தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தமிழில் எதார்த்த நாவல்கள்

6.5 தமிழில் எதார்த்த நாவல்கள்

  • எதார்த்தம் (Realism)
  •     இயற்கையான அல்லது உண்மை வாழ்க்கை நெறிக்குக்
    கொள்கையாலோ, நடை முறையாலோ காட்டும் மெய்ப்பற்று,
    மற்றும் தினசரி வாழ்க்கையை உயர் எண்ணம் சார்ந்தது
    ஆக்காமல் இயல்பானதாகப் பதிவு செய்தல் என்று
    யதார்த்தத்திற்கு பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் விளக்கம்
    சொல்கிறது.

        தமிழில் தொடக்க கால நாவல்கள் மிகுந்த கற்பனை
    உணர்வோடு எழுதப்பட்டனவாகவே இருந்தன. கற்பனா வாதம்
    தமிழ் நாவல் உலகில் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம்
    வரை மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்தது. வரலாற்று நாவலாக
    இருந்தாலும் சமூக நாவலாக இருந்தாலும் அவை வாழ்வின்
    எதார்த்த நிலையைவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்றன.
    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் எதார்த்தமாக
    எழுதினால் அந்த எழுத்து மக்களிடம் மிகச் சரியாகப் போய்ச்
    சேரும் என்பதைப் படைப்பாளிகள் உணர்ந்து கொண்டனர்.
    அதற்குப் பிறகே எதார்த்த நாவல்கள் தமிழில் வெளி
    வரத் தொடங்கின.

        தமிழ் நாவல் சூழலில் எதார்த்தத்தின் தோற்றம்
    ராஜமையரின்     கமலாம்பாள்     சரித்திரத்துடன்தான்
    தொடங்குகின்றது. இது கூட முன்பாதி கதை; பின்பாதி கனவு.

        1957 இல் ரகுநாதனின் பஞ்சும் பசியும் என்ற நாவல்
    யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
    1960களில்      சி.சு. செல்லப்பாவின்      வாடிவாசல்,
    சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை ஆகியவை
    எதார்த்த நாவல்களாக வெளிவந்து கதை கூறின. இதே காலச்
    சூழலில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர்
    பாலியல் நிகழ்வுகளைக் கூட எதார்த்தமாகச் சொல்லத்
    தொடங்கினர். தி. ஜானகிராமனின்      மோகமுள்,
    அம்மாவந்தாள்,    
    ஜெயகாந்தனின்     ரிஷிமூலம்
    போன்றவைகளை இதற்குச்     சான்றாகக் காட்டலாம்.
    எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ சௌராட்டிர மக்களின்
    வாழ்வை எதார்த்தமாகக் காட்டுகிறது.

        தமிழில் சமூக எதார்த்த நோக்கில் நாவல்கள் படைப்பது
    பெருகி வருகிறது. சின்னப்ப பாரதியின் தாகம், சங்கம்,
    பாமாவின் கருக்கு, சங்கதி, பூமணியின் பிறகு போன்ற
    தலித்திய நாவல்களும் எதார்த்த நாவல்களுக்குச் சான்றாக
    நிற்கின்றன.

        ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு எதார்த்த
    நாவலுக்குரிய     தன்மையோடு     விளங்குகிறது.     இது
    நாடார்களிடையே நடக்கும் பேராட்டத்தை யதார்த்தமாகச்
    சொல்கிறது.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:38:31(இந்திய நேரம்)