சொல் பாடம்
Lesson
'ப' என்பது ஓர் எழுத்து.
'ழ' என்பது ஓர் எழுத்து.
'ம்' என்பது ஓர் எழுத்து.

    இந்த மூன்று எழுத்துகளை ஒன்று சேர்த்தால் 'பழம்' என்று ஒரு சொல்
கிடைக்கும்.

பழம்
    'பழம்' என்பது கனிந்துள்ள பயனுடைய நல்ல பழம் என்ற ஒரு பொருளைக்
குறிக்கும். 'பழம்' என்ற சொல் ஒரு பொருளைத் தருவதால் அதனைச் சொல் என்று
கூறலாம்.

    இந்த எழுத்துகளையே பின்வருமாறு எழுதிப் பார்ப்போம்.

1. 'ழம்ப'
2. 'ம்பழ'
3. 'ழபம்'
4. 'பம்ழ'

    மேலுள்ள நான்கையும் பாருங்கள். படியுங்கள். படிக்க வேடிக்கையாய்
உள்ளது அல்லவா! இவை எழுத்துகள் கூடிச் சொல் போல இருக்கின்றன.
இருந்தாலும் இவை பொருள் தரவில்லை. எனவே, இவை சொற்கள் அல்ல.

    எழுத்துகள் சேர்ந்து நின்று, பொருள் தந்தால் அதையே சொல் என்று
கூறுகிறோம்.

ஓர் எழுத்து - ஒரு சொல்
பை
கை
    பை, கை இவை ஒற்றை எழுத்துகள். இருந்தாலும் இவை ஒரு பொருளைக்
குறிக்கின்றன. இவ்வாறு ஓர் எழுத்தே ஒரு பொருள் குறிப்பதாக இருந்தாலும்
அது சொல் என்று கொள்ளப்படும். இவற்றை ஓரெழுத்து ஒருமொழி எனக்
கூறுவார்கள்.

திணை, பால், எண், இடம், காலம்
    சொல் என்பது ஒரு பொருளைத் தருவதாக இருக்கும் என்பது இப்போது
உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அதனுடன் அது திணை, பால், எண், இடம்,
காலம் ஆகியவற்றையும் தரும்.

    மாணவர்களே! திணை, பால், எண், இடம், காலம் என்றால் என்ன என்று
இனித் தெரிந்து கொள்வோமா?

திணை
இளங்கோ செல்வி மக்கள் தேவர்
• உயர்திணை
    படங்களைப் பார்த்தீர்களா? இவர்களுக்கு இதைச் செய்யலாம், இதைச்
செய்யக்கூடாது என்பது தெரியும். இவ்வாறு அறிந்து செய்யக் கூடிய இவர்கள்
உயர்திணையில் அடங்குவர்.

    எனவே மக்கள், தேவர் உயர்திணை எனப்படுவர்.
• அஃறிணை
மரம் நாய் மயில்
கல் மண்
    மரம், நாய், மயில், கல், மண் - இந்தப் பொருட்களுக்குத் தானாக அறிந்து
எதையும் செய்யத் தெரியாது. எனவே இவையெல்லாம் அஃறிணை எனப்படும்.

• உங்களின் கவனத்திற்கு
    மக்கள், தேவர் உயர்திணை.

    இவர்கள் தவிர, மற்ற உயிர் உள்ளவை, உயிர் இல்லாதவை எல்லாம்
அஃறிணை.

• பால்
    சொல் என்பது பால் (Gender) என்பதையும் தரும்.
இவன் ஆண் இவள் பெண்
இவர்கள் பலர்
இது ஒன்று
நாய் மயில் மரம்
இவை பல
நாய்கள் மயில்கள் மரங்கள்
எனவே
ஆண் பெண்
பலர்
ஒன்று பல
என ஐந்து பால்கள் தமிழில் உள்ளன.

    அவை,
(1) ஆண் பால் - இவை மூன்றும் உயர்திணை
(2) பெண் பால்
(3) பலர் பால்
(4) ஒன்றன் பால் - இவை இரண்டும் அஃறிணை
(5) பலவின் பால்

• எண்
ஒன்று பல
    எண் என்பது எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
ஒன்று பல
பெண் பெண்கள்
மரம் மரங்கள்
    ஒருவர் அல்லது ஒன்று மட்டும் இருந்தால் ஒருமை (Singular) என்போம்.

