1.2 நூலமைப்பு

தக்கயாகப் பரணியில் உள்ள பாடல்கள் பற்றியும், பரணி இலக்கியத்துக்குரிய உறுப்புகள் தக்கயாகப் பரணியில் இடம் பெற்றுள்ள வகைபற்றியும், அவை கூறும் செய்திகள் பற்றியும் இங்குப் பார்க்கலாம்.

1.2.1 பாடல்களும் பாவகையும்

இதில், 815 பாடல்கள் உள்ளன. இவற்றைத் தாழிசைகள் என்று குறிப்பிடுவார்கள். இவை ‘குறள் தாழிசை’ என்ற பா இனத்தில் அமைந்துள்ளன.

 • காப்புச் செய்யுள்
 • ஒரு நூலை எழுதத் தொடங்கும் முன்பு தெய்வத்தை வாழ்த்திக் ‘காக்க வேண்டும்’ என்று வேண்டுவது காப்புச் செய்யுள் எனப்படும்.

  இந்நூலில் சீர்காழியில் உள்ளவைரவக் கடவுளை வேண்டிக் காப்புச் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது.

  சீர்காழி வைரவக் கடவுள்


  பரணி இலக்கியத்தில் இடம்பெறும் பகுதிகளை ‘உறுப்புகள்’ என்று கூறுவர். அந்த வகையில் இப்பரணியில் 11 உறுப்புகள் உள்ளன. அவை வருமாறு:

  (1) கடவுள் வாழ்த்து
  (2) கடை திறப்பு
  (3) காடு பாடியது
  (4) தேவியைப் பாடியது
  (5) பேய்களைப் பாடியது
  (6) கோயிலைப் பாடியது
  (7) பேய் முறைப்பாடு
  (8) காளிக்குக் கூளி கூறியது
  (9) கூழ் அடுதலும் இடுதலும்
  (10) களங்காட்டியது
  (11) வாழ்த்து

 • கடவுள் வாழ்த்து
 • இதில் உமாபாகர், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர் ஆகிய நான்குபேரையும் வணங்கிக் கடவுள் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது.
   

 • கடை திறப்பு
 • வீட்டில் உள்ள பெண்களைக் கதவைத் திறக்கும்படி கூறுவது கடை திறப்பு எனப்படும். இதில் தக்கன் யாகத்தை அழித்து அவனுக்கு உதவிய தேவர்களைத் தோற்று ஓடச் செய்த வீரபத்திரக் கடவுளின் வெற்றியைப் பாடுவதற்காக, தேவமங்கையர், இராசராசபுரத்துவீதியில் உள்ள மாதர், வித்தியாதர மகளிர், நாக கன்னியர் போன்ற பெண்களைக் கதவைத் திறக்கும்படி அழைக்கிறார்கள்.

 • காடு பாடியது
 • கொற்றவையாகிய காளி எழுந்தருளி உள்ள கள்ளிச் செடிகள் நிறைந்த வெப்பம் மிகுந்த சுடுகாடு, அதைப்பற்றிப் பாடுவது காடுபாடியது எனும் பகுதி காளி கோயிலைச் சுற்றி உள்ள சோலைகளின் பெருமை, காளி கோயிலுக்கு வந்து வழிபடக்கூடிய திருமகள் முதலிய தெய்வங்கள், அஞ்சாமல் தம் குடலின் உதிரத்தை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து வழிபடும் வீரர்களின் செயல் ஆகியவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.

  காளி

 • தேவியைப் பாடியது
 • இதில், “தேவியாகிய கொற்றவை சாதாரண தெய்வம் அல்லள். அகில லோகமாதாவே, மாயோளே” என்பன போன்று தேவியின் பெருமையும், "அவளுக்கு அணிவிக்கப்படும் மலரோ சாதாரண வனமலர் அன்று; வானத்தில் உள்ள கற்பகமலரே, அவளை நீராட்டும் நீரோ சாதாரண மேகங்கள் தரும் மழை நீரன்று; சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையின் நீரே” என்பன போன்று தேவிக்கு உரிய பூசைப் பொருட்கள் முதலியனவும் விவரிக்கப்பட்டுள்ளன.

  வனமலரோ பூமாரி வானக் கற்பக மலரே
  கனசலமோ அபிடேகம் கடவுள் கங்கா சலமே

  (வனமலர் = காட்டு மலர்; கனசலம் = கனம் + சலம், கனம் = மேகக்கூட்டம், சலம் = நீர்)
   

 • பேய்களைப் பாடியது
 • இதில் பேய்களின் உருவ வருணனையும், அவற்றின் பசி மிகுதியும் விவரிக்கப்பட்டுள்ளன.

  வாய்எழப் புகைந்து கீழ் வயிறுஎரிந்து மண்டுசெந்
  தீயெழக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே

  பேய்களின் கீழ் வயிற்றில் பசி மிகுதியானதால் செந்தீ மண்டி எரிகிறது. அந்தத் தீ மேலே எழுந்து தலையைக் கொளுத்தி விட்டது போல, செந்நிறமாக முடி காணப்படுகிறது. வயிற்றில் எரியும் நெருப்பின் புகை வாய்வழியாகச் செல்லுகிறது.

