Primary tabs
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளமையினால், ஐந்திணை எழுபது என்னும்பெயர் பெறுவதாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணையை இவரும் நடுநாயகமாய் அமைத்துள்ளார் போலும்!
இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். அதற்குத் தக்கசான்று யாதும் இல்லை. இவரைப் பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.
நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெற
என்ற ஐந்திணை ஐம்பதும் (38),
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி
என வரும் ஐந்திணை எழுபதும் (36), ஒரே அச்சில் வார்த்தால் போன்றவை.
இந் நூலின் முதலில் விநாயகரைக்குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காண்கிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லாமையும் ஈண்டுச் சிந்தித்தற்கு உரியது. இச்செய்யுள் அனந்தராமையர் பதிப்பைத் தவிர (1931), அதற்கு முந்திய பதிப்புகளில் இல்லை. எனவே, இப் பாடல் ஆசிரியர் இயற்றியது அன்று என்றே கொள்ளலாம். எனினும், அனந்தராமையர் பதிப்பில் கொடுக்கப் பெற்றுள்ளமைபற்றி, மிகைப் பாடலாக, இப் பதிப்பிலும் நூல் இறுதியில் இணைக்கப் பெற்றிருக்கிறது.
இந் நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன.
'முட முதிர் புன்னை' எனத் தொடங்கும் ஒரு பாடல் 69-ஆம் செய்யுளாக இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திரு. சோமசுந்தர தேசிகர் பதிப்பில்(1926) காணப்படுகிறது. திரு. அனந்தராமையர் பதிப்பில் இது தரப்படவில்லை. இப் பதிப்பின் பொருட்டு ஒப்புநோக்கிய ஏட்டுச்சுவடிகளிலும் இது கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் இதனைக் 'காமம் சிறத்தல்'