Primary tabs
நாவலின் முதற்கூறு கதைக்
கருவாகும். இதனை
ஆங்கிலத்தில் Theme, Concept என்ற
சொற்களால்
அழைக்கின்றனர். இலக்கியச் சொற்களின் கலைக்களஞ்சியம்
(Encyclopedia of Literary Terms) என்ற
நூல்
கதைக்கருவை ஐந்து வகையாகப் பிரிக்கிறது.
இவற்றில் தனிமனிதச் சிந்தனைக்
கரு, சமூகக் கரு,
உளவியல் கரு, தெய்வீகக் கரு ஆகியவற்றையே பெரும்பாலும்
தமிழ் நாவல்கள் கொண்டிருக்கின்றன.
தனி மனிதனைச்
சுற்றி, அவன் செயல்பாடுகளைச் சுற்றி
நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு அதன்
அடிப்படையில்
எழுதப்படும் நாவல்கள் தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய
நாவல்களாகும். தமிழில் க.நா. சுப்பிரமணியன்
எழுதிய
ஒருநாள் என்ற நாவல் ஒரு தனிமனிதனின் ஒரு
நாள்
செயல்பாடுகளை முழுமையாக விவரிக்கின்றது. இந்த நாவல்
தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய நாவலாகும்.
சமூகக் கரு என்பது
நாவல் தோன்றிய காலச் சூழலில்
அமையும் மனிதனைப் பற்றிப் பேசும். கு.
சின்னப்ப
பாரதியின் சங்கம் என்ற நாவல் மலைவாழ்
மக்களின்
வாழ்வியலைக் கூறுகிறது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
அடிப்படை அறிவும், வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள
வேண்டும் என்ற எண்ணமும் இல்லாத மக்களின்
சமூக
வாழ்க்கையை முழுமையாகச் சுட்டுகிறது. இந்நாவலைச் சமூகக்
கருவைக் கொண்ட நாவலாக நாம் கருதலாம்.
உளவியல்
அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்கள்
உளவியல் கரு
உடையனவாக அமைவன.
எம்.வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள் என்ற
நாவல்
மகாலிங்கம் என்ற ஒரு தனிமனிதனின் உளவியல் நிலையை
முழுமையாக எடுத்துக் காட்டுகிறது.
தெய்விகக் கரு
என்பது ஆன்மிகப் பிரச்னைகளை
அடிப்படையாகக் கொண்டது. எம்.வி. வெங்கட்ராம் எழுதிய
இருட்டு என்ற நாவல் ஆன்மீகப்
பிரச்னைகளை
அடிப்படையாகக் கொண்டு தெய்வீகக் கருவால் எழுதப்பட்ட
நாவல் எனக் கருதலாம்.