2.2 சைவ சமயப் பக்தி இலக்கியம் நாயன்மார்களாகிய மூவர் முதலிகளும், மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர். அதே போன்று வைணவத்தின் பெருமையையும் சிறப்பையும் பாடியவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். தமிழ்நாட்டில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் தொடங்கிய பக்தி இயக்கம் இந்தியா முழுவதிலும் பக்தி இலக்கியம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல்களும் தேவாரம் எனப் பொதுப்பெயரால் அழைக்கப்பெற்றன. தே - தெய்வம், வாரம் - இசைப்பாட்டு. தெய்வத்தைப்பாடிய, தெய்வத்திடம் பாடிய இசைப் பாடல்கள் இவை. இம்மூவரும் பாடியவை ஆயிரக் கணக்கான பாடல்கள். நமக்கு இப்போது கிடைப்பவை : சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள். இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தன. எனவே அச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன் என அழைக்கப்பட்டான். நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தினார். இதே போன்று ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்டனர். அடுத்து வந்த ஒன்பதின்மரையும் சேர்த்துஆழ்வார்கள் பன்னிருவர் எனப்பட்டனர். அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் பாசுரங்கள் எனப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்றழைத்தனர். நாதமுனிகள் என்பவர் இதனைத் தொகுத்தவர் ஆவார். நம்பியாண்டார் நம்பி தாம் தொகுத்த சைவ சமயப் பாடல்களுக்குத் திருமுறை என்னும் பொதுப் பெயர் தந்தார். அவை முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை முதலிய பெயர்களைப் பெற்றன. அதாவது, ஒன்று, இரண்டு, மூன்றுபோன்ற எண்ணுப் பெயரில் வழங்கின .திருஞானசம்பந்தருடைய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக இடம் பெற்றன. திருநாவுக்கரசருடைய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறுதிருமுறைகளாக வைக்கப்பட்டன. சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறையாக எண்ணப்பட்டது. இவ் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை ஆகும். ஒன்பதாம் திருமுறை ஒரு தொகுப்பு நூல். இது திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இதில் ஒன்பது அடியார்கள் பாடிய பாடல்கள் அடங்கும். திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை. நம்பியாண்டார் நம்பி இப்பத்துத் திருமுறைகளையே தொகுத்தார் என்றும் பதினொராம் திருமுறை அவர் காலத்துக்கு பின்னால் தொகுக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். பதினொராம் திருமுறையும் ஒரு தொகுப்பு நூலே ஆகும். காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் முதலியவர்களுடைய நூல்களோடு நம்பியாண்டார் நம்பியின் நூல்களும் இதில் அடங்கும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும். சீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார். மூன்று வயதில் உமை அம்மையின் ஞானப் பால் கிடைக்கப்பெற்று இறைவனைப் பாடும் ஆற்றலைப் பெற்றவர். ‘தோடுடைய செவியன்’ என்பது அவர் பாடிய முதல் பதிகம். தொடக்க காலத்தில் தந்தையின் தோள்மீது அமர்ந்து ஊர் ஊராகச் சென்று இசையுடன் தமிழ் பரப்பி இறைவனை வழிபட்டார் . ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்’ என்று சுந்தரர் தம் பாடலில் இவரைப் பாராட்டிப் பாடியுள்ளார். பிறகு இறைவன்அவருக்குப் பொற்றாளம், முத்துச் சிவிகை, முத்துப் பல்லக்கு, முத்துச் சின்னம் முதலியவற்றை அளித்தார். பின்னர் முத்துச் சிவிகையிலேறித் தமிழகத்தின் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றி வழிபட்டார். