3.2 இரண்டாம் கட்ட நாவல்கள்

    தமிழின் ஆரம்பகட்ட நாவல்கள் 1879-இல் தொடங்கி 1900 வரை உள்ள காலத்தில் தோன்றியதாகக் கொள்ளலாம். இரண்டாம் கட்ட நாவல்களின் காலம் 1900 தொடங்கி 1940 வரை எனக் கொள்ளலாம். இரண்டாம் கட்ட நாவல் காலத்தைப் பலரும் இருண்ட காலம் எனக் கூறுவர். காரணம் இக்காலத்தில் மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் ஆகியன பெரிதும் வழக்கிலிருந்தன.

    முதல் உலகப்போர் தொடங்கிய காலத்தை ஒட்டித் (1910) தமிழகத்தில் நாவல்கள் ஏராளமாக வெளிவரத் தொடங்கின. அக்காலக் கதைகளின் எண்ணிக்கையை அரசுப் புத்தகப் பதிவு இவ்வாறு காட்டுகிறது.

காலம்

எண்ணிக்கை

1890-1900 39
1901-1910 201
1911-1915 350
1916-1920 244

1921-1925

255

    நாவல்களின் தலைப்புகளே, அவற்றின் தன்மையைச் சுட்டிக் காட்டுவனவாக அமைந்தன. சான்று: வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம், கனகாங்கி அல்லது கழுகுமலைக் கள்ளன், பொன்னுச்சாமி தேவர் கொலை, புருஷனை ஏமாற்றிய புஷ்பவல்லி, கள்ளனும் விலை மகளும் போன்றன.

    ஆனந்த போதினி, விவேகோதயம், மனமோகினி, எனப் பல இதழ்கள், தொடர்கதைகளை வெளியிட்டுத் தமிழ் நாவல்கள் பெருகக் காரணமாக அமைந்தன.

3.2.1 ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925)

    1866 - இல் ஆரணியில் பிறந்தவர் குப்புசாமி முதலியார். இவர் எழுதிய முதல் நாவல் லீலா. 75 நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றை எல்லாம் ஆனந்தபோதினியே வெளியிட்டது.

    பூங்கோதை, தினகரசுந்தரி அல்லது ஒரு செல்வச் சீமாட்டியின் அற்புதச் சரித்திரம், அரசூர் இலட்சுமணன் அல்லது அதியற்புதக் கள்ளன், இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன் போன்றன அவரின் நாவல்களில் சிலவாகும்.

    ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் அனைத்தும் மொழிபெயர்ப்பு நாவல்களாகும். இரத்தினபுரி இரகசியம் என்ற நாவல் ஒன்பது பாகங்களாக வெளிவந்துள்ளது.

    குப்புசாமி முதலியாரின் பெரும்பாலான நாவல்களில் முதன்மையான துப்பறிவாளனாக இடம்பெற்றவன் ஆனந்த சிங் என்ற பாத்திரமாகும்.

3.2.2 ஜே.ஆர்.ரங்கராஜு (1875-1959)

    1875-இல் பாளையங்கோட்டையில் பிறந்த ஜே.ஆர். ரங்கராஜு வின் முழுப்பெயர் ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு . 1908 முதல் நாவல்கள் எழுதத் தொடங்கினார். பெரும்பாலும் அவருடைய கதைகள் ஆங்கில நாவலின் தாக்கத்திலேயே எழுந்தனவாகும். கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலின் பூர்வ பீடிகை என்ற பகுதியில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். “நம்மூரில் வழங்கி வராத நூதனக் கோட்பாடுகளும் நாகரிகங்களும் இதில் காணுவீராகில் அவற்றைத் தவறுதலாக எண்ணாமல், அவ்விதம் நம்நாடு சீர்திருந்த வேண்டுமென்பது என்னாசை என்பதாகக் கொள்ளக் கடவீர்” என்கிறார்.

    படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதை அக்காலத்திலேயே ராஜேந்திரன் என்ற நாவலில் காட்டுகிறார்.

    சந்திரகாந்தா, ராஜேந்திரன் என்ற இரு நாவல்களிலும் கோவில்களில் நடக்கும் அக்கிரமங்கள், சாமியார்களின் போலித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்.

    இராஜாம்பாள், மோகனசுந்தரம்,     ஆனந்த கிருஷ்ணன், வரதராஜம், பத்மராஜீ, ஜெயரங்கன் போன்றன ரங்கராஜு வின் நாவல்களில் சிலவாகும்.

    இராஜாம்பாள் நாவல் 1939-இல் திரைப்படமானது. பல நாவல்கள் நாடகங்களாக நடிக்கப்ட்டுள்ளன.

    ரங்கராஜு வின் நாவல்கள் அக்காலத்திலேயே பல பதிப்புகள் கண்டிருந்தன. இராஜாம்பாள் 23 பதிப்புகள், சந்திரகாந்தா 13 பதிப்புகள், மோகனசுந்தரம் 12 பதிப்புகள், ஆனந்தகிருஷ்ணன் 10 பதிப்புகள் வெளிவந்துள்ளன.