 • கோயிலைப் பாடியது
 • இதில் முதலில் காளி கோயிலின் தோற்றம், அதில் உள்ள ஆலமரம், அரவுக்கு அரசனாகிய ஆதிசேடன், காளியின் பஞ்சாயுதங்களாகிய (ஐந்து ஆயுதங்கள்) தண்டாயுதம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றின் சிறப்பு என்பன ஒட்டக்கூத்தரால் கூறப்பட்டுள்ளன.

  பின்னர், திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனைச் சைவ சமயத்தவனாக மாற்றிய திறம் பற்றி சகல கலாவல்லியாகிய சரசுவதி கூறினாள். அதைக் கேட்ட காளி தேவி சரசுவதியைத் தன் கோயில் முன் இருக்கும்படி கூறினாள் என்று பாடியுள்ளார், ஒட்டக்கூத்தர்.

 • பேய் முறைப்பாடு
 • பேய்கள் தாம் பசியோடு இருப்பதாகவும் தமக்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் காளியிடம் முறையிடுவது பேய் முறைப்பாடு எனப்படும்.

  இப்பகுதியில் பேய்கள், பண்டைக்காலத்தில் பெரும்போர்கள் நடந்தன. அவற்றில் இறந்தவர்களை நாங்கள் பசியாற உண்டோம். ஆனால் இப்போது பசியால் வருந்துகிறோம் என்று முறையீடு செய்கின்றன.

  அப்போது தக்கன் யாகத்தை அழிக்கச் சிவபெருமானோடு சென்ற பூதகணப் படைகளுள் ஒன்றான ஒரு பேய் ஓடிவந்து, பசி மிக்கவர்கள் என்னோடு வாருங்கள் என்று அழைக்க, அப்பேயிடம் காளிதேவி சிவபெருமான் தக்கன் யாகத்தை எப்படி அழித்தார் என்று வினவுகிறாள். அப்போது அப்பேய் அந்த வரலாற்றைக் கூறத் தொடங்குகிறது.

 • காளிக்குக் கூளி கூறியது
 • தக்கன் சிவபெருமானை மதிக்காமல் யாகம் செய்தது; அதில் அவன் பார்வதியை அவமானப் படுத்தியது; அதை அறிந்த சிவபெருமான் வீரபத்திரக் கடவுளை அழைத்து அவ்வேள்வியை அழிக்கச் சொன்னது; அவ்வாறே தக்கனது யாகம் அழிக்கப்பட்டது; அதனால் அவனுக்கு உதவிய தேவர்கள் எல்லோரும் அழிந்து பேய்களாக மாறியது என்றவாறு சிவபெருமான் தக்கன் யாகத்தை அழித்த வரலாறு இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.

 • கூழ் அடுதலும் இடுதலும்
 • இக்கதையைக் கேட்ட காளி தேவி மகிழ்ந்து பேய்களுக்கு உணவிடக் கூழ் சமைக்கச் சொல்கிறாள். பேய்களும் இறந்த தேவர்களின் உடல்களைக் கொண்டு சமைத்து, உண்டு மகிழ்கின்றன; மகிழ்ந்து இரண்டாம் இராசராசனையும், அவன் முன்னோர்களையும் புகழ்ந்து பாடுகின்றன.

 • களங்காட்டியது
 • போர்க் களத்தில் இறந்து கிடப்போர் யார் யார் என்று சுட்டிக்காட்டியது களங்காட்டியது (களம்= போர்க்களம்) எனப்படும்.

  போர்க் களத்தில் இறந்து கிடப்போர்

  இப்பகுதியில் சிவபெருமான் பார்வதியோடு தோன்றி யாகத்தை அழித்த போது தன்னை எதிர்த்த தேவர்கள் இறந்து இந்த இந்தப் பேயாக உள்ளனர் என்று காட்டுகிறார். அப்போது பார்வதி தேவி ‘அவர்கள் மேல் நான் கொண்ட கோபம் தணிந்து விட்டது, நீங்களும் சினம் தணிந்து அருள வேண்டும்’ என்கிறாள். அதற்குச் சிவபெருமானும் இரங்கி, தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையையும், உயிரையும் அருளினார். மற்றவர்களுக்கும் உயிர் கொடுத்தார். இதனால் அவர்கள் வீரபத்திரக் கடவுளை வாழ்த்தி வலம் வந்து தத்தம் இடம் சென்றனர்.

 • வாழ்த்து
 • இறுதியாக உள்ள ‘வாழ்த்து’ என்ற பகுதியில் தன்னை ஆதரித்த வள்ளலாகிய இரண்டாம் இராசராசனைப் புகழ்ந்து பாடுகிறார், நூலாசிரியர்.

  தன்மதிப்பீடு : வினாக்கள் - I

  1) பரணி என்றால் என்ன?
  2) பரணி புறப்பொருள் நூலா அல்லது அகப்பொருள் நூலா?
  3) தக்கயாகப் பரணியை எழுதியவர் யார்?
  4) இந்நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
  5) தக்கயாகப் பரணியில் உள்ள பரணி உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
  6) ஒட்டக்கூத்தருக்கு உரிய சிறப்புப் பெயர்கள் யாவை?