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும் , பிற அடியார்களும் உடன் வர, திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினார். 23 வகைப் பண்களில் தம் பாடல்களைப் பாடியுள்ளார். கூன் பாண்டியன் மன்னனின் மனைவி மங்கையர்க்கரசிமற்றும் அமைச்சர் குலச்சிறையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மதுரை சென்றார். அப்போது ‘நாளும் கோளும் சரியில்லை’ செல்லவேண்டாம் என்று தடுத்த போது, சிவன் உள்ளத்தில் இருப்பதால் நாளும் கோளும் ஒன்று செய்யாது எனக் கூறிக் கோளறு பதிகம் பாடினார். அவை சைவ அடியார்களால் இன்றும் மந்திர மொழிகளாகப் போற்றப்படுகின்றன. சம்பந்தர் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவர் என்பதைத் தாம் பாடுகின்ற பாடல்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே இணைத்தும் குறித்தும் பாடுகின்றார். வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தே, வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, தமிழால் இறைவனை ஆட்படுத்தியவர் ஞானசம்பந்தர். பல பாடல்களில் திருநெறிய தமிழ், தண்தமிழ், இன்தமிழ், ஞானத் தமிழ், ஞாலம் மல்கு தமிழ் , செந்தமிழ், முத்தமிழ் என்ற தொடர்களால் குறித்துள்ளார். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. பெரும்பாலும் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று துன்பப் பட்டதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் மாலும் தேடிக் காண முடியாத சிவன் என்றும், பத்தாம் பாடலில் சமண பௌத்த மதத் துறவிகளின் போலி வாழ்க்கையைக் கடிந்தும், எள்ளி நகையாடியும், பதினோராம் பாடலில் தம் பெயரை இணைத்தும் அப்பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பயனைக் குறிப்பிட்டும் பாடியுள்ளார். சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் (இரண்டாம் திருமுறை, பதிகம் 85,11) வானிடை வாழ்வர், மண்மிசைப் பிறவார் மற்றிதற்கு (மூன்றாம் திருமுறை, பதிகம் 118,11)
என்று ஆணையிட்டுப் பாடுவார் ஞான சம்பந்தர். தேவாரங்கள் பலவும் மந்திரங்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். ஞானசம்பந்தர் பல அற்புதங்கள் செய்தார். திருச்செங்குன்றூரில் மக்கள் குளிர் சுரத்தால் துன்புறுவதை அறிந்து பதிகம்பாடிக் குளிர்சுரத்தைப் போக்கினர். இவை போன்றவை பல. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது : மந்திரமாவது நீறு என்னும் திருநீற்றுப் பதிகம் பாடி. கூன் பாண்டியனது வெப்பு நோய் நீக்கினார். பிறகு, சமணர்களுடன் அனல்வாதம் (சமயக் கருத்துகளை ஓலையில் எழுதித் தீயில் இடுதல்), புனல்வாதம் (ஆற்றில் இடுதல்) புரிந்து சமணர்களை வென்றார். இதனால் அரசன் சைவ சமயத்துக்குத் திரும்பினான். பாண்டிய நாடும் சைவத்தைத் தழுவியது. பக்தி இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி இது. பக்தியால் நிறைவு பெற வேண்டிய மனித உள்ளம் ஈனக் கவலையால் துன்புறுவதைக் கண்டு ஞானசம்பந்தர் ‘நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்று நின்றயராதே’ (முதல். 118,8) என்று தேற்றி, உய்யும்வழி கூறுகிறார். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஊழ் வலிமிக்கதாக உள்ளதே என நலிவோருக்குப் ‘பக்தி எல்லாத் தடைகளையும் நீக்கி நன்மை பயக்கும். ஆகவே ‘பக்தி செய்ம்மின்’ என்று பாடுகிறார். தலங்கள் தோறும் சென்று பக்தியையும் தமிழையும்
வளர்த்த காழியர்கோனின்
(சம்பந்தரின்) பாடல்களில் இயற்கை
வருணனை தனியிடம் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றது.
