தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முதலை(கராம்)
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
18. குறிஞ்சி
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
5
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
10
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்
72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
5
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
10
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
15
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
20
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார்
80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
5
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
301. பாலை
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி!
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
5
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
10
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர,
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
15
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
20
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
25
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;
அதுவே மருவினம், மாலை; அதனால்,
காதலர் செய்த காதல்
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:19:09(இந்திய நேரம்)