3.2.3 வை.மு.கோதைநாயகியம்மாள் (1901-1956)

    1901-இல் சென்னையில் பிறந்தார். இவருடைய முதல் நூல் இந்திரமோகனா (1924) என்ற நாடகமாகும். 1925-இல் ஜகன்மோகினி என்ற மாத இதழைப் பொறுப்பேற்று நடத்தினார்.

    வை.மு.கோதைநாயகியின் முதல் நாவல் வைதேகி என்பதாகும். இது 1925-இல் வெளியானது. மொத்தம் 115 நாவல்கள் எழுதியுள்ளார். அதில் ஐந்து நாவல்கள் திரைப்படமாகியுள்ளன.

    அனாதைப்பெண், ராஜமோகன், தியாகக்கொடி, நளினசேகரம், ரோஜாமலர், தபால் விநோதம் போன்றன அவரின் நாவல்களில் சிலவாகும்.

    கோதைநாயகியின் நாவல்கள் யாவும் அவரின் சொந்த முயற்சிகளேயாகும். பெண்கல்வி, பண்பாடு ஆகியன நாவல்களில் முதன்மை இடம்பெற்றன.

3.2.4 வடுவூர் துரைசாமி அய்யங்கார் (1880-1942)

    தஞ்சை மாவட்டம் வடுவூரில் 1880-இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

    1919 முதல் சிலகாலம் மனோரஞ்சனி என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி, அதில் தம் நாவல்களைத் தொடராகவும் வெளியிட்டார்.

    ஏறத்தாழ 40 நாவல்களை எழுதியுள்ளார். மேனகா, திகம்பர     சாமியார்     முதலான     நாவல்கள் திரைப்படமாகியுள்ளன.

    வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டும்     தன்மையுடையனவாகவும், அறிவுப்புதிர் கொண்டனவாகவும் அமைந்திருந்தன.

    டாக்டர், சோணாசலம், நங்கை மடவன்னம், பாவாடைச் சாமியார், பச்சைக்கிளி, மருங்காபுரி மாயக்கொலை, மாய விநோதப் பரதேசி என்பன இவரின் நாவல்களில் சிலவாகும்.

3.2.5 பிறர்

    சு.சு.அருணகிரிநாதர் ஒரு தமிழ் ஆசிரியர். 1937-இல் ஆனந்த ஜோதி என்ற இதழை நடத்தினார். இவர் ஏறத்தாழ 25 நாவல்களை எழுதினார். திருக்கழுக்குன்றத்துக் கொலை அவரின் முக்கிய நாவல்களில் ஒன்று. கோபால கிருஷ்ணன் ஐயர், ஸி.கோபால கிருஷ்ண பிள்ளை, அ.சங்கரலிங்கம் பிள்ளை, தி.ச.சரவணமுத்து பிள்ளை, டி.எஸ்.டி.சாமி எனப் பலரும் துப்பறியும் நாவல்களை எழுதினர்.

3.2.6 இரண்டாம் கட்ட நாவல்களும் மரபு மாற்றங்களும்

    தமிழின் முதற் கட்ட நாவல்களிலிருந்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தாவிய நாவல் இலக்கியம் மர்மக் கதைகளுக்குள் வந்து நின்றது. இக்கால கட்டத்தைப் பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள் இருண்ட காலம் என்றே அழைக்கின்றனர்.

    தழுவல், மொழிபெயர்ப்புகள் என ஏராளமான கதைகள் தமிழுக்கு வந்தன. கொச்சைமொழி, பேச்சு வழக்கு என நாவல்களில் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இரண்டு தலைப்புகள் வைப்பது தொடங்கிய பின், பல நாவலாசிரியர்களும் அம்முறையைப் பின்பற்றினர்.     ஆங்கிலப் பின்னணி, புதிர்க்கதைத் தன்மை, பெண் கல்வி எனப் பல வகைகளில் நாவல்கள் எழுதப்பட்டன.

    இலக்கியத் தன்மை, நுட்பமான கலைப்பாங்கு என்பதாக இல்லாமல் பொழுதுபோக்கிற்காகவே இக்காலகட்ட நாவல்கள் எழுதப்பட்டன.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
செய்யுள் வடிவில் அமைந்த தமிழ் நாவல்கள் இரண்டன் பெயர்களைக் கூறுக.
2.
தமிழில் முதன்முதலாகத்     தொடர்கதையாக வெளிவந்த நாவல் எது? யாரால் எழுதப்பட்டது?
3.
தமிழில் விதவைச்சிக்கலைப் பற்றிய முதல் சமூக நாவல் எது?
4.
தமிழில் நாவல்களை வெளியிட்ட இதழ்கள் யாவை?
5.
கோயில்களில்     நடக்கும்     அக்கிரமங்களை வெளிப்படுத்திய நாவல்கள் யாவை? அவற்றை எழுதிய நாவலாசிரியர் யார்?
6.
வை.மு.கோதைநாயகியம்மாள்     எழுதிய நாவல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.