17. அணி

அணி

பாடம்
Lesson


வகை - 1 : நிரல்நிறை அணி

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

என்னும் திருக்குறளை நீங்கள் அறிவீர்கள்.

இப்பாடலில் முதல் வரியில் அன்பு, அறன் என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. அடுத்த வரியில் உள்ள பண்பு, பயன் என்னும் இரண்டு சொற்களையும் அவற்றுக்கு இணையாக நிறுத்தி(சேர்த்து)ப் பொருள் கொள்ளவேண்டும். அப்போது, ‘அன்பு என்னும் பண்பும், அறம் என்னும் பயனும் உடையதே இல்வாழ்க்கை’ என்று பொருள் முழுமைப் பெறும்.

இவ்வாறு வரிசை வரிசையாகச் சொற்களை அமைத்துப் பொருள் கொள்வதை நிரல் நிறை அணி என்பர்.

வகை - 2 : பின்வருநிலையணி

எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

என்பது திருக்குறள் பாடல் ஆகும்.

இப்பாடலை உற்று நோக்குக.

விளக்கு என்னும் ஒரு சொல் தொடர்ந்து நான்கு முறை இடம்பெற்றுள்ளது. அதற்குரிய பொருளும் மாறாமல் அமைந்துள்ளது.

இவ்வாறு ஒரு சொல் தொடர்ந்து பின்வருவதை பின்வருநிலையணி என்பர்.

இங்கு, சொல் மட்டுமன்றி அதற்குரிய பொருளும் தொடர்ந்து வந்துள்ளது. எனவே இதனை, சொற்பொருள் பின்வருநிலையணி என்பர்.

பின்வருநிலையணி மூன்று வகைபெறும்.

1. சொல்லும் பொருளும் பின்வருதல் - சொற்பொருள் பின்வருநிலையணி.

2. சொல் மட்டும் தொடர்ந்து வருதல் - சொல் பின்வரு நிலையணி

3. சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதல் - பொருள் பின்வரு நிலையணி

வகை - 3 ஏகதேச உருவக அணி

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

என்பது திருக்குறள்.

இப்பாடலில், அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்தனையும் தூண்களாக உருவகம் செய்துள்ளார். ஆனால் அவ் ஐந்து தூண்களும் தாங்கி நிற்கும் கட்டிடம் எது என்பதை உருவகப்படுத்த வில்லை. சான்றாண்மை என்பதே அந்தக் கட்டிடம் ஆகும்.

இவ்வாறு எடுத்துக்கொண்ட இரண்டு ஒப்பீடுகளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் - ஒன்று, தேசம் - பக்கம்)

வகை - 4 : தற்குறிப்பேற்ற அணி

“. . . . . . . கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லைவா என்று அழைப்பது போன்றது”

என்பது கம்பராமாயணத்தில் இடம்பெற்ற பாடல் பகுதி ஆகும்.

இது மிதிலை நகரத்திற்கு இராமன் சென்றதைப் பற்றிக் கூறுவதாகும்.

மிதிலை நகரத்தில் உச்சியில் பறந்த கொடிகள் கைகளை நீட்டி வருக வருக என்று இராமனை அழைப்பது போல அமைந்தன என்பது கம்பரின் கற்பனை.

காற்றில் கொடி அசைவது இயல்பானது. அந்த நிகழ்ச்சியில் கவிஞர் தன் குறிப்பை (விருப்பத்தை) ஏற்றிக் கூறியுள்ளார். எனவே இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

வகை - 5 : இல்பொருள் உவமை அணி

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.

உவமை உணர்த்தும் பொருள்
பிறை கவ்வி மலை நடக்கும் யானையைப் பற்றியது
குன்று எழுந்து சென்றது வீரன் சென்ற நிலை
திங்களுள் தீ தோன்றிற்று குளிர்ச்சியில் வெப்பம்
நீருள் குவளை (மலர்) வெந்தது குளிர்ச்சியில் வெப்பம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் யாவும் நடைமுறையில் இல்லாதவை. மலை நடப்பது, குளிர்ந்த நிலவில் நெருப்பு இருப்பது, தண்ணீருக்குள் வெப்பம் தோன்றுவது என்பன இல்லாத பொருள்கள் அல்லது நடக்காதச் செயல்களாகும்.

இவ்வாறு இல்லாத பொருளை எடுத்துக்காட்டாகக் கூறுவதே இல்பொருள் உவமை அணி ஆகும்.

வகை - 6 : வஞ்சப் புகழ்ச்சி அணி

“தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்துஒழுக லான்”

இப்பாடல் அணிஅழகு உடையது.

இப்பாடலில் வஞ்சகர்கள் தேவர்களுக்கு இணையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

இது தீயவர்களாகிய வஞ்சகர்களைப் புகழ்வதுபோல் உள்ளது. ஆனால் உண்மையில் இகழ்வதே ஆகும்.

வஞ்சகர்களும் தேவர்களைப் போலவே தன்விருப்பமாக எதையும் செய்வர் என்று ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

தன்விருப்பப்படி செய்தாலும் தேவர் செயல் நன்மையைத் தரும். வஞ்சகர் செயல் தீமையைத் தரும்.

