புணர்ச்சி
பாடம்
Introduction to Lesson
வேற்றுமைப் புணர்ச்சி
பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை என்பதை நீங்கள் உணர்வீர்கள். மீண்டும் அவ்விலக்கணத்தை நினைவுபடுத்திக் கொள்ளக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்கவும்.
நிலை - I | நிலை - II |
குமரன் அடித்தான் | திருடன் தேடினான் |
குமரனை அடித்தான் | திருடனைத் தேடினான் |
இவ்விரு இணை எடுத்துக்காட்டுகளையும் எண்ணிப் பார்க்கவும்.
நிலை - I
முதல் தொடரில் அடித்தவன் குமரன். அடிப்பட்டவன் வேறொருவன்.
அடுத்தத் தொடரில் குமரன் அடிப்பட்டு நிற்கிறான். அடித்தவன் வேறு யாரோ ஒருவன்.
நிலை - II
முதல் தொடரில் திருடன் எதையோ தேடுகிறான்.
அடுத்தத் தொடரில் திருடனை யாரோ தேடுகிறார்கள்.
ஒன்றனுக்கொன்று முற்றிலுமாகப் பொருள் மாறி நிற்கிறது. இம்மாற்றத்தைச் செய்தது எது என்று புரிகிறதா?
இரண்டிலும் இரண்டாவதாக இடம் பெற்ற ஐ என்னும் உருபே பொருள் வேற்றுமைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
இவ்வாறு தொடரின் பொருளை முற்றிலுமாக வேறுபடுத்துவதே வேற்றுமை.
அவ்வாறு வேற்றுமை உருபு இடம்பெற்ற தொடரில்தான் வேற்றுமைப் புணர்ச்சி என்னும் இலக்கணமும் அமைகிறது.
வீடு + கட்டினான் = வீடு கட்டினான்
வீடு + ட் + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்.
இவ்விரு எடுத்துக்காட்டுகளில்,
முன்னது உருபு இன்றி அமைந்துள்ளது. பின்னது ஐ என்னும் வேற்றுமை உருபுடன் அமைந்துள்ளது.
இரண்டுமே வேற்றுமைப் புணர்ச்சிதான்.
ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறும் வேற்றுமைக்கான அடிப்படை உருபுகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வுருபுகள் மறைந்தும் வரலாம். வெளிப்படையாகவும் வரலாம். எப்படி அமையினும் அது வேற்றுமைப் புணர்ச்சியே ஆகும்.
கீழுள்ள அட்டவணை, இருவகையான வேற்றுமைப் புணர்ச்சிகளையும் இனிது விளக்குகிறது.
வேற்றுமை வகை | வேற்றுமை உருபு | உருபு மறைந்து வரும் புணர்ச்சி | உருபு வெளிப்படையாக வரும் புணர்ச்சி |
2 | ஐ | வீடு கட்டினான் | வீட்டைக் கட்டினான் |
3 | ஆல் | கல் அடித்தான் | கல்லால் அடித்தான் |
4 | கு | ஊர் சென்றான் | ஊருக்குச் சென்றான் |
5 | இன் | மான் தோல் | மானின் தோல் |
6 | அது | என் வீடு | எனது வீடு |
7 | கண் | மதில் பூனை | மதிலின்கண் பூனை |
குறிப்பு: முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.
அல்வழிப் புணர்ச்சி
அல்வழி என்னும் சொல்லை வேற்றுமை என்பதோடு சேர்த்துப் பொருள் காணவேண்டும். வேற்றுமை அல்லாத வழி - அல்வழி ஆகும். அதாவது, வேற்றுமைப் புணர்ச்சியாக அமையாத எல்லாப் புணர்ச்சிகளும் அல்வழிப் புணர்ச்சிகளே.
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்றுக் கவனிக்க.
இரவு + பகல் = இரவு பகல்
இளமதி + பாடினாள் = இளமதி பாடினாள்
வேலா + வா = வேலா வா
வருக + வருக = வருக வருக
பார்த்த + படம் = பார்த்த படம்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் மறைந்தோ வெளிப்படையாகவோ வேற்றுமை உருபுகள் இடம்பெறவில்லை. இவ்வாறு வேற்றுமை இன்றி அமையும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்பெறும்.
உயிரீற்றுப் புணர்ச்சி மாற்றங்கள்
புணர்ச்சியின் முதல்மொழி நிலைமொழி என்று கண்டோம். நிலைமொழியாக அமையும் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து இடம்பெறுவதை உயிரீற்றுப் புணர்ச்சி என்பர்.
