Primary tabs
குறுந்தொகை
முகவுரை
குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டு அடி. நீண்ட பாடல்கள் அடங்கிய அகநானூற்றை 'நெடுந்தொகை' என்று குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் - தொகுதி குறுந்தொகை என்று பெயர் பெறுவதாயிற்று.
குறுந்தொகை நூலின் செய்யுள்-தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. நற்றிணை, அகநானூறு, போலவே இதுவும் 400 செய்யுட்களாயிருத்தலே பொருத்தமுடையதாகும். இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. நற்றிணையில் முற்றும் காணப் பெறாத செய்யுள் இவ் இரண்டனுள் ஒன்றாயிருக்குமோ என்று நினைக்கவும் இடமுண்டு. 391ஆம் செய்யுள் சில பாட பேதங்களுடன் எட்டு அடியாகச் சில பிரதிகளில் எழுதப்பட்டுள்ளது என்றும், இதனை எட்டு அடியாகக் கொண்ட போதிலும், 307ஆம் செய்யுள் எல்லாப் பிரதிகளிலும் ஒன்பது அடிகளை உடையதாக இருக்கிறதென்றும், இந்தப் பாடலைக் (307) குறுந்தொகையுள் சேராதது என்று விலக்கின் 400 செய்யுட்கள் என்னும் வரையறை நிரம்பியதாகும்
'இத் தொகை முடித்தான் பூரிக்கோ. இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205 என்ற வரையறையைப் பூர்த்தி செய்கின்றது.
பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றிருக்கும் கருத்துகள் பழமையானவை. ஆனால், பாடல்களின் தலைப்பில் இடம் பெற்றுள்ள திணைக்குறிப்புகள் பழமையானவை அல்ல; நற்றிணையிற் போலப் பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.
குறுந்தொகையில் 380 செய்யுட்களுக்குப் பேராசிரியர், தமது கல்வித் திறம் விளங்க, அரியதோர் உரை வகுத்திருந்தார் என்று தெரியவருகின்றது. பேராசிரியர் உரை எழுதாத இறுதி இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதி அப் பணியை முற்றுவித்தார் என்று தெரிகிறது. பேராசிரியரின் குறுந்தொகை உரையை நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய உரையிலே ஓரிடத்தில் மேற்கோளாகவும் (பொருள். அகத். சூ. 46) எடுத்துக் காட்டியிருக்கின்றார். இந்த இரண்டு சிறந்த உரையாசிரியர்களாலும் எழுதப்பெற்ற பழைய உரை இன்று நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.