இவ்வுண்மையை உணரும்போது, வஞ்சகரைப் புகழ்ந்தது பொய் என்பது புரியவரும்.

இவ்வாறு புகழ்வதுபோலப் பழித்துள்ளதால் இதனை வஞ்சப் புகழ்ச்சி அணி என்பர்.

பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி அணியின் இன்னொரு பிரிவு ஆகும்.

பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.

என்பது புறநானூற்றுப் பாடல்.

இப்பாடல் பாரி வள்ளலுடன் மாரி என்னும் மழையை ஒப்பிடுகிறது.

பாரியை மட்டும் புகழுகிறார்களே; மாரியும் உதவுகிறதே என்பது கருத்து.

மாரி இருக்கும்போது பாரி மட்டுமே வள்ளல் என்பது பொருந்தாது என்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மேலோட்டமாக நோக்கும்போது ஒருவகை இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றலாம். ஆனால் பாரியின் கொடைத்தன்மைக்கு உலகில் ஒப்பிடக்கூடிய ஒரே பொருள் வானத்து மழைதான் என்று உணரும்போது அதுவும் ஒருவகைப் புகழ்ச்சியாகவே அமைகிறது.

இவ்வாறு பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணியே ஆகும்.

வகை - 7 : பிறிதுமொழிதல் அணி

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

என்பது திருவள்ளுவர் கூறும் அறிவுரை.

இப்பாடலில் அவர் ஒரு காட்சியை விளக்கி உள்ளார்.

மிக மென்மையான மயில் தோகை வண்டியில் ஏற்றப்பெறுகிறது.

மயில் தோகை மென்மையானதுதானே என்று கருதி அளவுக்கு அதிகமாக ஏற்றினால் என்ன ஆகும்? வண்டியின் அச்சு முறிந்துவிடும்.

இதுவே, புலவர் காட்டும் காட்சியும் கருத்தும் ஆகும்.

ஆனால், இந்த எடுத்துக்காட்டு உணர்த்தும் உண்மை வேறொன்றாகும்.

“மெலியவர் பலர் சேர்ந்தால் வலிமையானவரைக்கூட வீழ்த்திவிடுவர்” என்பதே இப்பாடல் உணர்த்தவந்த பிறிதோர் உண்மை ஆகும்.

இவ்வாறு உணர்த்தவந்த உண்மையை வெளிப்படையாகக் கூறாமல், உவமையை மட்டும் உணர்த்திச் சொல்வது பிறிதுமொழிதல் அணி எனப்பெறும்.

வகை - 8 : இரட்டுற மொழிதல் அணி

கீழ்க்காணும் பாடல் பகுதியை உற்று நோக்குக.

“ஆடிக்குடத்து அடையும்; ஆடும்போதே

இரையும்; மூடித் திறக்கின் முகம் காட்டும் . . . . .”

இவ்வரிகளைப் படித்து, பாம்பு - எள் என்னும் இரண்டனுக்கும் உரியவாறு பொருள் காணலாம்.

பாடல் பகுதி பாம்புக்கு ஏற்பப் பொருள் காணல் எள்ளுக்கு ஏற்பப் பொருள் காணல்
ஆடிக்குடத்து அடையும் படமெடுத்து ஆடும். பிறகு குடத்துள் அடங்கிக் கிடக்கும். செக்கில் ஆட்டப் பெற்று எண்ணெய்யாகிக் குடத்தில் நிறையும்.
ஆடும்போதே இரையும் படமெடுத்து ஆடும் போது ஒலிஎழுப்பும். செக்கில் ஆட்டும் போது ஓசை உண்டாகும்.
மூடித்திறக்கின் முகம் காட்டும் மூடியக் குடத்தைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும் மூடிய எண்ணெய்க் குடத்தைத் திறந்தால் அதில் நம் முகத்தைக் காணலாம்.

இவ்வாறு ஒரே பாடலின் சொற்கள் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளும்படி அமைவதை இரட்டுற மொழிதல் அணி என்பர்.

வகை - 9 : வேற்றுமை அணி

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

என்பது நாம் எல்லாரும் அறிந்த நல்ல திருக்குறள்.

இதில் தீயினால் சுடுவது, நாவினால் கடுமையாகப் பேசுவது என்னும் இரண்டு செயல்களும் ஒப்பிடப் பெற்றுள்ளன. அதேசமயம் அவற்றுக்குள்ளே வேற்றுமையும் காட்டப் பெற்றுள்ளது.

பொருள் ஒற்றுமை வேற்றுமை
தீ சுடுதல் உள்ளே புண் ஆறும் வெளியே வடு இருக்கும்
நாக்கு சுடுதல் உள்ளே துன்பம் இருக்கும் வெளியே வடு இருக்காது

இங்கு எடுத்துக்கொண்ட பொருள்கள் இரண்டுக்கும் சுடுதல் என்பது ஒற்றுமைக் கூறாகவும், உள்ளும் வெளியும் அமையும் நிலை வேற்றுமையாகவும் அமைந்துள்ளன.

இவ்வாறு அடிப்படை ஒற்றுமையுடன் - ஆனால் வேற்றுமையில் அமைவதை விளக்குவதே வேற்றுமை அணி ஆகும்.