கீழ்வரும் பட்டியல்கள் மூன்றும் உயிரீற்றுப் புணர்ச்சியில் நிகழும் பொதுவானச் சில மாற்றங்களை இனிது விளக்குகின்றன.
பட்டியல் - 1
பூ + கூடை = பூக்கூடை | வருமொழிக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வந்தது. |
மரம் + கிளை = மரக்கிளை | நிலைமொழியில் ம் கெட்டு உயிரீறாக மாறிப் பிறகு வல்லினம் மிகுந்து வந்தது. |
மா + பழம் = மாம்பழம் | வருமொழி வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகுந்தது. |
பட்டியல் - 2
அ + சிலை = அச்சிலை | அ என்னும் சுட்டின் பின் வல்லினம் மிக்கது. |
இ + தெரு = இத்தெரு | இ என்னும் சுட்டின் பின் வல்லினம் மிக்கது. |
எ + கடல் = எக்கடல் | எ என்னும் வினாவின் பின் வல்லினம் மிக்கது. |
பட்டியல் - 3
அ + நாடு = அந்நாடு | அ என்னும் சுட்டின் பின் மெல்லினம் மிக்கது. |
இ + மணி = இம்மணி | இ என்னும் சுட்டின் பின் மெல்லினம் மிக்கது. |
எ + மலை = எம்மலை | எ என்னும் வினாவின் பின் மெல்லினம் மிக்கது. |
உடம்படுமெய்ப் புணர்ச்சி
கலை + அரசி = கலையரசி (கலை + ய் + அரசி = கலையரசி)
பூ + அழகி = பூவழகி (பூ + வ் + அழகி = பூவழகி)
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளை நோக்கவும்.
இவை ஒவ்வொன்றிலும் இரண்டு சொற்கள் இடம் பெற்றுள்ளன.
ஒன்று நிலைமொழி ; மற்றது வருமொழி ஆகும்.
இவை இரண்டும் சேர்ந்து நிற்பது புணர்ச்சி எனப்பெறும்.
இங்கு நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் தொடக்கத்திலும் உயிர் எழுத்துகளே இருப்பதைக் காண்க.
இவ்வாறு புணர்ச்சியில் இரண்டு இடங்களிலும் உயிர் எழுத்துகளே அமைந்தால் அவை ஒன்று சேரா. (உடன்படா)
அவற்றை உடன்படுத்தி ஒன்று சேர்க்க இடையில் புதியதாக ஒரு மெய்யெழுத்து இடம் பெறும். (கலை + ய் + அரசி = கலையரசி).
இவ்வாறு உடன்படுத்த வரும் மெய்யையே உடம்படுமெய் என்பர்.
கிளி + அழகு = கிளியழகு
தீ + அணைந்தது = தீயணைந்தது
மலை + ஓரம் = மலையோரம்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளை மீண்டும் நோக்கவும்.
இவற்றில், நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னும் மூன்று உயிர் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதனால் ய் என்பது உடம்படுமெய்யாக வந்தது.
பா + ஆடை = பாவாடை
திரு + ஆரூர் = திருவாரூர்
பூ + இதழ் = பூவிதழ்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளை உற்று நோக்கவும்.
இவற்றில் வ் என்பது உடம்படுமெய்யாக வந்துள்ளது.
இவை போல அ, ஆ, எ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் எட்டு உயிரெழுத்துகளும் நிலை மொழியின் இறுதியில் நின்றால் வ் உடம்படுமெய்யாகும்.
தே + இலை = தேயிலை (தே + ய் + இலை = தேயிலை)
தே + ஆரம் = தேவாரம் (தே + வ் + ஆரம் = தேவாரம்)
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் இரண்டையும் கூர்ந்து நோக்கவும்.
இவையிரண்டிலும் நிலைமொழி இறுதியில் ‘ஏ’ என்னும் உயிரெழுத்தே இடம் பெற்றுள்ளது
எனினும் ஒன்றில் ய் உடம்படுமெய்யாகவும், மற்றொன்றில் வ் உடம்படுமெய்யாகவும் வந்துள்ளன.
இவ்வாறு ஏ என்னும் நிலைமொழி இறுதிக்கு மட்டுமே ய், வ் என்னும் இரண்டு மெய் எழுத்துகளும் உடம்படுமெய்யாக வருவது உண்டு.
கீழ்க்காணும் அட்டவணை உடம்படுமெய் பற்றிய விதிகளை விளக்கிக் காட்டுவதாக அமைகின்றது.
