தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.1 துணுக்குகள்

5.1 துணுக்குகள்

இதழியலில் துணுக்குகள் மிக முக்கியமான இடத்தைப்
பெறுகின்றன என்பதை அறிகின்றோம். துணுக்கு என்பதன்
பொருள் விளக்கத்தை இனிக் காணலாம்.

சிறிய செய்தி என்ற பொருளில்தான் துணுக்கு என்ற
சொல் வந்தது. அதாவது நறுக்குத் தெறித்தாற்போல் சிறியதாகச்
சொல்லுவதாகும். இதற்குத் துக்கடா, நறுக், டிப்சு, கடி என்ற
மற்ற பெயர்களும் உண்டு.

துணுக்குகள் இதழியலில் முக்கியப் பங்கு பெறுகின்றன.
நடந்து முடிந்த, நடக்கின்ற, நடக்கப் போகின்ற தீவிரச்
செய்திகளை மட்டுமே     படித்துக் கொண்டிருப்பதில்
மனிதர்களுக்கு அலுப்பும் சலிப்பும் வந்துவிடும். அதனால்
இதழ்களில், இதழ்களை விரிய வைத்துச் சிரிக்க வைக்கும்
பகுதிகளும் தேவை. ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்
போகும்’ என்பர். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிறார்
வள்ளுவர். எத்தகைய சிந்தனைக்குரிய கருத்தையும்
நகைச்சுவையுடன் கூறலாம். அதுமட்டுமன்றிப் பெரிய பெரிய
செய்தியாக வாசிப்பதைவிடச் சின்னச் சின்னச் செய்திகள்,
கருத்துகள், குறிப்புகள் இவற்றைப் படிப்பதில் வாசகர்கள்
ஆர்வமாக இருப்பார்கள். அதனால் சிறிய செய்தி என்ற
பொருளில்தான் ‘துணுக்கு’ என்ற பெயர் வந்தது. ‘துக்கடா’
என்று கூட முன்பு ஆனந்த விகடன் போன்ற இதழ்களில்
சின்னச் சின்னச் செய்திகள் கட்டம் கட்டி வருவதுண்டு. மக்கள்
மனதில் செய்தித்தாள்     படிக்கும் ஆர்வத்தை இவை
வளர்க்கின்றன. அத்துடன் நிறையச் செய்திகளை அறிந்து
கொள்ளவும் இவை பயன்படுகின்றன.

துணுக்குகளில் சின்னச் சின்னக் கதை சார்ந்த துணுக்குகள்,
தொடர்கதை சார்ந்த துணுக்குகள் ஆகியன வருகின்றன.
சிறுவர் இதழ்களில், சிறுவர் மலரில் இவை மிகுதி.

படத்துணுக்குகள்

1894இல் ‘நியூயார்க் வேல்டு’ என்ற
இதழில் ‘மஞ்சள் ஆட்டுக்குட்டி’ (Yellow Kid)
என்ற பெயரில் வெளிவந்த துணுக்குப் பகுதி
உலகப் புகழ்பெற்றதாகக் கூறுவர். பிற்காலத்தில்
இப்பகுதியே ‘மிக்கி மௌசு’, ‘டோனால்டு
டக்’ போன்ற தலைப்புகளில் புகழ் பெற்றதாகத்
தெரிகிறது.


தமிழில் விக்கிரமாதித்தன் கதை, சிந்துபாத், அம்புலிமாமா
கதைகள், சிண்டு பிண்டு இதுபோன்ற பல, படங்களுடன்
துணுக்குகள் போல் கதை வடிவில் வருகின்றன. பல காலங்கள்
தொடர்ந்து இவை வருவதும் உண்டு. இவை குழந்தை
இலக்கியங்களாகக் கருதப்படுவதற்கு ஏற்றவை எனலாம்.

துணுக்குகளின் வெற்றிக்கு அடிப்படையாக அமைவன
அவற்றில் போடப்படும் படங்கள் எனலாம். துணுக்குகளில்
உள்ள கருத்துக்கும், நகைச்சுவைக்கும் ஏற்றாற்போல் படங்கள்
வரையப்படுகின்றன. சீரான     ஓவியமாக இல்லாமல்,
பார்த்தவுடனேயே சிரிப்பு வரவழைக்கும் கோணல்களுடனும்,
பல கோணங்களுடனும் படங்கள் அமையும். ‘ஆனந்த விகடன்’
இத்தகைய நகைச்சுவைப் படங்களாலேயே வெற்றி பெற்றது
எனலாம்.

படங்கள், மக்கள் விரைவாகக் கருத்துகளைப் புரிந்து
கொள்ளவும், சிரித்து மகிழவும் துணைபுரிகின்றன. படம்
வரையும் ஆற்றல் மிக்க கலைஞர்கள் பல்வேறு வாய்ப்பினைப்
பெறுகின்றனர். இதழ்களில் படங்கள் வரைவதற்கென்றே
பணியமர்த்தப்பட்டவர்களும் உண்டு. அத்துடன் புதிது புதிதாக
வாய்ப்புப் பெறுகின்றவர்களும் உள்ளனர்.

தோரணம் என்றால் தொடர்தல் என்று பொருள்.
தொங்குதல் என்ற பொருளும் உண்டு. துணுக்குகளைத்
தொடர்ச்சியாக, நான்கு அல்லது ஐந்து சேர்ந்தாற்போல்
தொடுத்து வெளியிட்டால் அதனைத் துணுக்குத் தோரணம்
என்பர். இதழ்களில்     ஒரே     பக்கத்தில் இங்ஙனம்
வெளியிடுவதால் இதழ்களில் இடம் மிச்சப்படுகிறது. அத்துடன்
ஒரே நேரத்தில் நிறையச் செய்திகளைப் படிப்பவர்கள் தெரிந்து
கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. தோரணத்தில் இடம் பெறும்
துணுக்குகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம். ஆனால் ஒவ்வொரு துணுக்கும் ஒரு
புதிய செய்தியாக மக்களைப் போய்ச் சேருவதாக இருக்க
வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:09:14(இந்திய நேரம்)