4.3 ஆசிரியப்பாவின் இனம்

ஆசிரியப்பா,

ஆசிரியத்தாழிசை
ஆசிரியத்துறை
ஆசிரியவிருத்தம்

என்று மூன்று இனங்களைக் கொண்டது.

4.3.1 ஆசிரியத்தாழிசை

(1) மூன்று அடியாகத் தம்முள் அளவொத்து வரும்.
(2) ஒருபொருள் மேல் மூன்று அடுக்கியும் வரும். அதாவது
ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும்;
அவற்றில் வந்த சொற்களே மீண்டும் வந்து பாட்டின்
அமைப்பும் ஒரே மாதிரி இருக்கும். இவ்வாறு மூன்றடுக்கி
வரும் தாழிசையை ஒத்தாழிசை என்பர்.

4.3.2 ஆசிரியத்துறை

(1) நான்கு அடியாய் ஈற்றயலடி குறைந்து வரும்.
(2) நான்கு அடியாய் இடையிடை குறைந்தும் வரும்.
(3) அடிகள் இடை மடக்காக வருவதும் உண்டு.
(4) இதற்குச் சீர் எல்லை இல்லை. ஆகையால் எத்தனை
சீராலும் வரும்.

(இடைமடக்கு: வந்த அடி மீண்டும் அடுத்த அடியாக மடங்கி
வருவது)

(எ.கா)

கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வார லையே.

(கல்அதர் = கற்கள் நிறைந்த வழி ; நரை உருமேறு = இடி,
மின்னல்; வரையரமங்கையர் = வனதேவதைகள்; வௌவுதல் =
கவர்தல் ; அஞ்சுதும் = அஞ்சுகிறோம்; வாரலை = வராதே)

இது நான்கடியாய் உள்ளது. ஈற்றயலடி 5 சீர் பெற்று ஏனைய
அடிகள் 6 சீர் பெற்று வந்துள்ளன.

4.3.3 ஆசிரியவிருத்தம்

கழிநெடிலடி (ஓர் அடியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட
சீர்கள் வருவது) நான்காய் வருவது ஆசிரிய விருத்தம் ஆகும்.

(எ.கா)

விடஞ்சூ ழரவி னிடைநுடங்க மின்வாள் வீசி
விரையார்வேங்
கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதி்ர்வேல் பாடு மாதங்கி
வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் ணீல
மலர்தாந்தாம்
தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம் என்னுந் தன்கைத்
தண்ணுமையே.

(அரவு = பாம்பு ; விரை = வாசனை ; மாதங்கி =
துர்க்கை ; வடிக்கண் = மாவடுபோன்றகண் ; வேய் = மூங்கில்)

இப்பாடல் அறுசீர்க் கழிநெடிலடியால் வந்த ஆசிரிய
விருத்தம்

ஆசிரியத்துறையில் ஈற்றயலடி ஏனைய அடிகளைவிடக்
குறைந்து வருவது, நீங்கள் முன்பு பயின்ற நேரிசை
ஆசிரியப்பாவை (ஈற்றயலடி குறையும்) நினைவுபடுத்துகிறது
அல்லவா ! இந்தச் சிறு ஒப்புமையே இதனை ஆசிரிய இனமாக
வகைப்படுத்தக் காரணமாயிற்று.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பா இனங்கள் யாவை?

விடை

2. குறள்வெண்பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையே
உள்ள ஒற்மை யாது?

விடை

3. வெண்டுறையின் இலக்கணம் யாது?

விடை

4. அளவொத்து வருதல் என்றால் என்ன?

விடை

5. ஆசிரியத் தாழிசையின் இலக்கணம் கூறுக.

விடை

6. ஆசிரிய விருத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது?

விடை