4.1 சீவக சிந்தாமணி

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

4.1.1 பெயர்க் காரணம்

சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. இந்நூலிற்கு இப்பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒளி கெடாத மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்த மானதாகும். இந்நூல் தோன்றிய காலம் முதல் புகழ் குன்றாது நின்று நிலவுவதே தக்க சான்றாகும்.

இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.

காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.

4.1.2 நூலாசிரியர்

சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் ‘தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்’ என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.

4.1.3 நூல் கூறும் செய்தி

சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.

4.1.4 நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

4.1.5 நூலின் சிறப்பு

சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.

சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் எத்தனை ? [விடை]
2. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் பெயர் என்ன ? [விடை]
3. சீவகனின் பெற்றோர் யாவர் ? [விடை]
4. சிந்தாமணி என்றால் என்ன ? [விடை]
5. சீவக சிந்தாமணியை ‘மணநூல்’ என்றழைக்கக் காரணம் என்ன ? [விடை]
6. இக் காப்பியம் உணர்த்தும் சமயம் யாது ? [விடை]
7. சீவக சிந்தாமணியின் முதல் நூல்கள் யாவை ? [விடை]