|
4.2 தொடக்க காலச் சிறுகதை முன்னோடிகள்
தமிழ் சிறுகதை ‘வாய்மொழிக் கதைகள்’ என்ற
நிலையிலிருந்து 1917 - க்குப் பிறகு பெரும் மாறுதல் பெற்றது.
சிறுகதைக்குரிய வடிவம், சுருக்கம், பாத்திரப்படைப்பு என்ற
நிலைகளில் முன்னேற்றம் கண்டது. சிறுகதைகளை வெளியிடும்
இதழ்களும் பெருகின. இதற்குரிய காரணங்கள்:
- ஆங்கிலக் கல்வி
வளர்ச்சி
- மொழிபெயர்ப்புகளின் பெருக்கம்
- இதழ்களுக்குரிய
கதைகளின் தேவை
- சுதந்திரப் போராட்டச் சூழ்நிலை
- சமூக
ஏற்றத் தாழ்வுகள்
- திராவிட, பொதுவுடைமை இயக்கங்களின் வளர்ச்சி
என்பனவாகும்.
4.2.1 வ.வே.சு ஐயர் (1881-1925)
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி, தமிழ்ச் சிறுகதையின்
வழிகாட்டி என்றெல்லாம் அழைக்கப்படுபவர் வ.வே.சு. ஐயர்.
இவர் புதுச்சேரியில் கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின்
மூலம் 1917 - ஆம் ஆண்டு மங்கையர்க்கரசியின் காதல்
முதலிய கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை
வெளியிட்டார். இதில் ஐந்து கதைகள் இடம் பெற்றிருந்தன.
பின் மூன்று கதைகளைச் சேர்த்து எட்டுக் கதைகளாக
அத்தொகுப்பு
வெளிவந்தது. ஐயர் இக்கதைகள் தவிரப் பிற
சிறுகதைகள்
எழுதியதாகச் செய்திகள் இல்லை. வ.வே.சு.
ஐயரின்
சிறுகதைகள் முந்தைய மரபுகளிலிருந்து பெரிதும
மாறுபட்டிருந்தன. வி. செல்வநாயகம் எழுதிய தமிழ்
உரைநடை வரலாறு என்னும் நூலில் “வ.வே.சு. ஐயர் நடை
இலக்கண அமைதியுடையதாயினும் பேச்சு வழக்கிலுள்ள
சொற்களில் ஊற்றெடுத்ததனாலேயே அது உயிர்த்துடிப்பு
உள்ளதாக விளங்குகிறது’’ என்கிறார்.
வ.வே.சு. ஐயர் தம் கதைகள் பற்றிக் கூறும்போது
“கிட்டத்தட்ட அரசமரம் பேசியபடியே
எழுதியிருக்கிறேனாதலால் படிப்போர் அக்கதையில்
செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன்’’
என்கிறார்.
- பழைய சம்பிரதாயக் கதைகள் போலல்லாமல் புதிய
மரபில் கதையம்சம், வடிவ அமைப்பு, உணர்வு என்ற
அம்சங்களைக் காட்டியுள்ளார்.
- கதையைப் புதிய முறையில் தொடங்குவது வ.வே.சு.
ஐயர் படைத்ததலிருந்து தான் ஆரம்பமானது.
- 1915 - இல் விவேகபோதினி இதழில் வெளிவந்த
குளத்தங்கரை அரசமரம் என்ற கதையில்
ஒரு
மரமே
கதை சொல்வதாக ஐயர் எழுதியுள்ளார்.
4.2.2 புதுமைப்பித்தன் (1906-1948)
வ.வே.சு. ஐயரைத் தொடர்ந்து நாரண துரைக்கண்ணன்,
தி.ஜ. ரங்கநாதன் போன்றோர்களும் அதே பாதையில் சில
கதைகளைப் படைத்து வந்தனர்.
புதுமைப்பித்தனின் எழுத்து, தமிழ்ச் சிறுகதையின்
போக்கையே மாற்றியது.
சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய இவர்
எழுத்திலும், கருத்திலும், கதைப்போக்கிலும் புதுமையை
உண்டு பண்ணித் தமிழ் இலக்கியத்திற்குத் தனிச்சிறப்பை
உண்டாக்கினார். தம்முடைய சிறுகதைகள் பற்றிக்
கூறும்போது "வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள்
மாதிரித்தான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை
உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும்
பொறுப்பாளியல்ல’’ என்பார்.
புதுமைப்பித்தனின் கதைகளில்
கடவுளும் கந்தசாமி
பிள்ளையும், கயிற்றரவு, அன்றிரவு, சாபவிமோசனம்
என்பன உட்படப் பல கதைகள் உலகத் தரம்
வாய்ந்தவைகளாகும்.
-
சிறுகதையில் புதுப்பது உத்திகளின் மூலம் கதை கூறினார்.
-
திருநெல்வேலி வட்டார வழக்கைக் கையாண்டார்.
-
தத்துவ விசாரணைகள், வருணனைகள், பேச்சு வழக்குகள்,
தாவித் தாவிச் செல்லும் நடை, இதுவரை சந்தித்திராத
புதிய பாத்திரங்கள் எனப் பல புதுமைகளைப் புகுத்தினார்.