நிலைமொழியில் இடம் பெறும் உயிர் | வருமொழியில் இடம் பெறும் உயிர் | புதிதாகத் தோன்றும் உடம்படுமெய் |
இ, ஈ, ஐ | எந்த உயிரெழுத்தும் வரலாம். | ய் |
அ, ஆ, எ, உ, ஊ, ஒ, ஓ, ஒள | எந்த உயிரெழுத்தும் வரலாம் | வ் |
ஏ | எந்த உயிரெழுத்தும் வரலாம். | ய், வ் |
குற்றியலுகரப் புணர்ச்சி
ஆடு, அரசு, பாக்கு, பஞ்சு, மார்பு, அஃது என்னும் சொற்கள் குற்றியலுகரச் சொற்கள் என்பதை அறிவீர்கள். (இவை வல்லின உகரத்தை இறுதி எழுத்தாகக் கொண்டு அமைந்தச் சொற்கள் ; இயல்பான ஒலிப்பிலிருந்து குறுகி ஒலிப்பவை. ஆகவேதான் குற்றியலுகரம் எனப்பெற்றன)
இவை போன்ற குற்றியலுகரச் சொற்கள் முதல் சொல்லாக (நிலை மொழியாக) அமைந்து வருமொழியில் வேறு சொற்கள் வந்து சேரும். அதனைக் குற்றியலுகரப் புணர்ச்சி என்பர்.
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுளைக் கவனிப்புடன் நோக்குக.
ஆடு + இல்லை = ஆடில்லை
அரசு + இல்லை = அரசில்லை
பாக்கு + இல்லை = பாக்கில்லை
இவ் எடுத்துக்காட்டுகள் மூன்றிலும் நிலைமொழியில் குற்றியலுகரச் சொற்கள் உள்ளன. வருமொழியில் உள்ள சொற்களில் முதலில் உயிரெழுத்து வந்துள்ளது.
இவ்வாறு வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் குற்றியலுகரத்தின் உகரம் இல்லாமல் போகும். (கெடும்)
இந்த மாற்றத்தின் அடிப்படையிலேயே மேற்கண்ட புணர்ச்சி அமைகிறது.
ஆடு + இல்லை - ஆட் + இல்லை = ஆடில்லை
என்ற முறையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
பண்புப் பெயர்ப் புணர்ச்சி
பெயர்ச்சொற்கள் ஆறு வகைபெறும் என்று கண்டோம்.
அவற்றுள் ஒன்று பண்புப் பெயர் ஆகும். அதனைக் குணப்பெயர் என்றும் கூறுவர்.
செம்மை, கருமை, சிறுமை, பெருமை, நன்மை, தீமை, இளமை, முதுமை என்பன பண்புப் பெயர்கள் ஆகும்.
இவை அனைத்தும் மை என்னும் இறுதி எழுத்தைக் கொண்டு அமைந்தவை.
எனவே, இவற்றை மைஈற்றுப் பண்புப் பெயர் என்பர்.
இச்சொற்கள் நிலைமொழியாக அமைந்து வருமொழியில் வேறு சொல் வந்து சேருவதைப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி என்பர்.
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கவனித்து நோக்குக.
வெண்மை + பொங்கல் = வெண்பொங்கல்
இந்த எடுத்துக்காட்டில் பண்புச் சொல்லின் இறுதியான மை மறைந்தது. இதனை ஈறு போதல் என்பர்.
கருமை + அன் = கரு + அன் = கரி + அன் = கரியன்
இந்த எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல். அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லில் இருந்த உ- இ ஆனது (ரு- ரி ஆனது).
இதனை இடையுகரம் இ ஆதல் என்பர்.
முதுமை + உரை = முது + உரை = மூது + உரை = மூதுரை
இவ் எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல்.
அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லின் முதலில் இருந்த குறில் நெடில் ஆனது. (மு - மூ) இதனை ஆதிநீடல் என்பர்.
பசுமை + தமிழ் = பைந்தமிழ்
இவ் எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல்.
அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லின் முதலில் இருந்த அ,ஐ ஆனது. (ப - பை)
இதனை அடியகரம் ஐ ஆதல் என்பர்.
சிறுமை + ஊர் = சிறு + ஊர் = சிற்று + ஊர் = சிற்றூர்
மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல். அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லின் இடையில் இருந்த ஒற்று இரட்டித்தது. (சிறு - சிற்று)
இதனைத் தன் ஒற்று இரட்டல் என்பர்.