இவருடைய பாடல்கள், சைவத் திருமுறைகளில் முதல் மூன்று
திருமுறைகளாக இடம் பெற்றுள்ளன. புதிய
யாப்பு வடிவங்களைக்
கையாண்டு ஏக பாதம், திருஎழுகூற்றிருக்கை, மாலைமாற்று,
நாலடி மேல்
வைப்பு, ஈரடிமேல் வைப்பு, கோமூத்ரி முதலிய
பாடல் வகைகளும், யமகம், மடக்கு முதலிய சொல்லணிகளும் இவருடைய காலம் 7 ஆம் நூற்றாண்டு. திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழனார்க்கும், மாதினியார்க்கும் மகனாய்த் தோன்றினார். இவர் இயற்பெயர் மருள் நீக்கியார் . இளம் வயதில் பெற்றோரை இழந்தார். சூழ்நிலையால் சமண சமயம் சேர்ந்து ‘தரும சேனர்’ ஆனார். சூலைநோய் ஏற்பட, தமக்கை திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சைவரானார். ‘கூற்றாயினவாறு’என்று முதல் பதிகம் பாடினார். இவர் முதலாம் மகேந்திரவர்மன் என்னும் பல்லவன் காலத்தவர், மன்னன் சமண சமயத்தினன். எனவே இவர் சைவத்திற்கு மாறியதும் சமணர்கள் மன்னன் மூலமாகப் பலவாறு இடையூறுகள் செய்தனர். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” (ஆறாம். 98,1) என்று கூறித் திருத்தாண்டகம் பாடி இறைவன் அருள்நோக்கி வாழ்ந்தார். வாகீசர், அப்பர், தாண்டகவேந்தர் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சைவத்தைப் பரப்பினார். மேலும் மன்னனையும் சைவனாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாம். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, வாழ்க்கைக்குத் தேவையான உண்மை நெறிகள் பலவற்றைத் தம் பாடல்களில் நாவுக்கரசர் உணர்த்தியுள்ளார். “மெய்ம்மையாம் உழவைச் செய்து” என்று தொடங்கும் (நான்காம், 96,2) பக்திப்பதிகப் பாடல், சிவகதியாம் நற்கதி அடையும் வழியைக் கூறுவதாகும். வாழ்க்கையாகிய பிறவிப் பெருங்கடைலைக் கடக்க நமக்குச் சிறப்பாக உதவுவது, நல்ல மனமும், நல்ல தெளிவான அறிவும் ஆகும். இதனை ‘மனம் எனும் தோணி பற்றி’ (நான்காம். 46, 2) எனும் பாடல் வழியாக நமக்கு உணர்த்துகின்றார். தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் (நான்காம். 1,6) என்று தமிழ் மரபைப் பின்பற்றிப் பாடியுள்ளார். அகப்பொருள் சுவை பொருந்திய பாடல்களும் பாடியுள்ளார். ‘முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்’ (ஆறாம். 25,7) என்னும் பாடல் மிகச் சிறந்த அகப்பொருள் பொதிந்த பாடலாகும். இவருடைய பாடல்கள் 4 , 5, 6 ஆகிய திருமுறைகளாக விளங்குகின்றன. இவை திருநேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. என் கடன் பணி செய்து கிடப்பதே - (ஐந்தாம். 19, 9) என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்தவர். அவர் காலத்தே வாழ்ந்த அப்பூதியடிகள் எனும் அந்தணர் திருநாவுக்கரசு என்னும் பெயரை மந்திரம்போல் போற்றி, அவரையே தெய்வமாக மதித்து வழிபட்டு வந்தார். அப்பர் பாடியனவாக இப்போது 3066 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. சுந்தரர், திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் சடையனார்க்கும், இசைஞானியார்க்கும் மகனாகத் தோன்றினார். நரசிங்க முனையரையர் என்ற மன்னரால் வளர்க்கப்பட்டார். திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தின்போது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, “வன்தொண்டர்” ஆனார். பின்னர்த் திருவாரூரில் பரவையாரையும், திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்து வாழ்ந்தார். தம்பிரான் தோழர், நாவலூரர், வன்தொண்டர் என்ற பெயர்கள் உடையவர். சிவபெருமான் இவருக்காகப் பரவையாரிடம் தூது
சென்றதாகப்
பெரியபுராணம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. 8
ஆம் நூற்றாண்டு என்பர். இவருடைய பாடல்கள் ஏழாந்திருமுறையாகும்.
