Primary tabs
கதை நிகழ்வதாகக் காட்டப்படும் இடமும் கதைநிகழும்
காலமும் நாவலின் முக்கியம் வாய்ந்த கூறுகளாகும்.
கதை நிகழும் பின்னணி அல்லது சூழல் என்பதுதான் கதை
நிகழ்விடமாகும். கதை நிகழ்வது எந்த இடத்திலும், எந்த
நேரத்திலும் அமையலாம். கதை நிகழ்விடம் நகரமாகவோ,
சிற்றூராகவோ இருக்கலாம். பாத்திரங்கள் வாழ்கின்ற இடமே
கதை நிகழ்விடமாகும். கதை நிகழ்விடத்தைக் கொண்டு
பாத்திர எண்ணிக்கை கூடுதலும் குறைதலும் உண்டு.
நாவலைப்
பொறுத்தவரை கதை நிகழ்விடம் என்பது, கதை
நிகழும் நாடு, இடம் முதலியவற்றையும், காலம்,
பருவம்
முதலியவற்றையும், சமூகச் சூழலையும் குறிக்கும்.
சில நாவல்களில் கதை நிகழ்விடம் ஓரிரு ஊர்களில்
முடிந்துவிடும். சில நாவல்களில் கதை பல ஊர்களில் நிகழும்.
க.நா.சுப்பிரமணியனின் ஒருநாள் என்ற நாவல் ஒரே நாளில்
ஒரு சிற்றூரில் தொடங்கி அங்கேயே முடிவடைந்து விடுகிறது.
எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி வேம்பலை என்ற
சிற்றூரையும், வடக்குறிச்சி என்ற சிற்றூரையும் அடிப்படையாகக்
கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். கல்கியின் பொன்னியின்
செல்வன் எனும் நாவலில் பழையாறை, தஞ்சாவூர், இலங்கை
போன்று பல்வேறு இடங்கள் வருவதை நாம் காண்கிறோம்.
கதை நிகழும் காலம் ஒரு நாளாகவும் இருக்கலாம். ஒரு
நூற்றாண்டாகவும் இருக்கலாம். பாத்திரங்களையும், கதையையும்
பொறுத்தே கதை நிகழும் காலம் உருவாகிறது. கதை நிகழும்
காலம் என்பது நாவலில் முதலில் வரும் நிகழ்ச்சிக்கும்
இறுதியில் வரும் நிகழ்ச்சிக்கும் இடைப்பட்ட காலமாகும்.
க.நா.சுப்பிரமணியத்தின்
ஒருநாள் எனும் நாவல், ஒரு நாள்
காலையில் தொடங்கி இரவு எட்டு
மணிக்கு
முடிவடைந்து
விடுகிறது. பொன்னியின் செல்வன் எனும் நாவல்
மூன்றாண்டுக் காலக் கதையைச் சொல்லுகிறது.