Primary tabs
முகவுரை
கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல, பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர் பெற்றுள்ளது. கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத்துண்டங்கள் என்னும் பொருளைத் தருவதாகும். ஒவ்வொருபாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப்பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளனர். அதனோடு சொல்லும் முறைமையிலும்ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல் முழுவதும் காணலாம். ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலை ஆகிய இடைப் பிறவரல்கள் இன்றி, நந்நான்கு பொருள்களைப் பாடல்தோறும் திறம்படஅமைத்துள்ள ஆசிரியரின் புலமைத் திறனும் கவித்திறனும் யக்கத்தக்கனவாம்.
இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். நாகனார் என்பது இவரது இயற்பெயரையும் விளம்பி என்பது இவரது ஊர்ப் பெயரையும் குறிப்பதாகக்கொள்ளலாம். இள நாகனார், இனிசந்த நாகனார், வெள்ளைக்குடிநாகனார், என்று இவ்வாறு 'நாகனார்' என்ற பெயரைத்தாங்கிய புலவர் பலர் தொகைநூல்களில் காணப்படுகின்றனர். எனவே, நாகனார் என்பது நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் ஒரு பெயரே ஆகும். விளம்பி என்பது ஊர்ப்பெயர் அன்றி, வேறு காரணம் பற்றிய அடைமொழியாக இருத்தலும் கூடும்.
இவர் பெயர் சங்கத்துச்சான்றோர் பெயர் வரிசையில் காணப்பெறாமையினாலும், கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப்'பிற்சான்றோர்' எனப் பேராசிரியர் குறித்துள்ளமையினாலும், இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதுதெளிவு. சங்க நூல் கருத்துகளையும், திருக்குறளின் கருத்துகளையும் இவரது நூல் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. 'நாக்கு' (75) என்ற பிற்காலச் சொல்வடிவம் இதன்கண் எடுத்தாளப் பெறுதலும், அசனம் (79),ஆசாரம் (93), சேனாபதி (52) முதலிய வடசொல் ஆட்சிகளும்,'எஞ்சாமை' (25) முதலிய எதிர்மறைத் தொழிற்பெயரை எதிர்மறை வியங்கோள் பொருளில் வழங்கியிருத்தலும், பிறவும், இவர் பிற்சான்றோர் என்பதை உறுதிப்படுத்துவனவாம். இந்நூலுள் வரும் 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்'(82) என்னும் செய்யுள் அடியும், 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் பல்லவையோர் சொல்லும்பழுது அன்றே' என்னும் சிலப்பதிகார வெண்பாப்பகுதியும் சொற்பொருள் ஒற்றுமையுடையன. 'பல்லவையோர்சொல்' என்று சிலப்பதிகாரம் சுட்டுவதால், இது அக்காலத்துப்பெருக வழங்கிய ஒரு பழமொழியாகலாம். இரண்டு நூல்களும் இதனை எடுத்தாளுதலினால், இந்நூல்கள் ஒரே காலப்பகுதியில் தோன்றியனபோலும்!
இந் நூலின் முதற்கண் உள்ள கடவுள்வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனைப் பற்றியவை. எனவே, இந் நூலாசிரியரை வைணவ சமயத்தினர் என்றுகொள்ளலாம்.
கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு நீங்கலாக
இந்நூலுள் 101 செய்யுட்கள் உள்ளன.'மதிமன்னும்
மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், நூலுள், 'கற்ப,
கழிமடம் அஃகும்(27)', 'இனிது உண்பான்
என்பான்'(58), என்னும் இரு செய்யுட்களும்
பஃறொடைவெண்பாக்கள். ஏனைய எல்லாம் நேரிசை,
இன்னிசை, அளவியல் வெண்பாக்கள்.