தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மிளகு
2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
112. குறிஞ்சி
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
5
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
10
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
15
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
272. குறிஞ்சி
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
5
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
10
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
15
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:17:49(இந்திய நேரம்)