15. புணர்ச்சி

புணர்ச்சி

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தமிழ் இலக்கணத்தின் முதல் மூன்று பிரிவுகளாகிய எழுத்து, சொல், பொருள் பற்றிய வரையறைகள் பலவற்றை முதல் மூன்று பாடங்களில் கற்று உணர்ந்தீர்கள். சொற்கள் தனித்து வருவது ஒரு நிலை. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து (தொடர்ந்து) வருவது வேறு நிலை. அவ்வாறு சேரும்போது குறைந்த அளவாக இரண்டு சொற்கள் சேரலாம். அவ்விரு சொற்களில் நிலையாக நிற்கும் முதல் சொல்லை நிலைமொழி என்பர். பின்னர் வந்து சேரும் அடுத்த சொல்லை வருமொழி என்பர். இதனை நீங்கள் முன்னரே அறிவீர்கள். அவ்வாறு நிலைமொழியும், வருமொழியும் சேரும் சேர்க்கையில் நிகழும் மாற்றங்கள் அல்லது மாறாத அமைப்புகள் யாவும் புணர்ச்சி என்னும் இலக்கணம் ஆகும். அப்புணர்ச்சியின் சில அமைப்புகளை விளக்குவதாக இப்பாடம் அமைகின்றது.