தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Inniyavai Narpathu


இனியவை நாற்பது

முகவுரை

இனியவை நாற்பது இன்னா நாற்பதோடு பெயர் ஒற்றுமை உடையது. இந் நூலாசிரியரும் கடவுள் வாழ்த்தில் கபில தேவரைப் போன்றே சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். கபில தேவர் இன்னா என்று சுட்டியதை ஒப்ப, இவரும் தாம்கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளமையால் இவரது நூல் 'இனியவை நாற்பது' எனவழங்கப் பெறுவதாயிற்று.

எனினும், இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு இந் நூலகத்து இல்லை. இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்குதான் உள்ளன(1,3,4,5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன ; இவற்றில்
எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனத்திற்கு உரியது.

மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக்கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்புஉடையது என்று கொள்ளலாம். அன்றியும் திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பதுபெரிதும் அடியொற்றிச் செல்லுகிறது. இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டனராதல் வேண்டும். திரிகடுகத்தை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர்கள் எடுத்தாளுதலினாலும், இந் நூலை எவரும் எடுத்தாளாமையினாலும், இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது என்று கருத இடமுண்டு.

இந் நூலின் பெயரை 'இனியது நாற்பது'என்றும், 'இனியவை நாற்பது' என்றும், 'இனிது நாற்பது'என்றும், 'இனிய நாற்பது' என்றும், பதிப்பாரிசியர்கள் முதலியோர் குறித்துள்ளனர். 'இன்னா நாற்பது' என்பதைப் போல 'இனியவை நாற்பது' எனஇந் நூற் பெயரைக் கொள்ளுதல் நலம்.

இந் நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார். இப் பெயரில் சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார்பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கியமை குறித்து, மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராந் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர்பெற்றிருத்தலும் ஈண்டுச் சிந்தித்தற்குரியன.

பூதஞ் சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.

பிரமதேவன் வணக்கம் பின் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். 'பொலிசை' என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்பெறவில்லை. சீவக சிந்தாமணியிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.

கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்றுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள். இந் நூல் முழுமைக்கும் செம்மையாய் அமைந்த பழைய உரை உள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:35:49(இந்திய நேரம்)