1026 பாடல்களே உள்ளன. மனிதரைப்
பாடாது இறைவனைப் பாடவேண்டும் என்பது இவருடைய
கொள்கை. இவருடைய பாடல்களில் இயற்கை வருணனையும் தமக்கு முன் சைவத் தொண்டு செய்த சிவனடியார்களை- நாயன்மார்களை இவர் போற்றிப் பாடியுள்ளார். சுந்தரர் தேவாரத்தில் உள்ள திருத்தொண்டத் தொகை நாயன்மார்களின் பெயர்களையும் சிறப்புகளையும் கூறுகிறது. பெரியபுராணம் என்னும் நூல் அமைந்திடக் காரணமான திருத்தொண்டத்தொகை பக்தி இலக்கிய வரலாற்றில், குறிப்பாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சுந்தரத் தமிழில் தலங்கள் தோறும் சென்று சுந்தரர் பாடியுள்ளார். இறைவனே எல்லாம் அருளுபவன். ஆகையால் செத்துப் பிறக்கின்ற மானிடரைப் புகழ்ந்து இச்சகம் பேசுதல் தவறாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஞானசம்பந்தர் பதிகங்களைப் போல்‘கடைக்காப்பு’ அமைந்து 11 பாடல்களாக, திருப்பாட்டுப் பதிகங்கள் என்று இவருடைய பதிகங்கள் காணப்படுகின்றன. இசையோடு கூடியதாய், அழகிய தமிழில் அமைந்துள்ள இவர் பாடல்கள் சுந்தரர் தேவாரம் எனப் போற்றப்படுகின்றன. இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக விளங்கினார். பாண்டியன், ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தான். அரசனின் ஆணைப்படி குதிரை வாங்கச் சென்றார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவனே ஞானாசிரியனாக வந்து போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு ஆலயத் திருப்பணிகளிலும், அடியார்களுக்கும், மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைச் செலவிட்டார். இதனை அறிந்த பாண்டியன், பல தண்டனைகளைக் கொடுத்தான். எனவே இறைவன் நரிகளைப் பரிகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் பிரம்படி பட்டும் பலதிருவிளையாடல்களை மணிவாசகருக்காக நிகழ்த்தினான். பாண்டியனும் உண்மை உணர்ந்தான். மணிவாசகரும் இறைத்தொண்டில் ஈடுபடலாயினார். இவர் இயற்றியவை திருவாசகம், திருக்கோவையார் ஆகும். அவை நெஞ்சுருக்கும் தீந்தமிழ்ப் பாடல்கள். தெய்வ மணங்கமழும் திருவாசகப் பாடல்களைப் பாராட்டி இராமலிங்க அடிகள், வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை என்று போற்றிப் பாடியுள்ளார். டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்துள்ளார். சிவபுராணம் தொடங்கி, அச்சோப் பதிகம் ஈறாக 51 பகுதிகளையும் 656 பாடல்களையும் கொண்டது திருவாசகம், மிக எளிய சொற்கள், தெளிவான கருத்துகள், ஆழமான தத்துவங்கள் பொதிந்தவை. உள்ளத்தின் உணர்ச்சிப் பெருக்கை அப்படியே வெளிப்படுத்திய பாடல்கள். பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் (பிடித்தபத்து - 9) இளம்பெண்கள் ஆடிப்பாடும் விளையாட்டுகளைக் கொண்டு, நாட்டார் பாடல்கள் அமைப்பில் பாடியுள்ளார். அவை திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத்தோள் நோக்கம், திருச்சாழல், திருப்பொன்னூசல் போன்றவை ஆகும். தத்துவத்தின் கொடுமுடியாக (சிகரமாக) விளங்குவன இவர் பாடல்கள் ‘திருவெம்பாவை’ மார்கழி நோன்பு பற்றியது. இது பண்டைத் தமிழ் மரபைப் பின்பற்றியது. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் கோவை இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம். கோவை நூல்களில் தலைசிறந்தது. பேரின்பக் கருத்தும் சிற்றின்பக் கருத்தும் பொருந்தியுள்ள இந்நூற் பெருமையைப் பேராசிரியர் உரையால் அறியலாம். 400 கட்டளைக் கலித்துறையால் ஆன நூலாகும். திருவாசகம், திருக்கோவையார் இவ்விரண்டும் எட்டாந்திருமுறையாகும். நால்வர் அருளிய தேவார, திருவாசகம் நீங்கலாகப் பிற திருமுறைகள், பல சைவத் திருத்தொண்டர்களால் பாடல் பெற்ற பாடல்களை உடையன.
