தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.1 தலையங்கம்

3.1 தலையங்கம்

இதழ்களில்     இடம்பெறும்     செய்திகளுக்கெல்லாம்
தலையானது ஆகவும் இதழ் நடத்துபவரின் எழுத்தாகவும்
அமைவது தலையங்கம் எனப்படும். இதனை ஆங்கிலத்தில்
Editorial என்பர். தலையங்கம்     இதழ் ஆசிரியரும் படிப்பவரும் தொடர்பு கொள்ளும் இடமாகவும் அமைகிறது.

தலையங்கம் ஆசிரியர் பகுதி என்ற பெயரிலும்
வருவதுண்டு.

தலையங்கத்திற்கென நோக்கங்கள் உண்டு. மக்கள் என்ன
எண்ணுகிறார்கள் என்ற கருத்தை     வெளியிடுவதாகவும்
அமையும்.

நோக்கம்

தலையங்கம் வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?
தலையங்கத்தின் பொருளுக்கேற்ப அதன் நோக்கமும்
மாறுபடுகின்றது. இதழ்     ஆசிரியருக்கான பகுதியாக
அமைவதால் ஆசிரியரின் நோக்கமும் தலையங்க நோக்கமாக
அமையும்.

பொதுமக்களின் கருத்து வெளிப்பாடாகவும் தலையங்கம்
அமைவதுண்டு. இதழ் வெளியாகும் காலக்கட்டத்தில் நடந்த
சில முக்கிய நிகழ்வுகள் பற்றிய கருத்தாடலாகவும் அமையும்.

கருத்து

தலையங்கம் என்ற பகுதி பொதுவாக ஒரு கருத்தைப்
பற்றி, ஒரு நிகழ்வு பற்றி, ஒரு பிரச்சனை பற்றி மக்கள்
என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெளிவாக்குவது ஆகும்.
மேலும் துறை வல்லுநர்களின் கருத்தையும் திரட்டித் தருவதால்
முடிவு காணுதல் எளிதாக இருக்கும்.

எனவே தலையங்கம் மக்களின் கருத்துப் பற்றியும்,
துறைவல்லுநர் கருத்துப் பற்றியும், ஆசிரியரின் கருத்துப்
பற்றியும் அமையும்.

மக்கள் கருத்தாயினும், துறை வல்லுநர் கருத்தாயினும்
விருப்பு வெறுப்பு இன்றி நடுவுநிலையோடு தலையங்கம்
அமைதல் வேண்டும். ஆசிரியர் தனது கருத்தைத் திணிப்பது
இதழின் வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம்.

ஒருபக்கச் சார்பு இல்லாமல், மக்களுக்குப் பயன்தரும்
கருத்தோடு நுண்மை, தெளிவு, சுருக்கம் இவற்றுடன் ஆய்வு
நிலையிலும் தலையங்கம் அமைய வேண்டும்.

எனவே இதழ்களில் ஆசிரியர் பகுதியாக அமையும்
தலையங்கம் நடுவுநிலைத் தன்மையோடு அமையும்.

கருத்து உருவாக்கல்

மக்கள் கருத்து எத்தகையது என்பதை எடுத்துக்
கூறுவதோடு மட்டுமல்லாமல், நன்கு ஆராய்ந்து மக்களுக்கு
நன்மை தரக்கூடிய கருத்தினை உருவாக்குவதும் தலையங்கமே
ஆகும். மக்களைக் குழப்பாமல் ஒரு தீர்வு காண்பதற்கு இது
உதவி செய்ய வேண்டும்.

விமர்சனத்தின் வாயிலாக உண்மைகளை வெளிச்சத்துக்குக்
கொண்டு வர வேண்டும். சிக்கலைத் தீர்க்கும் நோக்கம்
கொண்டு தெளிவாகச் செய்ய வேண்டும். நல்ல தலையங்கம்
நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் தன்மை
உடையது.

தலையங்கத்தில் இடம்பெறும் செய்திகளின் தன்மையைக்
கொண்டு அதனைப் பல வகையாகப் பிரிக்கலாம். உள்நாட்டு,
வெளிநாட்டுச் செய்திகள், வரவு செலவுத் திட்டங்கள்,
பொருளாதாரக் கொள்கை, போராட்டங்கள், தேர்தல், அரசியல்
சிக்கல்கள் முதலியன குறித்த தலையங்கங்கள் என
வகைப்படுத்தலாம்.

பொதுவாக நீண்ட கால சிக்கல்கள் குறித்த செய்திகள்
தலையங்கமாக வருவதுண்டு. காவிரிச் சிக்கல்கள், நதிநீர்ச்
சிக்கல்கள், காஷ்மீர்ச் சிக்கல்கள், ஈராக், இலங்கைச் சிக்கல்கள்
முதலியன தொடர்பாகத் தலையங்கங்கள் பரவலாக அனைத்து
இதழ்களிலும் வருவதுண்டு.

சட்ட     திட்டங்கள்     பற்றிய     தலையங்கமும்
இன்றியமையாததாக அமைந்து விடுகிறது.

வெளிநாட்டு அணு ஆயுதக் கொள்கை, மனித உரிமைச்
சட்டம், மத மாற்றத் தடைச் சட்டம், இதழியல் சுதந்திரம்,
கல்வி நிலையங்களில் சமயம் தொடர்பான குறியீடுகளை
விலக்கல், உயிர்ப்பலித் தடைச் சட்டம், கங்கை காவிரி நீர்
இணைப்புச் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர்
இடஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்புகளில் சமூக இட
ஒதுக்கீடு, அனைவரும் அருச்சகராகலாம் என்னும் சட்டம்
பற்றிய குறிப்புகள் முதலியன பற்றியும் தலையங்கம் வரும்.

சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு நலம்
தரும் கருத்துகளை     விளக்குவனவாகவும் தலையங்கம்
அமையலாம்.

எடுத்துக்காட்டாக,

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, மத நல்லிணக்கம்,
நுகர்வோர் பாதுகாப்பு, அறிவொளி இயக்கம், எய்ட்ஸ் தடுப்பு,
ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் முதலீடு, மக்கள்
தொகைக் கட்டுப்பாடு முதலிய வகைகளில் தலையங்கம்
அமையலாம்.

ஆக, தலையங்கம் அமையும் பொருளின் அடிப்படையில்
அதன் வகை அமைகிறது என்பதை அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:07:30(இந்திய நேரம்)