செம்மை + தமிழ் = செம் + தமிழ் = செந்தமிழ்
இவ் எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல். அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லின் இடையில் இருந்த ம் - ந் ஆனது. (செம் - செந்) இதனை முன்னின்ற மெய்திரிதல் என்பர்.
இளமை + குழவி = இள + குழவி = இள+ங்+குழவி = இளங்குழவி
இவ் எடுத்துக்காட்டில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று அடிப்படையானது. அது ஈறு போதல். அடுத்து நிகழ்ந்தது தனிப்பட்ட மாற்றம்.
பண்புச் சொல்லின் இறுதியில் ங் என்னும் மெல்லினம் தோன்றியது.
இதனை இனம் மிகல் என்பர்.
திசைப்பெயர்ப் புணர்ச்சி
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன முதன்மையான நான்கு திசைகளைக் குறிக்கும் சொற்கள். அவை நான்கும் நிலைமொழியாக அமைய வருமொழியில் திசைச் சொல்லோ வேறு சொல்லோ வந்து சேர்வதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என்பர்.
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.
கிழக்கு + வானம் = கீழ்வானம் | கிழக்கு என்பதில் உள்ள க், கு இரண்டும் கெட்டு கிழ > கீழ் என மாறியது. |
மேற்கு + நாடு = மேல்நாடு | மேற்கு என்பதில் உள்ள கு கெட்டு ற் > ல் என மாறியது. |
வடக்கு+ வேங்கடம் = வடவேங்கடம் | வடக்கு என்பதில் உள்ள க், கு இரண்டும் கெட்டன. |
தெற்கு + குமரி = தென்குமரி | தெற்கு என்பதில் உள்ள கு கெட்டு ற் > ன் என மாறியது. |
இவ்வாறு, நிலைமொழியில் அமைந்த திசைச்சொற்கள் சிற்சில மாற்றங்களைப் பெற்று வருமொழியோடு சேர்வதையே திசைப்பெயர்ப் புணர்ச்சி என்கிறோம்.
மெய்யீற்றுப் புணர்ச்சி
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கவனிப்புடன் நோக்குக.
புணர்ச்சிமுறை | விளக்கம் |
நூல் + ஆடை = நூலாடை | ல் + ஆ > லா என மெய்யும் உயிரும் இயல்பாகச் சேர்ந்தன. |
தாய் + பாசம் = தாய்ப்பாசம் | இடையில் வல்லினம் மிகுந்தது. |
மின் + ஒளி = மின்னொளி | நிலைமொழியில் உள்ள ன் இரட்டித்து வந்தது. |
கண் + இரண்டு = கண்ணிரண்டு | நிலைமொழியில் உள்ள ண் இரட்டித்து வந்தது. |
பொன் + சிலம்பு = பொற்சிலம்பு | நிலைமொழியில் உள்ள ன் > ற் என மாறியது. |
மண் + பாண்டம் = மட்பாண்டம் | நிலைமொழியில் உள்ள ண் > ட் என மாறியது. |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் அனைத்தும் நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்துகள் இடம் பெற்றுள்ளதை அறிக. அவை வருமொழியோடு சேரும்போது இயல்பாகவும் சிற்சில மாற்றங்களோடும் அமைகின்றன. மேற்சுட்டிய விளக்கப் பகுதி, நடைபெற்ற மாற்றங்களை இனிது விளக்குவதாகும்.
மகர ஈற்றுப் புணர்ச்சி
மகரம் என்பது ம் என்னும் மெய்யெழுத்தைக் குறிப்பதாகும்.
நிலைமொழியில் இறுதியில் மகர ஈறு இடம்பெறக்கூடிய சொற்கள் எவ்வாறு புணர்ச்சியில் மாற்றங்களைப் பெறும் என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை விளக்குகிறது.
மகர ஈற்றுப் புணர்ச்சி | விளக்கம் |
மரம் + வேர் = மரவேர் | நிலைமொழி இறுதியில் மகரம் கெட்டது. |
மரம் + கலம் > மர + கலம் > மரக்கலம் | நிலைமொழி இறுதியில் மகரம் கெட்டு வல்லினம் தோன்றியது. |
காலம் + கடந்து = காலங்கடந்து | மகர ஈறு கெட்டு வருமொழி வல்லினத்திற்கு இனமான மெல்லினமாக மாறியது. |
மரம் + அடி = மர + அடி = மர+வ் + அடி = மரவடி | நிலைமொழி இறுதி மகரம் கெட்டு உடம்படுமெய்த் தோன்றியது. |