-
கடவுளும், காலனும், கிழவியும், குழந்தையும் அவர்
கதைகளில் நடமாடினர்.
-
மன உணர்வுகள் பல கதைகளில் வெளிப்படும்படி
எழுதினார்.
4.2.3 கு.ப. ராசகோபாலன்
கு.ப.ரா என அழைக்கப்படும் கு.ப. ராசகோபாலன்
புனர்ஜென்மம், காணாமலே காதல், கனகாம்பரம், சிறிது
வெளிச்சம் எனச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
மென்மையான உணர்வுகளை இவர் சிறுகதைகளுக்குள்
கையாண்டுள்ளார்.
- பாத்திரப்படைப்பு இவர் கதைகளில் சிறப்பானது.
- பிராமணர் வழக்கும், அக்கிரகாரத்து மனிதர்களும் இவர்
கதைகளில் அதிகம்.
- வடமொழி, ஆங்கிலச் சொற்களைக் கதைகளில் கலந்து
படைத்தார்.
4.2.4 கல்கி
திரு.வி.க. நடத்திய நவசக்தி இதழின் உதவி ஆசிரியராக
இருந்த கல்கி, பின் ஆனந்த விகடன், கல்கி இதழ்களில்
பணியாற்றினார். பாமரரும் பண்டிதரும் விரும்பிப்
படித்தற்குரிய நடையொன்றினை இவர் கையாண்டார்.
- நகைச்சுவையுடன் கதைகளைப் படைத்தார்.
- நேரடியாகக் கதை சொல்லும் முறையைக் கையாண்டார்.
- பிறமொழிக் கதைகளைத் தழுவியும் பல சிறுகதைகளைப்
படைத்தார்.
4.2.5 மௌனி (1907-1985)
சிறுகதைத் திருமூலர்
என்று பாராட்டப்படும் மௌனி
மிகக் குறைவாகவே எழுதியுள்ளார். வருணனைகளும்,
சிக்கலான மனநிலைகளும் இவர் சிறுகதைகளில் அதிகம்
காணப்படும். மணிக்கொடி இதழில் இவருடைய கதைகள்
வெளியாகின.
- குறியீடுகள், சிந்தனைகள் இவருடைய கதைகளில்
அதிகம்.
- பல சோதனை முயற்சிகளைச் சிறுகதைகளில் செய்து
பார்த்தார்.
4.2.6 ந. பிச்சமூர்த்தி (1900-1976)
மணிக்கொடி இதழில் பல சிறுகதைகளைப்
படைத்துள்ளார் ந. பிச்சமூர்த்தி. தத்துவ நோக்கில் பல
கதைகளைப் படைத்தார். கவிதை நடையில்
தனித்தன்மையோடு இவருடைய கதைகள் அமைந்தன.
பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி, மண்ணாசை,
பெரியநாயகி உலா போன்ற பல கதைகள் திறனாய்வாளர்
பாராட்டைப் பெற்றுள்ளன. பூனை, பாம்பு, எறும்பு, கிளி
போன்றன கூட இவருடைய கதைகளில் இடம்பெறுகின்றன.
4.2.7 மற்றவர்கள்
சுதந்திரத்திற்கு முன் எழுதிய எழுத்தாளர்கள் என்ற
வகையில் சி.சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன், பெ.கோ.
சுந்தரராஜன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
இவர்களுடைய பெரும்பாலான
கதைகள் மணிக்கொடி
இதழிலேயே வெளியாயின. கலைமகள்
இதழிலும் இக்கால
கட்டத்தில் சிறந்த சிறுகதைகள் வெளியாயின.
1947-க்கு முந்தைய சிறுகதைகளை மதிப்பிடும்போது அவை:
-
வாய்மொழிக் கதைகளிலிருந்து வேறுபட்டிருந்தன.
-
வடிவம், உள்ளடக்கம் மாற்றம் பெற்றன.
-
வட்டார வழக்கில் எழுதும்போக்கு ஏற்பட்டது.
-
மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கதைகள்
அமைந்தன.
-
வடமொழிக் கலப்பு, ஆங்கிலக் கலப்புக் காணப்பட்டன.
-
பெரும்பாலும் படித்த உயர் வர்க்கத்தினர், அலுவலக
வேலையில் உள்ளோர் எழுத்தாளர்களாக விளங்கினர்.
-
அக்கிரகாரப் பின்னணியே சிறுகதைகளில் அதிகம்
காணப்பட்டது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
கதை கூறும் மரபு எவ்வாறு தோன்றியது?
|
|
2. |
தமிழில் அச்சுக்கு வந்த முதல் கதைத்தொகுதி
எது? எழுதியவர் யார்? |
|
3. |
தொடக்ககாலத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குரிய
காரணிகள் யாவை? |
|
4. |
வ.வே.சு. ஐயர் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி
என்பதை விளக்குக.
|
|
5. |
புதுமைப்பித்தனின் சிறுகதைச் சிறப்பம்சங்கள்
யாவை?
|
|
6. |
சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ச்சிறுகதையின்
போக்குகள் யாவை?
|
|
|