    பலர் அல்லது பல இருந்தால் பன்மை (Plural) என்போம்.
எனவே எண் இருவகைப்படும். அவை,
(1) ஒருமை
(2) பன்மை

• இடம்
    திணை, பால், எண் இவற்றோடு இடம் என்பதையும் ஒரு சொல்
தரவேண்டும். இந்த இடம் மூன்று நிலைகளில் வரலாம்.

    நான் - என்றால் தன்னைத் தானே குறிப்பது.

    என், நான், நாங்கள் போன்ற சொற்கள் தன்னைப் பற்றி / தம்மைப்
பற்றிக் குறிப்பதால் தன்மை/தன்னிலை இடம் (I person) எனப்படுகின்றன.

    நீ - என்றால் முன்னால் இருப்பவரைக் குறிப்பது.

    நீ, உன், உனது, நீங்கள் ஆகிய சொற்கள் முன் நிற்பவரைப் பற்றிக்
குறிப்பன. இவை முன்னிலை (II person) எனப்படுகின்றன.

    இவன் - என்றால் தன்னையும் குறிக்காது.

    முன் நிற்பவர்களையும் குறிக்காது. எங்கோ இருப்பவரைக் குறிப்பது.
படர்க்கை (III person) இடம் எனப்படும். அவன், இவன், இவர்கள், அவர்கள்,
இவை, இவைகள். எல்லாம் படர்க்கை இடத்தில் அமைவன.

இடம் ஒருமை பன்மை
தன்மை (I person) நான் நாங்கள்
முன்னிலை (II person) நீ நீங்கள்
படர்க்கை (III person) இவன்
அவன்
இது
இவர்கள்
அவர்கள்
இவை
இவைகள்.

    இந்த அட்டவணை உங்களுக்கு இடங்களையும் எண்களையும்
தெளிவுபடுத்தும்.

• காலம் (Tense)
    இளங்கோ பிறந்தான் என்பது இளங்கோ குழந்தையாகப் பிறந்ததை
உணர்த்தும் தொடர். இது செயல் முடிந்ததைக் கூறும் தொடர் (Past tense).
எனவே இது இறந்தகாலம் எனப்படும்.

    இளங்கோ வளர்கிறான் என்பது இளங்கோ வளர்ந்து வருகின்றதை
உணர்த்தும் தொடர். இது செயல் நடந்து கொண்டிருப்பதைக் கூறுவதால்
நிகழ்காலம் எனப்படுகிறது.

    இளங்கோ ஆசிரியராக ஆவான் என்பது இளங்கோ ஆசிரியராக
ஆகப் போவதை உணர்த்தும் தொடர். இது செயல் நடக்கப் போவதைக்
கூறும் தொடர். இது எதிர்காலம் ஆகும்.

உங்கள் கவனத்திற்கு
    • செயல் முடிவு பெற்றதைக் கூறுவது இறந்தகாலம்.
    • செயல் நடைபெறுவதைக் குறிப்பிடுவது நிகழ்காலம்.
    • செயல் நடைபெறப் போவதைக் கூறும் காலம் எதிர்காலம்.

• சொல்லின் உறுப்புகள்
    சொல் எழுத்துகள் கொண்டது; பொருள் தருவது, திணை, பால், எண், இடம், காலம் உணர்த்துவது என்பது இதுவரை நாம் படித்த செய்தி.

    சொல் எழுத்துகள் கூடி அமைந்தாலும் அது பல உறுப்புகளைத்
தன்னுள்கொண்டுள்ளது.

    காய்கள்

    இந்தச் சொல்லில் 'கள்' என்பது பன்மையைக் குறிப்பது. அது காய்
என்பதோடு சேர்ந்து உள்ளது. இதனை ஓர் உறுப்பு எனலாம். அது விகுதி
எனப்படுகிறது.

    இது போல ஒரு சொல்லைப் பிரிக்க முடிந்தால் அது பகுபதம், பகுக்க
முடியும் பதம் எனப்படும். பதம் என்றாலும் சொல் என்றுதான் பொருள்.

     விகுதி போலவே பகுதி, இடைநிலை, சாரியை, சந்தி போன்ற பல
உறுப்புகள் உள்ளன. இவை பற்றி நீங்கள் அடுத்த அடுத்த வகுப்புகளில் படிப்பீர்கள்.