தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவல் படைக்கும் நெறிமுறைகள்

4.2 நாவல் படைக்கும் நெறிமுறைகள்

    நாவலைப் படைக்கும் பொழுது, சில நெறிமுறைகளைப்
பின்பற்ற வேண்டும். அனுபவங்களை முறையாகப் பதிவு
செய்தல், எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
போன்றன கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.

    படைப்பாளிகளுக்கு அளவுக்கு அதிகமான அனுபவங்கள்
தேவை. ஒரு படைப்பாளி பார்த்தவை, படித்தவை,
அனுபவித்தவை அனைத்துமே அவரது அனுபவத்தில்
சேருகின்றன. அவர் அனுபவங்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்து
நிற்பன. ஒரு     நாவலைப்     படைக்கும்     நேரத்தில்
அவ்வனுபவத்தின் அடிப்படையில் படைப்பதற்கு அவை
பயன்படுகின்றன.

    சிறுசிறு நிகழ்வுகளையும் உற்றுப் பார்த்து மனத்தில் பதிந்த
அந்நிகழ்வுகளை எழுத்தில் கொண்டுவர முயல வேண்டும்.
நாம் செல்லுகின்ற வீதிகளில், பேருந்துக்கு நிற்கின்ற
இடங்களில், பேருந்து பயண நேரங்களில், கடைத்தெருவில்,
மற்ற பொதுவிடங்களில் நிகழ்வுகள் பல நிகழக் கூடும்.
அந்நிகழ்வுகளை மனத்தில் நிறுத்தி, சேகரித்து வைத்திருக்க
வேண்டும். மறதி வந்துவிடும் என்று தோன்றினால் கையில் சிறு
குறிப்பேடு வைத்துக் கொண்டு, நம் உள்ளத்தைத் தொடும்
சிறுசிறு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிகழ்வையும் மிகுந்த ஆர்வத்தோடு பார்க்க
வேண்டும். டி.எச். லாரன்ஸ் பற்றி ஆல்டஸ் ஹஹ்சிலி
குறிப்பிடுகையில் “சாகப் போகிறவன் உலகத்தை ஆர்வத்தோடு
பார்ப்பது போலப் பார்த்தார்” என்று குறிப்பிடுகின்றார்.

    உலகில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் தேடிப்
பெறுதல் வேண்டும். அனுபவத்தைக் கொண்டு நமக்குத்
தெரிந்ததைப் பற்றி, நமக்கு ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி
எழுத வேண்டும். மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவோ, நாவலில்
சுவைகூட்ட வேண்டும் என்பதற்காகவோ நம் அனுபவத்திற்கு
மாறானதை எழுதக் கூடாது. நாம் நம்புவதை மிகுந்த
நம்பிக்கையுடன் எழுத வேண்டும்.

    நாவல் எழுதும் போது மிகக் கவனமுடன் எழுத வேண்டும்.
மதம், சாதி போன்ற பிரச்சனைகளை எழுதும்போது மிகவும்
கவனம் வேண்டும். எந்த மதத்தினரையும், சாதியினரையும்
புண்படுத்தும் வண்ணம் எழுதிவிடக் கூடாது.

    வரலாற்று நாவல்களை எழுதும்போது பெரும்பாலும்
உண்மையான கதை மாந்தர்களின் பெயர்களையே பயன்படுத்த
வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை இயன்றவரை பல்வேறு
வரலாற்று ஆதாரங்களுடன் எழுத வேண்டும். கற்பனை கலந்து
எழுதினாலும் உண்மை மறுக்கப்படக் கூடாது. சரியான தகவல்
கிடைக்காத நிகழ்வுகளை எழுதக் கூடாது.

    நாவல் என்பதைப் பிறர் படிப்பதற்காக நாம் எழுதுகிறோம்.
எனவே பிறருக்குப் புரியும் மொழி நடையில் எழுத வேண்டும்.
மறைமலை அடிகள் தமிழ் நாவல் எழுதும் போது தூய
தமிழ் நடையில் எழுதினார். அவரது நாகநாட்டரசி அல்லது
குமுதவல்லி
நாவல் செல்வாக்குப் பெறாமல் போயிற்று.

    நாவல் எழுதுபவர் தன்னை மிகச் சாதாரண வாசகனாக
நினைத்து அவனுக்கு எழும் சிரமங்களைக் கற்பனை செய்து
பார்க்க வேண்டும். வாசகர், சொல்லுக்கு அர்த்தம் தேடி
அலையுமாறு எழுதக் கூடாது. வாசகருக்குத் தெரிந்ததில்
தொடங்கித் தெரியாததைக் கூற வேண்டும்.

    தொலைக்காட்சியிலோ, நாடகத்திலோ, திரைப்படத்திலோ
நாம் காணும்போது கதை மாந்தரின் உணர்வுகளை முக
பாவத்தைக் கொண்டு பார்த்து விடலாம். ஆனால் நாவலில்
கதை மாந்தரின் உணர்வுகளைச் சொற்களே வெளிப்படுத்த
வேண்டியுள்ளது. எனவே அந்தந்த உணர்ச்சிக்கு உரிய
சொற்களைப் பயன்படுத்தி எழுத வேண்டும்.

    பெரிய பெரிய சொற்றொடர்களைப் பயன்படுத்தக் கூடாது.
சிறு சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும். ஒவ்வொரு
சொற்றொடரும் ஒரு பொருளைத் தரும் வண்ணம் எழுத
வேண்டும். தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்த
வேண்டும். தேவைக்கு அதிகமான சொல் அலங்காரம்
இருந்தால் நாவல் படிப்பதற்குச் சலிப்பு ஏற்படும். நாம் சொல்ல
வந்ததைப் புரிய வைக்க எளிமையான, அதே நேரத்தில்
தேவையான அளவு சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    எளிய சொற்கள்தாம் நாவலை விளங்க வைக்கும். எதார்த்த
நாவல் எழுதும் எழுத்தாளர்கள், வட்டார நாவல் எழுதும்
எழுத்தாளர்கள் எளிய மக்களின் மொழியையே சொற்களாக்கி
எழுதுவர். எல்லாருக்கும் தெரிந்த சொற்களையே பயன்படுத்த
வேண்டும். மொழித் தூய்மை உண்டாக்குகிறேன் என்று கூறி
யாருக்கும் புரியாத சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.



1.
நாவல் எழுதுவது எப்படி என்று கற்றுக் கொடுக்க
இயலுமா?
2.
படைப்பாளி அனுபவங்களை எவ்வாறு பெறவேண்டும்?
3.
வரலாற்று நாவல்களில் கதை மாந்தர் எவ்வாறு அமைய
வேண்டும்?
4.
நாவலில் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
5.
நாவலில் அகச் சூழலை விவரிக்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:36:38(இந்திய நேரம்)