தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆமை
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
5
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
10
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
15
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
256. மருதம்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
5
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
10
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
15
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,'அறியேன்' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
20
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
5
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
15
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
356.மருதம்
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
5
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
பொற் தொடி முன்கை பற்றினனாக,
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
10
கற் போல் நாவினேனாகி, மற்று அது
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
15
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
20
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர்
361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
10
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
15
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:53:30(இந்திய நேரம்)