திருமாளிகைத்தேவர், சேந்தனார், சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, கருவூர்த்தேவர், வேணாட்டடிகள் ஆகிய ஒன்பதின்மர் பாடிய பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். ஓசை நயம் உடைய 301 பாடல்களைக் கொண்டு இத்திருமுறை ஒன்பதாம் திருமுறையாக அமைந்துள்ளது. இது இசைப் பாடல்களாக உள்ளது. சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு. திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காலத்தால் மூவர் முதலிகளுக்கு முந்தியவர். 5 அல்லது 6ஆம் நூற்றாண்டினர் எனலாம். தமிழகத்தில் தோன்றிய ‘முதல் சித்தர்‘ திருமூலர் என்பர். கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் உடையவர். ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் பாடினார் என்பது தமிழ் மரபும், சித்தர் மரபும் கூறும் செய்தியாகும். மந்திரங்கள் போன்று செறிவாகவும், ஆழ்ந்த பொருள் உடையனவாகவும், மறைபொருள்கள் அமைந்தனவாகவும் பாடல்கள் உள்ளன. யோகநெறி, தத்துவக் கருத்துகள், சித்த வைத்தியக் கருத்துகள் பொதிந்துள்ளன. அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் ; ‘அன்பே சிவம்’ என்று விளக்கமுறச் செய்தவர் திருமூலர். உள்ளம் பெருங்கோயில் என அக வழிபாட்டு முறையை மேற்கொண்டு ஒழுகியவர்; கடவுளிடத்துச் செலுத்தும் அன்பை மட்டுமல்லாமல் மக்களுக்குச் செய்யும் தொண்டையும் அன்பையும் அவர் வற்புறுத்தியுள்ளார். பதினோராம் திருமுறை, திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமாள், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவரின் 40 நூல்கள் இத்திருமுறையில் அடங்கும். மொத்தப் பாடல்கள் 1401. காரைக்காலம்மையார் காலத்தால் முந்தியவர் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் எனலாம். இவ்வம்மையார் பாடியவை அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்பவை. எளிய சொற்களில், ஆழமான கருத்துகளைத் தெளிவாகக் கூறுவார். இறைவனால் ‘அம்மையே’! என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். தம்முடைய சிவபக்தியைக் கண்டு ஒதுங்கிய கணவனுக்குப் பயன்படாத உடலை நீக்குமாறும், தனக்குப் பேய் வடிவம் தருமாறும் சிவனிடம் வேண்டிப் பெற்றவர். அந்தாதி, பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இசைப்பாடல்களுக்கு முன்னோடியாகவும் விளங்குபவர். சைவப் பெண்மணிகளுள் பாடல் பாடும் புலமை பெற்றவர் இவர் ஒருவரே என்னும் தகைமைக்குரியர். இவர் நூல்கள் சைவ சமயத்துப் பக்திப் பாடல்களுள் மிகப் பழமையானவை ; அவை பக்தியும் ஞானமும் நிரம்பிய பழம் பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன திருவெண்காட்டு அடிகள் என்று கூறப்படுகின்ற பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாஒருபஃது ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ளார். நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையும் இப்பதினோராம் திருமுறையில் ஒன்றாக விளங்குகின்றது. அவர் இயற்றிய திருஎழுகூற்றிருக்கை முதலிய நூல்களும் இதில் அடங்கும். நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தரைப் பற்றி 5 நூல்களும் திருநாவுக்கரசரைப் பற்றி ஒரு நூலும் பாடியுள்ளார். மேலும் திருத்தொண்டர்களைச் சிறப்பிக்கும் திருத்தொண்டர் திருவந்தாதியும் பாடியுள்ளார். திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் கருத்துகளை விரிவுபடுத்தி, சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடியுள்ளார். இதுவே பன்னிரண்டாம் திருமுறையாகும். இதுவே பெரிய புராணம் என வழங்கப்படுகிறது. இது ஒரு தேசிய இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும் அழகாகக் கூறுகின்றது. பக்தியின் மேன்மை, மக்கள் வாழ்க்கை முறை, திருத்தொண்டர்களின் தொண்டின் சிறப்பு, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிவிக்கின்றது இந்நூல். ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழில் சேக்கிழாரைப் போற்றியுள்ளார். 2.2.2 சைவ சித்தாந்த நூல்கள்கி.பி. 7, 8, 9ஆம் நூற்றாண்டுகளில் சைவ சமயம் செழித்து வளர்ந்தது. பிறகு சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவநோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சாத்திர நூல்கள் எனப்படும். முன்னர்க் கூறிய பன்னிரு திருமுறைகளும் தோத்திர நூல்கள் ஆகும். சைவ சமய சாத்திர நூல்கள் 14.
என்பன. பிற்காலத்தே அருணகிரியார், தாயுமானவர், இராமலிங்க அடிகள், சித்தர்கள் போன்றோர் தமிழையும் சைவத்தையும் போற்றியுள்ளனர்.
|