழிபெயர்ப்பாளர்கள்,
திரைப்படத்தினைக் காண்பதுடன், உரையாடலையும் மொழி
பெயர்த்துக் கொண்டனர். பின்னர்த் திரையரங்குகளில்
பிறமொழித் திரைப்படங்கள்     திரையிடப்பட்டபோது,
மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையாளர்களின் முன்னர் தோன்றி,
படத்தின் கதைச் சுருக்கத்தைத் தமிழில் கூறுவதுடன்
அவ்வப்போது உரையாடல்களையும் தமிழில் கூறினர். இதற்காக
ஒலி பெருக்கியினையும் பயன்படுத்தினர். இத்தகைய வசதி,
நகரத்தில் அமைந்திருந்த, சில திரையங்குகளில் மட்டும்
இருந்தன. அனைத்துத் திரையரங்குகளிலும் இருக்கவில்லை.
மேலும் நாளடைவில் திரையங்குகளின் எண்ணிக்கை பெருகியது.
இந்நிலையில் இருமொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள்
அதிக அளவில் கிடைக்காத காரணத்தினால், காலப்போக்கில்
மொழி பெயர்ப்பு முயற்சி நின்று போனது.

    திரையரங்குகளில் நேரடியாக, ஒலிபெருக்கி மூலம் செய்யப்பட்ட
திரைப்பட மொழி பெயர்ப்புகளைப் பற்றி அறிந்திட
இயலவில்லை. இத்தகைய மொழிபெயர்ப்புகள் மூல மொழிக்கு
எந்த அளவு விசுவாசமாக இருந்தன என்று அறிவதற்குச்
சான்றுகள் இல்லை. ஆங்கிலம் அறிந்திராத பொது மக்களுக்கு
மேலோட்டமான நிலையில் கதையைத் தமிழில் சொல்வதாகத்
திரைப்பட மொழி பெயர்ப்புகள் இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் பல்வேறு காட்சிகளின் தொகுப்பாக (Editing)
விரிந்திடும் திரைப்படத்தினை உடனுக்குடன் வரிக்கு வரி மொழி
பெயர்ப்பது அரிய செயல். மேலும் அது பார்வையாளர்களின்
ரசனைக்கு இடையூறாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:59:44(இந்திய நேரம்)